Education

ஒன்ராறியோ: மாகாணக் கல்விக்கூடங்களில் செல் ஃபோன் தடை

அடுத்த வாரம் ஆரம்பிக்கவிருக்கும் ஒன்ராறியோ பாடசாலை தவணையின்போது முன்பள்ளி முதல் 6 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள், நாள் முழுவதும் தமது செல் ஃபோன்களை செயலிழக்கியோ அல்லது வகுப்பிலிருந்து எட்டாத தூரத்தில் வைத்திருக்கவோ வேண்டுமென்ற சட்டமொன்றை ஒன்ராறியோ மாகாண கல்வி அமைச்சர் ஜில் டன்லொப் கட்டளையிட்டுள்ளார். இருப்பினும் மருத்துவ மற்றும் அவசிய தேவை ஏற்படின் ஆசிரியரின் அனுமதியுடன் மாணவரொருவர் வகுப்பில் செல் ஃபோனை வைத்திருக்க அனுமதியுண்டு.

7 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் வகுப்பறைகளுக்கு வெளியே பாடசாலை வளாகத்தில் செல் ஃபோன்களைப் பாவிப்பதற்கு அனுமதியுண்டு. பாடசாலையின் இக்கட்டளையை மீறுபவர்கள் கட்டாயத்தின் பேரில் தமது செல் ஃபோன்களை வகுப்பறையிலுள்ள பாதுகாப்பானதொரு இடத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். இதற்கும் மாணவர்கள் இணங்காத பட்சத்தில் அவர்கள் தலைமை ஆசிரியின் அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்படுவார்கள்.

கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட ஒன்ராறியோ மாகாணத்தின் இப் புதிய சட்டம் புதிய கல்வியாண்டில் நடைமுறைக்கு வருமென அறிவிக்கப்பட்டிருந்தது. இச்சட்டத்தின்படி பாடசாலை வலையமைப்பு மற்றும் செல் ஃபோன்களிலிருந்து சமூக வலைத் தளங்கள் நீக்கப்பட்டுள்ளன. கற்பிக்கப்படும் கல்வித் திட்டத்தின்படி செல் ஃபோன் பாவனையின் தேவையேற்படும் பட்சத்தில் அதன் அனுமதி மாணவர்களுக்கு வழங்கப்படும்.

இவ்விடயம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டன்லொப், ” நானும் ஒரு ஆசிரியராக இருந்தவள் தான். வகுப்பறையில் இந்த செல் ஃபோன்கள் மாணவர்களது கற்கையையும் அவதானத்தையும் குழப்புவதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களின் கவனக்குவிவையும் இவை குழப்புகின்றன. இதனால் இக்கருவிகளை அகற்றி மாணவர்களும் ஆசிரியர்களும் சிறப்பான பெறுபேறுகளைப் பெற நாங்கள் வழி செய்திருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

இவ்விடயம் பற்றி மாகாண அரசு பாரிய விளம்பர முயற்சிகளை மேற்கொள்ளவிருக்கிறது. ஆனாலும் இச்சட்டத்தை எப்படி பிரயோகிப்பது என்பதை அந்தந்த கல்விச்சபைகளிடம் விட்டுவிட அரசு தீர்மானித்துள்ளது. ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் இச்சட்டம் எப்படி அமுல் செய்யப்படவேண்டுமென்பதை அதன் தலைமை ஆசிரியர் தீர்மானிப்பார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *