Politics

ஒன்ராறியோ மாகாணத் தேர்தல்: நன்கொடை தரும்படி மிரட்டியதாக கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர் மீது குற்றச்சாட்டு!

ஒன்ராறியோ மாகாணத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று நடைபெறுகிறது. இதில் போட்டியிடும் கட்சிகளில் டக் ஃபோர்ட் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றியீட்டக்கூடிய நிலையில் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இரண்டாமிடத்துக்கான போட்டியில் லிபரல் மற்றும் என்.டி.பி. கட்சிகள் ஏறத்தாழ சமநிலையில் இருக்கின்றன.

இந்நிலையில் ஹமில்டன் மத்தி தொகுதியில் போட்டியிடும் ஸேறா பொக்காரி எனப்படும் கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளர் நன்கொடையாளர் ஒருவருடன் பணம் கேட்டு மிரட்டிய ஒலித்துண்டு ஒன்று பற்றி பெரும்சமூக ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

தொழில் முகவர்கள், கட்டுமான ஒப்பந்தக்காரர்கள் போன்றோர் அரசாங்கத்திந் சில சட்ட கெடுபிடிகளைத் தாண்டுவதற்கு கவுன்சிலர்கள், மாகாண மற்றும் மத்திய பாராளுமன்ற உறுப்பினர்களின் தயவை வேண்டி தேர்தல் காலங்களில் அவர்களுக்கு நன்கொடை வழங்குவது வழக்கம். குறிப்பாக டக் ஃபோர்ட் அரசு சூழற் பாதுகாப்புக்கென ஒதுக்கப்பட்ட காணிகளை வீட்டு நிர்மாண நிறுவனங்களுக்குத் தாரைவார்த்துக் கொடுத்தமையும் பின்னர் சூழல் செயற்பாட்டாளர்கள் மற்றும் மத்திய அரசின் தலையீட்டால் அது மீட்கப்பட்டமையும் தெரிந்ததே.

பெரும் சமூக ஊடகங்களில் உலா வரும் உரையாடல் ஒலித்துண்டில் கன்சர்வேட்டிவ் வேட்பாளர் ஸேறா பொக்காரி அடையாளம் காட்டப்படாத ஒரு நன்கொடையாளரிடம் “நீங்கள் எனக்கு நன்கொடை தராவிட்டால் உங்கள் கோப்பு (file) நகராது. நான் எவ்வளவு தொடர்புகளைக் கொண்டவள் என்பது உங்களுக்குத் தெரியும்” என்றவாறு அவர் மிரட்டும் தொனியில் பேசியிருப்பது கட்சிக்குத் தலையிடியைக் கொடுத்து வருகிறது.

இது குறித்து எதிர்க்கட்சித் தலைவி பொணி குறொம்பி மேற்கொண்ட புகாரில் வேட்பாளர் ஸேறா பொக்காரி இத்தேர்தல் போட்டியின்றும் இடைநிறுத்தப்படவேண்டுமெனவும் இப்புகார் குறித்து ஆர்.சீ.எம்.பி. விசாரணைகளை மேற்கொள்ளவேண்டுமெனவும் கேட்டதற்கு “இதுவெல்லாம் பொறாமை கொண்ட ஒருவரால் வேண்டுமென்றே மேற்கொள்ளப்படும் சேறு பூசும் விடயம் என அதை உதாசீனம் செய்துள்ளது.

ஆங்கிலத்திலும் உருதுவிலும் மேற்கொள்ளப்பட்ட இவ்வுரையாடலில் “நன்கொடை கிடைக்கும்வரை உங்கள் கோப்பு நகரசபைத் திட்டவாளரைச் (City Planner) சென்றடையாது” என பொக்காரி மிரட்டுவது அம்பலப்படுத்தப்ப்ட்டிருக்கிறது.

இது குறித்து கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளர் ‘த ஸ்பெக்ரேற்றர்’ பத்திரிகைக்கு கொடுத்த தகவலின்படி இவ்விடயம் சென்ற வருடம் நடைபெற்றதெநவும் அப்போது பொக்காரி கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளரல்ல எனவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

2023 முதல் ஜனவரி 2024 வரை பொக்காரி மாகாண முதலவர் டக் ஃபோர்ட்டின் பாராளுமன்ற உதவியாளராகக் கடமையாற்றி வந்தவர் எனவும் ஹமில்டன் மத்தி தேர்தல்களில் பிரச்சார முகாமையாளராகக் கடமையாற்றியவரெனவும் அறியப்படுகிறது.

இங்கு பல கட்சிகளும், தனிப்பட்டவர்களும் போட்டியிட்டாலும் முன்னாள் என்.டி.பி. உறுப்பினரும் தற்போது சுயாதீன வேட்பாளராகப் போட்டியிடும் சேறா ஜாமா அவர்களுக்கும் என்.டி.பி. கட்சி சார்பில் போட்டியிடும் றொபின் லெனொக்ஸ் அவர்களுக்குமிடையே தான் கடும் போட்டி நிலவுகிறது எனவும் கூறப்படுகிறது. பாலஸ்தீனப் போராட்டம் தொடர்பாக சேறா ஜாமா எடுத்த பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டைக் கண்டித்து அவரை என்.டி.பி. கட்சி வெளியேற்றியதைத் தொடர்ந்து அவர் சுயாதீன வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *