அறைகளுக்கு தரைவிரிப்பு (Flooring) – எது சரியான தேர்வு?
உங்கள் வீடுகளில் தரைகளுக்கு எப்படியான விரிப்புகளைப் போடவேண்டுமென நீங்கள் மண்டைகளைப் போட்டு உடைத்திருப்பீர்கள். பழைய வீடுகளை வாங்குபவர்கள் பலர் கைவசம் பணமிருப்பின் வீட்டில் பல மாற்றங்களைச் செய்வது வழக்கம். அதே போல சிலர் தமது வீடுகளை விற்பதற்கு முன்னர் விற்பனை முகவரின் ஆலோசனைப்படி சில முக்கியமான மாற்றங்களைச் செய்வதும் வழக்கம். எப்படியாயினும் தரை விரிப்பு (flooring) என்பது இம் மாற்றங்களில் ஒன்றாக இருப்பது வழக்கம். இந்நேரத்தில் தேவை மற்றும் நிதிக்கையிருப்பு ஆகியவற்றுக்கு ஏற்றவாறு எப்படியான தரை விரிப்புக்களைத் தெரிவு செய்வதென்பது ஒரு குடும்ப நிகழ்வாக அமைந்துவிடுவதுண்டு. இக்க்குழப்ப நிலையைத் தவிர்ப்பதற்காக அல்லது குறைப்பதற்காகவே இக் கட்டுரை.
தரை விரிப்புக்களில் பல வகையுண்டு. மேற்கத்தைய நாடுகளில் மிக நீண்டகாலமாகப் பாவனையில் இருந்து வருபவை கம்பளம் மற்றும் கடினமான சலாகைகள். கடந்த சில பத்தாண்டுகளில் வைனைல் எனப்படும் செயற்கைப் பதார்த்தங்களினால் வார்க்கப்பட்ட சலாகைகள் வெவ்வேறு அளவுகளிலும், நிறங்களிலும், விலைகளிலும் பெறக்கூடியவையாக இருந்தன. இவற்றையெல்லாம் ஒப்பீடு செய்து உங்கள் தேர்வை இலகுவாக்க முனைகிறது இக்கட்டுரை.
கம்பளம் (Carpet)
கம்பளம் பல நூறு வருடங்களாப் பாவனையிலிருந்துவரும் ஒரு தரை விரிப்பு. பேர்சியா என முன்னர் அழைக்கப்பட்ட தற்போதைய ஈரான் நாடு விலையுயர்ந்த கம்பள விரிப்புக்களுக்குப் பெயர் போனது. பின்னர் இது பல நாடுகளினதும் உற்பத்திப் பொருளாக மாறிவிட்டது.

கம்பள விரிப்புக்களில் இரண்டு பிரதான வகையுண்டு. ஒன்று வெட்டி ஒட்டப்பட்ட நூல் வளையங்களைக் (cut loops) கொண்டது. மற்றது தொடர்ச்சியான நூல் வளையங்களைக் கொண்டது (பின்னல்). வெட்டி ஒட்டப்பட்ட விரிப்புகளில் ஒரு நூல் வளையம் ஒட்டிலிருந்து பிசகுமானால் அது பெரிதாக அவதானிக்கப்பட மாட்டாது. உதாரணத்துக்கு தளபாடத்தின் ஆணி ஒன்று விரிப்பின் நூலொன்றில் சிக்கிவிட்டால் அது அக்குறிப்பிட்ட நூலை மாத்திரம் உருவி எடுத்துவிடும். இது பெரிதளவில் விரிப்பின் தோற்றத்தில் மாற்றத்தைக் கொண்டுவந்துவிடப் போவதில்லை. மாறாக தொடர் நூற்பின்னலால் செய்யப்பட்ட விரிப்புகளில் (உ+ம் Berber) ஒரு நூல் பின்னலில் இருந்து உருவப்பட்டால் அது பல அடிகள் நீளத்துக்கு வெளிப்படையாக அம் மாற்றத்தைக் காட்டிக் கொடுத்துவிடும்.
கம்பள விரிப்புக்கள் ஒப்பீட்டளவில் பாதங்களுக்கு இதமானவை, குளிர் நாடுகளில் வெப்பத்தைத் தக்கவைத்துக் கொள்வதால் மின்சாரக் கட்டணம் குறைக்கப்படுகிறது. விரிப்புகளின் பின்னல் அடர்த்தியைப் பொறுத்து அவற்றின் நிறை தீர்மானிக்கப்படும். எனவே கம்பள வியாபாரிகள் தமது விரிப்புகளின் தகமைகளையும் விலைகளையும் குறிப்பிடும்போது ‘இத்தனை பவுண்ட்’ என அவற்றின் நிறைக்கேற்றபடி விலைகளைக் கூறுவார்கள். ஒரு குறிப்பிட்ட பரப்பளவு விரிப்பின் நிறை எதுவோ அதையே குறிப்பிடுவார்கள். நிறை கூடக்கூட அடர்த்தியும் கூடும். இதனால் பாதங்களுக்கு அவை இதமாக இருக்கின்றன. (Image Credit: naren-morum-6Cd8xJ4sIBw-unsplash.jpg)
இன்னுமொரு விடயம், இவ்விரிப்புத் தயாரிப்பில் பாவிக்கப்படும் நூலின் தரம். இயற்கை நூல்களில் பின்னப்படும் கம்பளங்களுக்கு விலை அதிகம். செயற்கையான நைலோன் போன்ற பதார்த்தங்களில் பின்னப்படும் விரிப்புகள் விலை குறைவு என்பதோடு நீண்டகால பாவனைக்கும் உதவிசெய்யும்.
எல்லாவிதமான கம்பள விரிப்புக்களும் பாவனையைப் பொறுத்து நுண்ணிய துணிக்கைகளை உதிர்ப்பது வழக்கம். இத்துணிக்கைகள் மனிதரின் நுரையீரலுக்குள் சிக்கி சுகாதாரத்துக்குத் தீங்குகளை விளைவிப்பதுமுணடு. பலவித இரசாயனப் பதார்த்தங்களின் கூட்டினால் செய்யப்படும் செயற்கை இழைகளிலான விரிப்புக்களில் இருந்து இப்படியான துணிக்கைகள், குறிப்பாக தரை சூடாக இருக்கும்போது வெளிப்படுத்தப்படுவது வழக்கம். இத் துணிக்கைகள் சிலருக்கு ஒவ்வாமை தொடர்பான வியாதிகளை (allergic reactions) த் தோற்றுவிப்பதுமுண்டு. இத் துணிக்கைகள் யன்னல் ஓரங்களில் தூசிகளாகப் படிவதுமுண்டு. Beber போன்ற கம்பள விரிப்புக்களில் இருந்து இப்படியான தூசிகள் எஉவது குறைவு எனினும் பொதுவாக அனைத்து விரிப்புகளிலுமிருந்தும் நுண் துணிக்கைகள் வெளியேறுவது வழக்கம்.
கம்பள விரிப்புக்களின் இன்னுமொரு தீமை அவற்றின் பராமரிப்பு. வீட்டின் சமையல் மணத்தை இவை உறிஞ்சி வைத்திருப்பதால் இவ்விரிப்புக்களை அடிக்கடி கழுவிப் பராமரிக்க வேண்டும். சிலவற்றில் சாயங்கள் ஊற்றுப்பட்டாலும் இதே நிலைமை. எல்லாச் சாயங்களும் முற்றாக அகற்றப்படுமென்பதற்கில்லை. இக் காரணங்களுக்காக சமீப காலங்களில் கம்பள விரிப்புக்களைத் தேர்வு செய்வது குறைந்து வருகிறது.
கடின சலாகைகள் (Hardwood Flooring)



பல தசாப்தங்களுக்கு முன்னரே அறிமுகமான இச்சலாகை விரிப்புக்கள் இரண்டு முக்கிய வடிவங்களில் அறிமுகமாயின. ஒன்று சதுர வடிவங்களில் அடுக்கிப் பன்ன வேலைகளில் போல நிலத்தில் பசை போட்டு ஒட்டப்படும் parquet floors. சீமந்தினாலான நிலங்களைக் கொண்ட தொடர்மாடிக் கட்டிடங்களில் இவ்வகையான விரிப்புகள் சிபார்சு செய்யப்படுவது வழக்கம். குறுக்கும் நெடுக்குமாக அடுக்கப்படும் இந்நில விரிப்புகள் நடக்கும்போது அதிகம் ஒலி எழுப்புவதில்லை என்பதற்காகவும் இதைப் பலர் தேர்வு செய்தார்கள். நீண்டகாலப் பாவனைக்கு உகந்தவையாக இருந்தாலும் தண்ணீர் மற்றும் பதார்த்தங்கள் கொட்டுப்படும்போது இவை இலகுவாகக் கழன்றுபோகக் கூடியவை என்பதால் பலர் இதைத் தெரிவு செய்வதில்லை. இருப்பினும் பல பழைய தொடர்மாடிக் கட்டிடங்களில் இது இப்போதும் காணப்படுகிறது. வீடுகளில் இதன் பாவனை வெகுவாகக் குறைவு.
நீளச் சலாகைகலினால் (strip hardwood) நிர்மாணிக்கப்பட்ட தரை விரிப்புகள் அவற்றின் தரங்களுக்கேற்ப பல விலைகளிலும் கிடைக்கிறது. ஓக் (oak) மரத்திலிருந்து சீவியெடுக்கப்பட்ட சலாகைகள் மிகவும் பிரபலமானவை. இச்சலாகைகள் பெரும்பாலும் கீழேயுள்ள ஒட்டுப்பலகையில் வைத்து கிளிப்புகள் போன்ற சிற்றாணிகளால் பிணைக்கப்படுவது வழக்கம். எப்படியாயினும் நீண்ட காலப் பாவனைக்குப் பின்னர் இவை நடக்கும்போது ஒலிகளை எழுப்புவது வழக்கம். இதற்கு இன்னுமொரு காரணம் வீடு குளிர் / வெப்பம் எனக் க் ஆலநிலை மாற்றங்களினூடு மாற்றமடையும்போது அதன் கட்டுமானப் பொருட்கள் தமது பிணைப்புகளிலுருந்தும் நெகிழ்ந்துவிடுவதனால் இவ்வொலிகளை எழுப்பவாரம்பிக்கின்றன. இதற்காக வீட்டின் வெப்பநிலையை எப்போதும் சீராக வைத்திருப்பது அவசியமெனச் சொல்வார்கள். (Image Credit:ave-calvar-oJnIxxSpCCE-unsplash.jpg)
கடின தாவரச் சலாகைகளை வாங்கும்போது கவனிக்கப்படவேண்டிய ஒரு விடயம் அவை எந்நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன என்பது. வெப்ப வலய நாடுகளில் வளர்ந்த மரங்கள் குளிர்நாடுகளில் (குளிர் காலங்களில்) சுருங்கிவிடுவதால் தரை விரிப்பில் இடைவெளிகள் உருவாகும். பின்னர் வெப்பமான காலத்தில் இவை விரிவடைவதும் வழக்கம். அதே போல வீட்டில் ஈரப்பதன் அதிகமாக இருக்கும்போதும் சில பலகைகள் வித்தியாசாமான சுருக்க / விரிவுகளுக்குள்ளாகின்றன. குளிர்நாடுகளில் வளர்ந்த மரங்களிருந்து வெட்டப்பட்ட சலாகைகளே குளிர்நாடுகளுக்கு நல்லது.
தாவரங்களை வெட்டி இப்பலகைகளைச் செய்வது இயற்கையை அழிப்பதாகும் எனக் கருதும் சூழலியலாளர்கள் இச்சலாகைகளுக்கு மாற்றாக மூங்கில் பலகைகளையும், செயற்கையாக வார்க்கப்பட்ட சலாகைகளையும் பரிந்துரைக்கிறார்கள். மூங்கில்கள் மிகவிரைவில் முளைத்து வளர்ந்துவிடுவதால் இயற்கைக்கு அதிகம் பாதிப்பில்லை என்பது அவர்களது வாதம். மூங்கில் சலாகைகள் மிகவுமிறுக்கமான நார்களினால் உருவாக்கப்பட்டவையாகையால் அவை மிகவும் கடினமானவை. இதனால் பராமரிப்புக்கும் இது இலகுவானது.
செயற்கையாக வார்க்கப்பட்ட (engineered floor) பலகைகள் விலையில் மலிவாகவும் கடினமானவையாகவும் இருப்பதோடு விதம் விதமான வர்ணங்களில், தோற்றங்களில் கிடைக்கின்றன என்பதனால் பல்ரது விருப்பன தேர்வுக்குரிய ஒன்றாகவும் இது இருக்கிறது. செயற்கையான இரசாயன பதார்த்தங்களைக்கொண்டு தயாரிக்கப்படும் இச்சலாகைகள் வீடு அதிக வெப்பமாக இருக்கும்போது அவை செய்யப்பட்ட இரசாயன பதர்த்தங்களின் ஆவிகளை வெளிவிடுவது வழக்கம். இதனால் சிலருக்கு ஒவ்வாமை, தலைவலி, சுவாசக் கோளாறுகள் போன்றவை ஏற்படச் சாத்தியங்களுண்டு.
லமினேட் ஃபுளோறிங்க் (Laminate Flooring)



இவற்றைவிட லமினேட் ஃபுளோறிங் (Laminate Flooring) என்றொரு தரைவிரிப்பு சமீப காலங்களில் மிகவும் பிரபலமாக இருக்கின்றது. செயற்கை நார்களினால் செய்யப்பட்ட கடினமான வார்ப்புகளின்மீது விதம் விதமான வர்ணங்களில் கடினமான பூச்சுக்களைச் செய்து அழகான சலாகைகளாக இவை தயாரிக்க்ப்படுகின்றன. பராமரிப்பு மட்டுமல்லாது இவற்றை இணைப்பதும் மாற்றிக்கொள்வதும் மிகவும் இலகுவானது எனபதாலும் மலிவான விலைகளில் கிடைப்பதாலும் திருத்த வேலைகளைச் செய்பவர்கள் மத்தியில் இது பிரபலமாக இருக்கிறது. பாதங்களுக்கு இதமாக இருப்பதில்லை என்பதும் இலகுவாக உடைந்துபோகக்கூடியது என்பதும் இதிலுள்ள குறைபாடுகள் எனினும் தனித்தனி சலாகைகளாக இவை மாற்றீடு செய்யப்படலாமென்பதனால் பலரும் இத்வற்றை விரும்புகின்றனர். இவை பிளாஸ்டிக் வகையைச் சேர்ந்தவை என்பதால் மீள்சுழற்சி செய்யப்பட முடியாதவை என்பதனால் சூழலுக்கு நட்பானவை அல்ல. (Image Credit: tile-merchant-ireland-WIIEiAC-CAg-unsplash.jpg)
அடுத்து சமையலறை, குளியலறை நில விரிப்புகள்….