ஒன்ராறியோ தேர்தல் 2025: எமது கருத்து
இன்னும் நான்கு நாட்களில் ( Feb 27, 2025) ஒன்ராறியோ மாகாணத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. பெரும்பாலான தமிழர்கள் இம்மாகாணத்தில் வதிகிறார்கள் என்பதனால் இத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் கொள்கைகள், விஞ்ஞாபனங்கள், அக்கட்சிகளின் தலைவர்களின் ஆளுமைகள் பற்றி ஒரு சிறு ஒப்பீடு.
இத் தேர்தலில் நான்கு பிரதான கட்சிகள் போட்டியிடுகின்றன. இவற்றில் டக் ஃபோர்ட் தலைமையிலான புறோகிறெஸ்ஸிவ் கன்சர்வேட்டிவ் கட்சி (PC) 2018 முதல் ஆட்சியில் இருக்கிறது. ஒன்ராறியோ தேர்தல் சட்டத்தின்படி, நான்காவது வருட ஆட்சியின்போது ஜூன் மாதத்தில் வவரும் முதலாவது வியாழக்கிழமை அன்று தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமெனபது விதி. ஆனால், மத்திய அரசின் தேர்தல்களைப் போலவே, மாநில முதல்வர் விரும்பினால் ஆளுனரின் அனுமதியுடன், இந்நாளுக்கு முதல் எப்போவாவது ஆட்சியைக் கலைத்துவிட்டு திடீர் தேர்தலை நடத்திக் கொள்ள முடியும். அதன் பிரகாரம் தற்போதைய முதல்வர் ஃபோர்ட் பெப் 27 அன்று தேர்தல்களை நடத்தப்போவதாக ஜனவரி 24, 2025 அன்று அறிவித்திருந்தார்.
தற்போதுள்ள கட்சிகளின் ஆசனங்கள்: PC: 83, NDP: 31, LIB: 8 Green: 1 Independent: 1. அதிக ஆசனங்களைப் பெற்று தனது நிலையைப் பலப்படுத்துவதற்காக முதல்வர் டக் ஃபோர்ட் இந்த திடீர் தேர்தலை அறிவித்தாரென அவரே கூறுகிறார். இருப்பினும் அவரது இந்த அறிவிப்பிற்கான முக்கிய காரணம் தெற்கே அமெரிக்காவில் புதிய ஜனாதிபதி ட்றம்ப் ஜனவரியில் ஆட்சிக்கு வந்ததும் அறிவித்த இறக்குமதித் தீர்வை. கனடாவின் ஏற்றுமதிகளுக்கு 25% வரி அறவிடப்படுமென அறிவித்தவுடன் இதனால் பெருமளவு பாதிக்கப்படப் போகும் மாகாணங்களில் ஒன்ராறியோ முன்னணியில் இருக்கிறது. இதனால் சுமார் 500,000 பேருக்கு வேலை இல்லாமற் போகலாம்: பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப்படலாம்; வரவு செலவுத் திட்டத்தை சமன் செய்ய முடியாமற் போகலாம். இவையெல்லாம் நடைபெற்றதன் பின்னர் தேர்தலை நடத்தினால் தோல்வியைத் தழுவுவதற்கான சாத்தியங்களே அதிகம். அதனாலேயே தீர்வை நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்னர் இந்த அறிவிப்பு.
அது மட்டுமல்லாது, மத்தியில் பிரதமர் ட்றூடோவும் லிபரல் கட்சியும் உள் முரண்பாடுகளில் சிக்கிச் சிதறிக்கொண்டிருந்தபோது இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து ஒன்ராறியோ முதல்வர் களத்தில் இறங்கி கனடாவின் தலைமைத்துவததை எடுத்தமையும் ட்றம்பிற்கு எதிராகவும் இணையாகவும் நின்று நாட்டுக்கும் மக்களுக்கும் உத்வேகத்தைக் கொடுத்தமையும் அவரது செல்வாக்கைப் பெருமளவு உயர்த்தியிருந்தது. இச்சந்தர்ப்பத்தை நழுவ விடாது அவர் தேர்தலில் குதித்தமை புரிந்துகொள்ளக்கூடியது.
மற்றுமொரு முக்கிய காரணம், பாரம்பரியமாக மத்தியில் ஆட்சியமைக்கின்ற கட்சி கன்சர்வேட்டிவாக இருக்கும்போது ஒன்ராறியோவில் லிபரல் கட்சி ஆட்சியமைப்பதுவே வழக்கம். கருத்துக்கணிப்புகள் சரியானால் மத்தியில் அமையப்போகும் அடுத்த அரசு கன்சர்வேட்டிவ் அரசாகவே இருக்குமெனப்படுகிறது. அவர்கள் ஆட்சியியில் இருக்கும்போது ஏதாவது குளறுபடிகளைச் செய்தால் அது ஓன்றரை வருடங்களுக்குப் பின்னர் நடக்கப்போகும் ஒன்ராறியோ தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியைப் பாதிக்கும். இதுவும் டக் ஃபோர்ட்டின் திடீர் தேர்தல் அறிவிப்பிற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.
கட்சிகளின் தற்போதுள்ள நிலைமை
இத் திடீர் அறிவிப்பினால் எதிர்க்கட்சிகள் அதிர்ச்சியடைந்துள்ளன. தேர்தலுக்கு ஒரு மாதமே இருக்கின்ற நிலையில் அவர்களுக்கு நிதி சேகரிப்பு, வாக்காளர் பதிவு, கொள்கை விளக்கக் கூட்டங்களை நடத்துதல் போன்றவற்றுக்கு அதிக கால அவகாசமில்லை என்பது ஒரு அங்கலாய்ப்பு. கடந்த ஒரு வருடத்தில் கட்சிகள் சேகரித்த நிதி: PC: $11 மில்லியன்; LIb: $ 2.6 மில்லியன்; NDP: $ 2.54 மில்லியன்; Green: $ 1.2 மில்லியன். இவ்விடயத்திலும் டக் ஃபோர்ட் முன்னணியில் இருக்கிறார்.
இறுதியாக நடந்த கருத்துக் கணிப்பில் வாக்காளர் விருப்பு: PC: 46%; Lib: 25%; NDP: 21% Green: 8%
கட்சிகளின் கொள்கைகள்:
நான்கு கட்சித் தலைவர்களும் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை அறிவித்திருக்கிறார்கள். இதன்படி, கல்வி, வீடமைப்பு, சுகாதாரம் ஆகிய மூன்று அம்சங்கள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன. ஒன்ராறியோ மாகாணத்தில் நிலவும் குடும்ப வைத்தியர் பற்றாக்குறையை நீக்குவது தமது தலையாய கடமை என என்.டி.பி. , லிபரல் கட்சிகள் தெரிவித்துள்ளன. இப்பற்றாக்குறை பெரும்பாலும் கிராமப்புற மக்களையே பாதிப்பதாலும் அவர்களது வாக்குப்பலம் பொதுவாகக் குறைவாகவே இருப்பதனாலும் இக் கொள்கை அவர்களுக்கு எதிர்பார்க்கும் அனுகூலங்களைத் தருமென எதிர்பார்க்க முடியாது.
கல்வியைப் பொறுத்தவரையில் பாடசாலைகள் பராமரிப்பின்றிக் கைவிடப்பட்ட நிலையில் இருப்பதும் ஆசிரியர் பற்றாக்குறை, மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படாமை போன்ற விடயங்களில் தாம் அதிக கவனம் செலுத்துவோம்; நிதி ஒதுக்கீடுகளைச் செய்வோம் என அனைத்துக் கட்சிகளுமே அறைகூவல்கள் விடுத்துள்ளன. வீடமைப்பைப் பொறுத்த் வரையில் லிபரல் கட்சி முன்வைக்கும் நான்கு மாடிக் கட்டடங்களை எழுப்புவதர்கான சட்ட மாற்றம் ஓரளவுக்கு கவனம் பெற்று வருகிறது. தற்போதுள்ள ஒன்ராறியோ சட்டத்தின்படி ஒரு குடியிருப்புக் காணிக்குள் தனி வீடா, தொடர் மாடிக் கட்டிடமா கட்ட முடியும் என பலவிதமான வரையறைகள் உல்ளன. இதைக் கொஞ்சம் தளர்த்தி செறிவான குடியிருப்புகளை நிர்மாணிக்கும் திட்டத்தை லிபரல் கட்சித் தலைவ் பொணீ குறொம்பி பரிந்துரைக்கிறார். ஆனால் ஒன்ராறியோ நகர்ப்புறங்களில் நிலவும் வீட்டுப் பற்றாக்குறைக்கு காரணம் மத்திய அரசின் கொள்கைகளே. இது பற்றி கட்சித் தலைவர்கள் ஒருவரும் அபிப்பிராயம் தெரிவிக்கவில்லை.
வெளிநாட்டு மாணவர் வருகை கட்டுப்படுத்தப்பட்டதால் ஒன்ராறியோ மாகாணத்தின் உயர் கல்வி நிலையங்கள் பல இழுத்து மூடப்படும் நிலைமையுள்ளது. அவர்களின் கொழுத்த கட்டணங்களால் கவரப்பட்ட கல்லூரிகள் உள்ளூற் மாணவரை உதாசீனம் செய்து வந்தமை வாக்காளர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து லிபரல், என்.டி.பி. கட்சிகள் இம்மாணவர்களின் உள்ளெடுப்பை 10%, 20% உச்சவரம்பிற்கு கொண்டுவரவிருப்பதாகக் கூறியிருக்கிறார்கள்.
மக்கள் விருப்பு
ஜனாதிபதி ட்றம்பின் இறக்குமதித் தீர்வையால் ஒன்ராறியோ மாகாணம் மிகுந்த பொருளாதாரப் பாதிப்பிற்குள்ளாகப் போவது திண்ணம். இதனால் பலருக்கு வேலைகள் இல்லாமற் போகவும் வாய்ப்புகளுண்டு. ட்றம்பின் தீர்வை அறிவிப்பை உடனடியாகக் கையிலெடுத்து அமெரிக்க பண்டங்களைப் புறக்கணிக்கும் இயக்கத்தை முதலில் ஆரம்பித்தவர் என்ற வகையில் – அது வெறும் கொக்கரிப்பாக இருந்தாலுன்ஹ்கூட – டக் போர்ட் ஆபத்பாந்தவனாகப் பார்க்கப்படுகிறார். இவ்விடயத்தில் ஏனைய தலைவர்கள் சோடை போய்விட்டனர்.
நகர்ப்புற மக்கள் மத்தியில் இன்னுமொரு விடயமும் கட்சித் தேர்வை முன்னிலைப்படுத்தலாம். அது இங்குள்ள குடிவரவாளரின் வாக்குகள். பாலஸ்தீன – இஸ்ரேல் விடயத்தில் லிபரல் கட்சித் தலைவி பொணி குறொம்பி தவிர்ந்த ஏனைய கட்சித் தலைவர்கள் சித்தாந்த ரீதியாக அழுத்தங்களுக்கு சோரம் போய்விட்டிருந்தார்கள். குறிப்பாக என்.டி.பி.கட்சித் தலைவி மறிட் ஸ்ரைல்ஸ், அக்கட்சியின் அறம் சார்ந்த நிலைப்பாட்டுக்கு எதிராகச் செயற்பட்டிருந்தார். டக் ஃபோர்ட்டிடம் இதை ஓரளவு எதிர்பார்க்கக்கூடியது தான். இவ்விடயத்தில் இம்மானிலத்தில் வாழும் பெரும்பாலான முஸ்லிம் மக்களும், பாலச்தீனிய ஆதரவாளர்களும் லிபரல் கட்சிக்கு வாக்களிக்கக்கூடும். ஆனால் கிராமப்புற மக்கள் இவ்விடயத்தில் பெரிதும் அக்கறை கொள்ளாதவர்கள் என்ற ரீதியில் இப்பிரதேசங்களில் டக் ஃபோர்ட்டுக்கே ஆதரவு அதிகம் இருக்கும்.
சுற்றுச்சூழல் பற்றிய விடயங்களில் அனைத்துக் கட்சிகளுமே கொஞ்சம் உக்கிரம் குறைந்தவையாக இருப்பது ஓரளவு எதிர்பார்க்ககூடியதே. ட்றம்ப்பின் தீர்வை விடயத்துடன் ஒப்பிடும்போது கார்பன் வரி போன்ற விடயங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கும், நிறுவனங்களுக்கும் அதிக சுமையைக் கொடுக்கின்றன. புதிய மத்திய லிபரல் கட்சித் தலைவராக வர்ப்போகும் மார்க் கார்ணி கூட கார்பன் வரி விடயத்தில் பின்வாங்கவேண்டி ஏற்படும். இப்படியான முற்போக்கு கொள்கைகளுக்கு அடுத்த 10 வருடங்களுக்கு வரவேற்பு இருக்குமென்று சொல்ல முடியாது.
டக் ஃபோர்ட் எதிர்பார்ப்பது போல பலமான ஆட்சியை அவரிடம் கொடுப்பது ஆபத்தானதாகவே அமையும். முன்னாள் கன்சர்வேட்டிவ் முதல்வர் மைக் ஹரிஸ் போன்று டக் ஃபோர்ட்டும் வியாபாரிகளின் உற்ற நண்பன். ட்றம்ப் என்ற பூதாகாரமான பூச்சாண்டியைக் காட்டித் தனது சாகசங்களைச் செய்துகொள்ளக்கூடிய வாய் வல்லமை அவரிடம் இருக்கிறது. மாறாக பொணி குறொம்பி ஒரு மாநகர மேயராக இருந்தவர். துணிச்சல் மிக்கவர் எனப் பெயர் பெற்றவர். அவருக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கப்படுவது நல்லது எனவே நாம் கருதுகிறோம்.



