கனடாவின் கோவிட்-19 நிவாரண முயற்சிகளில் ஒன்றாக, வீட்டுரிமையாளருக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சலுகைகளில் முக்கியமானது அடமானக் கடனைப் பின்போடுவது (mortgage deferral). விரைவில் முடிவுக்கு வரவிருக்கும் இச் சலுகை பலரைக் கடனை மீளச் செலுத்தமுடியாத நிலைமைக்கு இட்டுச் செல்லுமென கனடாவின் முக்கிய வங்கிகளில் ஒன்றான றோயல் பாங்க் தெரிவித்துள்ளது.

றோயல் பாங்க் வங்கியின் முதலீட்டுப் பிரிவு (RBC Capital Markets) தனது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய குறிப்பில், பின்போடப்பட்ட அடமானக் கடன்களில் ஐந்தில் ஒன்று மீளச் செலுத்த முடியாமல் போக வாய்ப்புண்டு எனவும் கனடிய மத்திய வங்கி கணிப்பிட்டதை விடவும் இதன் தாக்கம் பாரதூரமாக இருக்குமெனவும் றோயல் வங்கி ஆய்வாளர்கள் அறிவித்துள்ளார்கள்.

30 வருடங்களுக்கு முன்னர் கனடாவில் அடமானக் கடனை மீளச் செலுத்த முடியாமல் பலர் தமது வீடுகளை வங்கிகளிடம் ஒப்படைத்த நிலை இருந்தது. கோவிட்-19 இனால் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையினால் பாதிக்கப்பட்ட மக்கள் பலர் தமது அடமானக் கடன்களைப் பின்போட்டதனால் வரப்போகும் விளைவுகள் 30 வருடத்துக்கு முன்னர் இருந்த நிலையின் நான்கு மடங்குகள் பலமாக இருக்குமென இவ்வாய்வாளர்கள் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.

  • Post category:Money
  • Post published:October 26, 2020