Politics

அமெரிக்க வரி: கனடாவின் அதிர்ஷ்டம்

அமெரிக்க ஜனாதிபதி ட்றம்ப் நேற்று இரவு (பெப். 01) விடுத்த அதிரடி வரித்திணிப்பு அறிவித்தலின்படி தனது அயல் நாடுகளான கனடா மற்றும் மெக்சிக்கோவிற்கு 25%; சீனாவுக்கு 10% என்ற வகையில் இறக்குமதித் தீர்வைகளை அறிவித்திருக்கிறார். ஜனாதிபதியாக வருவதற்கு முன்னரே பல்வேறு வாண வேடிக்கைகளை நிகழ்த்தியவர் ட்றம்ப். ‘இவர் சும்மா வெருட்டுகிறார், பொறுத்திருந்து பார்ப்போம்’ எனப் பல பண்டிதர்கள் அப்போது கூறினார்கள். இப்போது அது நிஜமாகியிருக்கிறது.

இந்த இறக்குமதித் தீர்வையால் அமெரிக்க, கனடிய, மெக்சிக்க, சீன மக்களுக்கு எவ்வித இலாப நட்டங்கள் ஏற்படலாம் என்பதுகூட ‘பொறுத்திருந்து பார்க்கவேண்டிய’ ஒரு விடயம் தான். இத்தீர்வையால் ஒன்ராறியோ மாகாணத்தில் மட்டும் பல இலட்சம் பேருக்கு வேலை இலாமல் போகலாம் என ஒன்ராறியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் கடந்த சில வாரங்களாக வெருட்டி வந்தார். ட்றம்பைப் போலவே ‘ Onrtario is Not For Sale’ எனத் தொப்பியையும் அணிந்துகொண்டு அவர் ட்றம்ப் பாணியில் பவனி வரும்போது இவரும் ஏதோ திட்டமிடுகிறார் எனப்பட்டது. இத் தொப்பி மூலம் திடீரென அவருக்கு ஏறிய மவுசைப் பயன்படுத்தி தனது ஆட்சியை நீடிக்கும் கனவோடு அவரும் அதிரடித் தேர்தல் ஒன்றை அறிவித்திருக்கிறார்.

இப்படியான அதிரடிகள் அரசியல்வாதிகளால் தற்காலிக வெற்றிகளுக்காகப் பாவிக்கப்படும் சுய இன்ப முயற்சிகள். பெரும்பாலான தருணங்களில் இவை எதிரான விளைவுகளையே ஏற்படுத்தியிருக்கின்றன. ட்றம்பரைப் போலவே 1930 களில் ஹேர்பேர்ட் ஹூவர் என்னும் அமெரிக்க ஜனாதிபதி 20% இறக்குமதித் தீர்வையை அறிவித்து அமெரிக்க விவசாயிகளைக் காப்பாற்றப் போகிறேன் எனச் சூளுரைத்தார். ஆனால் The Great Depression என்ற பெயரில் அது அமெரிக்க பொருளாதாரத்தையே புரட்டிப் போட்டதுமல்லாது அவரையும் பதவியிலிருந்து தூக்கியெறிந்தது.

ட்றம்பர் ஜனாதிபதியாக வருவதை வரவேற்று இதற்கு முன் நான் எழுதியிருந்தேன். அதற்குப் பல முணு முணுப்புகள் கிடைத்தன. அவரின் வருகையால் அமெரிக்க ஏகாதிபத்தியம் அடிவாங்கும் அதனால் உலகம் கொஞ்சம் சுவாசிக்க இடைவேளை கிடைக்கும் என்பதுவே எனது வரவேற்புக்குக் காரணம். ஆனால் இந்த இறக்குமதித் தீர்வை விவகாரம் நான் எதிர்பார்த்ததை விட மேலும் அதிகமான நன்மைகளைத் தரப்போவதாக இப்போது நான் கருதுகிறேன்.

அமெரிக்கா உருவாகிய காலத்திலிருந்து கனடாவை அது தனது சின்னத் தம்பியாகவே கருதி வந்தது. கனடாவின் இயற்கை வளங்களை வேறெவரும் அனுபவிக்காதவாறு ‘தலையைத் தடவித்’ தன்னிடமே பாதுகாப்பாக வைத்திருந்தது. கனடிய வரியிறுப்பாளர்களின் தலைகளில் மிளகாயை அரைத்து அது தனது சுயநலத்திற்காக கனடாவைச் சுரண்டிக்கொண்டு வந்தது. அமெரிக்க – கனடிய – மெக்சிக்கோ சுதந்திர வலய ஒப்பந்தத்தின் பிரகாரம் இந்நாடுகளிடையே பண்டப் பரிவர்த்தனை பரஸ்பர பலன்களுடன் சுமுகமாக நடைபெற்று வந்தமையால் எவரும் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. இதன் பலனாக உறவு அமைதியாகவும் பலமாகவும் இருந்தாலும் அமெரிக்கப் பெரியண்ணரே கூடிய அனுகூலங்களைப் பெற்றுவந்தார். முக்கியமான விவகாரங்களில் அவரே முடிவு எடுப்பவராகவும் சின்னத் தம்பிமார் சொல்வதைக் கேட்கும் கிளிப்பிள்ளைகளாகவும் இருந்து வந்தனர். வெளியார் அச்சுறுத்தல் எதுவும் இல்லாத நிலையிலும் தமது பாதுகாப்பை பெரியண்ணர் பார்த்துக்கொள்வார் என்ற நிலையில் அவரது சலசலப்புக்களைப் பொருட்படுத்தாது இனிதே வாழ்ந்து வந்தனர். இதனால் தமது சுய தேவைகளைக் கவனிக்காது அசமந்தமாக இருந்து வந்தனர். தனது பொருளாதார மேம்பாட்டுக்குத் தேவையான மூல வளங்களை மலிவாக கனடாவிலிருந்தும், மலிவான தொழிலாளர்களை மெக்சிக்கோவிலிருந்தும் பெற்று கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்கா தன்னை ஒரு உலக நாயகனாக வளர்த்துக்கொண்டது. ட்றம்பரின் வருகையையும் அவரது முட்டாள்தனமான காரியங்களையும் பற்றி உலகம் எப்போதோ அறிந்துகொண்டு தன்னைத் தயார் நிலையில் வைத்திருந்தாலும் பெரியண்ணர் தமக்கு காலை வாரிவிடமாட்டார் எனக் கனடாவும் மெக்சிக்கோவும் நினைத்துத் தூங்கு நிலையில் இருந்தனர். இப்போ அவர்கள் விழித்துக்கொண்டு விட்டனர். மரணப் படுக்கையில் இருந்த சொந்த சகோதரர் மீதே இரக்கம் காட்ட மறுத்த ஒரு இதயமற்ற மனிதர் ட்றம்பர். ஆட்டைக் கடித்து மாட்டைக்கடித்த நிலையில் இப்போது கனடாவும் மெக்சிக்கோவும் தமது சுய அபிவிருத்தியில் அதிக கவனம் செலுத்தும் அவசியம் ஏற்பட்டிருக்கிறது. சிறிது காலம் சிரமப்பட்டாலும் எதிர்காலச் சந்ததிகளுக்கு அது அவசியமானது என்ற நினைப்பு இவ்விரு நாடுகளுக்கும் ஏற்பட்டதற்கு ட்றம்பருக்கே நன்றி சொல்ல வேண்டும்.

ட்றம்பரின் அறிபிப்பிற்கு எதிர்வினையா நேற்றிரவு கனடிய பிரதமர் ட்றூடோ பதிலடி அறிவிப்பைக் கொடுத்திருக்கிறார். அமெரிக்காவிலிருந்து கனடா இறக்குமதி செய்யும் சுமார் $155 பில்லியன் டாலர் பெறுமதியான இறக்குமதிகளுக்கு 25% தீர்வை வசூலிக்கப்படும் என ட்றூடோ அறிவித்திருக்கிறார். இன்னும் இரண்டு நாட்களில் $30 பில்லியன் பெறுமதியான இறக்குமதிப் பண்டங்களுக்கு இத்தீர்வை அமுலாக்கப்படும். மேலும் மூன்று வாரங்களின் பின் மீதமான பண்டங்கள் தீர்வைக்குள்ளாக்கப்படும்.

இத்தீர்வைக்குள்ளாகும் பண்டங்களில் சில: அமெரிக்க பியர், வைன், சில வகை விஸ்கி, பழங்கள், பழரசங்கள், மரக்கறி வகைகள், வாசனைத் தைலங்கள், ஆடைகள், சப்பாத்துகள், வீட்டுப் பாவனை உபகரணங்கள் (appliances), தளபாடங்கள், விளையாட்டு உபகரணங்கள், மரம் மற்றும் பிளாஸ்டிக் தயாரிப்புகள் உட்பட மேலும் பல பொருட்கள் அடங்கும்.

“ட்றம்ப் கூறுவதைப் போல் அமெரிக்கா ‘பொற்காலத்தில்’ நுழைய வேண்டுமாகில் கனடாவுடன் பங்காளியாகப் போகவேண்டுமே தவிர அதைத் தண்டிக்கக் கூடாது. ட்றம்பின் இந்நடவடிக்கை உங்களுக்குப் பாரதூரமான பாதிப்புகளை ஏற்படுத்தும்” என பிரதமர் ட்றூடோ அமெரிக்க மக்களுக்கு ஒரு செய்தியைச் சொல்லியிருக்கிறார். அது மட்டுமல்லாது “கனடியரும் தம் பங்கினைச் சரியாகச் செய்யவேண்டும்; அமெரிக்கத் தயாரிப்புகளுக்குப் பதிலாக நீங்கள் கனடியத் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்” என கனடியருக்கும் அவர் ஒரு வேண்டுகோளை விடுத்திருக்கிறார். இரண்டாம் உலக யுத்ததிற்குப் பிறகு இப்போதுதான் கனடியத் தேசியம் விழித்துக்கொண்டிருக்கிறது.

அல்பேர்ட்டா முதல்வரைத் தவிர ஏனைய மாகாண முதல்வர்களும், நாட்டு மக்களும் பிரதமர் பின் அணி திரள்கிறார்கள். சரிந்துபோயிருந்த அவரது செல்வாக்கு திடீரென்று உச்சம் பெறுவதுடன் அவரது கட்சிக்கான ஆதரவையும் அது மேலெழச் செய்திருக்கிறது. ட்றம்பின் அலை சிலவேளைகளில் கன்சர்வேட்டிவ் கட்சியின் சமீபத்திய அலையையே அடித்து சென்றுவிடக்கூடிய ஆபத்தை ஏற்படுத்திருக்கிறது என்கிறார்கள். பொதுமக்கள் பலர் அமெரிக்க தயாரிப்புகளைப் புறக்கணிக்கும் இயக்கங்களை ஆரம்பித்திருக்கிறார்கள்.

அல்பேர்ட்டாவின் மசகு எண்ணை இதுவரை குழாய்கள் மூலம் அமெரிக்காவிற்கே ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. மேற்குப் பக்கமாக வான்கூவர் மூலம் ஆசிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய, மானில அரசாங்கங்கள் எடுத்த முயற்சியை சுதேசிகள் நிறுத்தி வைத்திருந்தார்கள். இதனால் கனடாவின் எண்ணை வருமானம் தனியே அமெரிக்காவின் தயவிலேயே இதுவரை இருந்து வருகிறது. ட்றம்பரின் அதிரடி அறிவிப்பிற்குப் பின் சுதேசிகளின் தலைவர்கள் தாமாகவே முன்வந்து மேற்கு இணைப்புக்குழாய் திட்டத்தைத் தொடரும்படி கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

இதுவரை கனடிய மசகு எண்ணையைச் (crude oil) சுத்திகரிக்கும் நிலையங்கள் எதையும் கனடா தனது மண்ணில் நிர்மாணிக்கவில்லை. அதனால் மசகு எண்ணையை அமெரிக்காவுக்கு அனுப்பி அங்கு சுத்திகரிக்கப்பட்டபின் பெற்றோலாக நாம் வாங்கவேண்டியிருந்தது. ட்றம்பரின் அறிவிப்பின் பின் கனடா இனிமேல் தனது சொந்த சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணித்துக்கொள்ள வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன. மொத்தத்தில் ‘வாயும் வயிறும் வேறு’ என்று கனடியர்கள் உணரும் நிலைக்கு ட்றம்பர் தள்ளிவிட்டிருக்கிறார். கனடிய மத்திய அரசு உருவாக்கிய C-69 எனப்படும் வளங்களுக்கு எதிரான சட்டத்தை மீளப்பெற்று திரவமாக்கச்ப்பட்ட இயற்கை வாயு உற்பத்தி, விநியோகம் ஆஅகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் குழாய்களை அமைத்தும், சுரங்கச் செயற்பாடுகளை மீள ஆரம்பித்தும், துறைமுகங்களை அபிவிருத்தி செய்தும் கனடிய பண்டங்கள் இதர உலகச் சந்தைகளை அடையும் வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். அத்தோடு மாகாணங்களுக்கிடையேயான சுதந்திர வர்த்தக வலயமொன்றையும் ஏற்படுத்த வேண்டும்.

இதுவரை அமெரிக்காவின் பணிப்பின் பேரில் சில சீன இறக்குமதிகளுக்கு, குறிப்பாக மின் வாகனங்களுக்கு அதிக தீர்வையை வசூலிக்கப் போவதாக கனடா அறிவித்திருந்தது. இதனால் சீனாவிலிருந்து இறக்குமதியாகும் மின்வாகங்கள் ரெஸ்லா போன்ற அமெரிக்க இறக்குமதிகளூடன் போட்டி போட முடியாத நிலை இருந்தது. இனிமேல் அமெரிக்க ரெஸ்லா வாகனங்களுக்கு கனடாவில் வழங்கப்படும் ஊக்கப்பணம் நிறுத்தப்படக்கூடும் எனக் கூறப்படுகிறது.

ட்றம்பரின் இவ்வெருட்டுக்கள் எல்லாம் உண்மையில் இறக்குமதி சம்பந்தப்பட்டதல்ல, அவை வேறு விடயங்களில் கனடா, மெக்சிக்கோ போன்ற நாடுகளை இணங்க வைக்க ட்றம்பர் பாவிக்கும் ஒரு ஏமாற்று வித்தை எனச் சிலர் கூறுகிறார்கள். கொலம்பியாவில் இந்ந்டைமுறையைப் பாவித்து அவர் வெற்றிகண்டுவிட்டார் எனவும் இதன் மூலம் அமெரிக்க எல்லைகளைப் பாதுகாக்க அவர் எடுக்கும் முயற்சிகளே இவை எனவும் சிலர் நம்புகிறார்கள். கனடாவிலிருந்து ஃபென்ரனில் எனப்படும் போதை மருந்து அமெரிக்காவுக்குள் வருகிறது என்பது அவரது குற்றச்சாட்டு. அமெரிக்காவிற்குள் கொண்டுவரப்படும் ஃபென்ரனில் போதை மருந்தின் அளவு 0.2% மட்டுமே.

அடுத்த சில மாதங்கள் கனடிய மக்களுக்குச் சிரமமான ஒன்றாக இருக்கலாம். வேலை வாய்ப்புகள் இழக்கப்படலாம். கனடிய டொலரின் பெறுமதி வீழ்ச்சியால் வெளிநாட்டுப் பயணங்கள் அதிக செலவீனத்தை ஏற்படுத்தலாம். வீட்டு விலைகள் மேலும் வீழ்ச்சி காணலாம். வாழ்க்கைப் பயணம் கொஞ்சம் கரடு முரடாக இருக்க வாய்ப்புண்டு. ஆனாலும் எதிர்காலம் பிரகாசமாக இருக்குமெனவே பட்சி சொல்கிறது. Make Canada Great Again…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *