veedu.com

நாமார்க்கும் குடியல்லோம்

அடுத்த 3 வருடங்களுக்குள் 1.2 மில்லியன் குடிவரவாளர்களைக் கனடா அனுமதிக்கவிருக்கிறது

கனடாவில் பணியாட்கள் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்காகவும், பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்காகவும், அடுத்த மூன்று வருடங்களுக்குள் 1.2 மில்லியன் குடிவரவாளர்களை அனுமதிப்பதற்குக் கனடா உத்தேசித்துள்ளதாக அதன் குடிவரவு அமைச்சர் மார்கோ மெண்டிசீனோ அறிவித்துள்ளார்.

கோவிட் பெருந்தொற்றுக் காரணமாகச் சீரழிந்திருக்கும் பொருளாதாரத்தைச் செப்பனிடுவதற்காக இந்நடவடிக்கை அவசியமென, தலைநகர் ஒட்டாவாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமைச்சர் மெண்டிசீனோ தெரிவித்தார்.

இதன் பிரகாரம், 2021 ஆம் ஆண்டில் 401,000 நிரந்தர வதிவாளர்களையும், 2022 இல் 411,000 பேரையும், 2023 இல் 421,000 பேரையும் அனுமதிப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

“கோவிட் பெருந்தொற்றுக்கு முதல், பொருளாதாரத்தை முன்னெடுப்பதற்கு குடிவரவை அதிகரிப்பதென்பது ஒரு மிதமீறிய செயலோ என நாம் நினைத்ததுண்டு. தற்போது அது மிகவும் அவசியமானதொன்றென்றாகிவிட்டது” என அமைச்சர் தெரிவித்தார்.

அரசாங்கம் இத் திட்டத்த நிறைவேற்றினால், 1911 ஆம் ஆண்டிற்குப் பிறகு இதுவே அதிகம் குடிவரவாளர்களை அனுமதித்த ஆண்டுகளாக இருக்கும்.

இத் திட்டத்தின்படி, 2021 இல் அனுமதிக்கப்படவிருக்கும் குடிவரவாளர்களில் 232,500 பேர் பொருளாதார வகுப்பைச் (economic class) சேர்ந்தவர்கள், 103,000 பேர் ஏற்கெனவே கனடாவில் வதிபவர்களின் குடும்ப உறவினர்கள் 59,500 பேர் அகதிகள் மற்றும் பாதுகாப்புத் தேடி வருபவர்கள், 5,500 பேர் மனிதாபிமான ரீதியில் அனுமதிக்கப்படுபவர்கள் எனக் கூறப்படுகிறது.

இதுவரை காலமும் அனுமதிக்கப்பட்ட குடிவரவாளர்களில், தொழில் நிபுணத்துவம் கொண்டவர்கள், அகதிகள் மற்றும் கனடியர்களின் உறவினர்கள் என்பதாகவே இருந்துவருகிறது.

கோவிட் காரணத்தால் எல்லைகள் மூடப்பட்டதனால் 2020 ஆம் ஆண்டிற்கென ஒதுக்கப்பட்ட 341,000 பேர்களில், இந்த ஆகஸ்ட் மாதம் வரை, 128,425 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

பண்ணைகளில் பணிபுரியும் பல தற்காலிகப் பணியாளர்கள், சுகாதாரத் துறையில் முதியோர் மராமரிப்பு, குழந்தைப் பராமரிப்பு சேவைகளுக்கென அழைக்கப்பட்ட வெளிநாட்டுப் பணியாளர் ஆகியோர் நோய்த்தொற்றுக்காளாகிப் பெருந்துன்பங்களையும், உயிரிழப்புக்களையும் எதிர்கொண்டுள்ளனர். இவர்களுக்கு நிரந்தர வதிவிடத்தைக் கொடுத்து ஏனைய கனடியர்களைப் போல வசதிகளும் செய்துகொடுக்கப்படவேண்டுமென்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கியமையும் அரசாங்கத்தின் இப் புதிய திட்டத்துக்கு காரணமாக அமைந்துள்ளது எனப்படுகிறது.

“சுகாதாரத் துறைக்கு முடிவரவாளர்கள் முக்கியமானவர்கள். முதியோர் இல்லங்களில் பணியாற்றும் முன்னரங்கப் பணியாளர்களில் நான்கு பேரில் ஒருவர் குடிவரவாளர்” என அமைச்சர் மெண்டிசீனோ தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *