அடமானம்

ஒன்ராறியோவில் அடமானக் கடன்: மீளச் செலுத்தாமை 135% த்தால் அதிகரிப்பு!

கடன்களை மீளச் செலுத்துவதில் கனடியர்கள் அதிகம் சிரமப்படுகிறார்கள் என நுகர்வோர் மதிப்பீட்டு நிறுவனமான (credit rating agency) Equifax Canada தெரிவித்துள்ளது. அடமானம் மற்றும் இதர கடன்களுக்கான மாதாந்தக் கட்டுப்பணத்தை மீளச் செலுத்துவதில் தாமதம் அல்லது தவிர்ப்பு என்பது கடந்த வருடத்தின் நான்காவது காலாண்டில் (Q4/2023) அதிசயிக்கத்தக்க அளவு உயர்ந்திருக்கிறது என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒன்ராறியோ மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணங்களில் வதியும் இளையவர்கள் மத்தியில் இது மிக அதிகமாக இருப்பதாக அந்நிறுவனம் கூறுகிறது.

கனடியர்கள் மத்தியில் கடந்த காலாண்டில் மாத்திரம் அடமானக் கடனை மீளச் செலுத்துவதைத் தவிர்ப்பது 52.3% அதிகரித்திருக்கிறது. இதர கடன்களை மீளச் செலுத்துவது 28.9% தவிர்க்கப்பட்டிருக்கிறது. 2022 இன் கடைசிக் காலாண்டுடன் ஒப்பிடுகையில், ஒன்ராறியோவில் மாத்திரம் இது அடமானத்தில் 135% த்தாலும் இதர கடன்களில் 34.8% தாலும் அதிகரித்துள்ளது.

“இருப்பினும் பல அடமானக்கடன்கள் மீள் புதுப்பிக்கும் காலம் அண்மிக்கையில் வீட்டுச் சொந்தக்காரர்கள் மித மிஞ்சிய துன்பங்களை அனுபவிக்ககூடிய சாத்தியங்கள் உண்டு” என எக்குயிஃபாக்ஸ் நிறுவனத்தின் ஆய்வாளர் றெபெக்கா ஓக்ஸ் தெரிவித்துள்ளார். 2020 இல் அதி குறைந்த வட்டி வீதத்தில் அதி கூடிய கடன்களைப் பெற்றவர்கள் 4 அல்லது 5 வருடங்கள் முடியும்போது அக்கடன்களை அதிக வட்டி வீதத்தில் புதுப்பிக்கவேண்டி ஏற்படுகிறது. இதனால் அவர்களது மாதாந்த கட்டுப்பணம் அதிர்ச்சி தருமளவில் பன்மடங்குகளால் அதிகரிக்க வேண்டி ஏற்படலாம். குறிப்பாகச் சிலர் ஏற்கெனவே தம்வசமுள்ள வீட்டை வைத்து மீளடமானம் (re-mortgage) பெற்று இரண்டாவது வீட்டை வங்கியிருப்பின் இரண்டு வீடுகளினதும் அடமானங்கள் புதுப்பிக்கப்படும்போது இச்சிக்கல் பன்மடங்காக அதிகரிக்க்கும் சாத்தியமும் உண்டு. 2020 இற்குப் பின்னர் வீடுகளை வாங்கிய பல இளைய சந்ததியினருக்கு இது புதிய அனுபவமாக இருப்பதனால் அவர்களால் இச்சுமைகளை இலகுவில் எதிர்கொள்ள முடியாமல் இருக்கிறது.

36 வயதுக்குக் குறைந்தவர்கள் எனக் கருதப்படுபவர்களே இங்கு ‘இளைய சந்ததியினர்’ என வர்ணிக்கப்படுபவர்கள். இவர்கள் தமது அடமானம் மற்றும் இதர கடன்களுக்கான மாதாந்த கட்டுப்பணங்களைத் தாமதமாகச் செலுத்துவதும், கட்டத் தவறுவதும், கடனட்டைகளை ‘நிரம்பு நிலையில்’ வைத்திருப்பதும் கோவிட் காலத்தை (2019) விட இப்போதுதான் மிக மோசமாக அதிகரித்திருக்கிறது என்கிறது இந்நிறுவனம். (Photo by Precondo CA on Unsplash)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *