ஒன்ராறியோ மாகாணத் தேர்தல் முடிவுகள்: “?”
சிவதாசன்
எதிர்பார்த்தபடி புறொக்கிறெஸ்ஸிவ் கன்சர்வேட்டிவ் கட்சி அமோக வெற்றியீட்டியிருக்கிறது. இது முதல்வர் ட்க் ஃபோர்ட்டின் மூன்றாவது தொடர்ச்சியான வெற்றி. வரலாற்றில் சாதனை படைத்த வெற்றி. இவ்வெற்றி கட்சியாலோ அல்லது அதன் அங்கத்தவர்களாலோ அல்லாது ட்க் ஃபோர்ட் என்றொரு தனி மனிதனது சாமர்த்தியத்திற்குக் கிடைத்த வெற்றி.
அளிக்கப்பட்ட வாக்குகளில் 49.56% த்தைப் பெற்று கன்சர்வேட்டிவ் கட்சி 80 ஆசனங்களையும், 38.6% வாக்குகளைப் பெற்றி லிபரல் கட்சி 14 ஆசனங்களையும், 7.05% வாக்குகளைப் பெற்று என்.டி.பி. கட்சி 27 ஆசனங்களையும் பெற்றிருக்கின்றன. மீதி மூன்று ஆசனங்களிலும் பசுமைக்கட்சி 2 ஐயும் சுயாதீன வேட்பாளர் 1 ஆசனத்தையும் பெற்றிருக்கின்றனர்.
இதில் ஆச்சரியம் லிபரல் கட்சித் தலைவி பொணி குறொம்பி தேர்தலில் தோல்வியடைந்தது. 2022 ஆம் ஆண்டு தேர்தலில் லிபரல் கட்சி படு தோல்வியடைந்தது மட்டுமல்லாமல் கட்சி அங்கீகாரத்தையும் இழந்திருந்த நிலையில் 38.6% வாக்குகளைப் பெறுமளவுக்கு உயர்த்தி விட்ட பெருமை அவரையே சாரும். என்.டி.பி. கட்சி சென்ற தடவையை விட 8.6% குறைந்த வாக்குகளை எடுத்து மொத்தம் 7.05% வாக்குகளுக்கு 27 ஆசனங்களைப் பெற்றிருப்பது ஜனநாயகத்தை மறுதலிப்பதாகும். FPTP தேர்தல் முறைமையை மாற்றவேண்டுமென்பதற்கு இது சிறந்ததொரு உதாரணம்.
Rhetoric எனப்படும் கொக்கரிப்பு அரசியல்வாதிகளுக்கு முக்கியமான / அவசியமான குணாதிசயம் என்பதை இத் தேர்தல் மீண்டும் நிரூபித்திருக்கிறது. தெற்கே ட்றம்ப் வாய்க்கு வந்ததெல்லாவற்றையும் கொக்கரித்தபோது கனடாவிலிருந்து பதிலுக்கு உரக்கக் கொக்கரித்த முதல் மனிதர் டக் ஃபோர்ட் தான். கொஞ்சம் பிந்தியே ட்றூடோ அவருடன் இணைந்தார். ட்றூடோ அல்லது அல்பேர்ட்டாவின் டானியெல் போல மார்-எல்-லாகோ மாளிகையில் ‘ஒருதரம் பேசிப்பார்க்க’ டக் ஃபோர்ட் முயலவில்லை. அமெரிக்க வைன் போத்தல்களை உடனடியாக LCBO தட்டுக்களிலிருந்து அகற்ற உத்தரவிட்டதுடன் அமெரிக்காவிற்கு வழங்கும் மின்சாரத்தையும் துண்டிப்பேன் எனக் கர்ச்சித்தவர். இந்த விடயத்தில் லிபரல், என்.டி.பி. கட்சிகள் ஒத்தூதவில்லை. அவர்கள் தொடர்ந்தும் டக் ஃபோர்ட் அரசைச் சாடுவதிலேயே மினக்கெட்டனர். மக்களின் உணர்வுகளெலாம் ட்றம்பின் ஊளைக்கு அதிர்ந்துகொண்டிருக்கும்போது அவர்கள் உள்ளூர் விடயங்களில் மினக்கெட்டது அரசியல் தந்திரமல்ல. ஒவ்வொரு தடவையும் டக் ஃபோர்ட் ஒலிவாங்கியைப் பிடிக்கும்போது ட்றம்பைச் சாடாமல் விட்டதில்லை. மக்களின் நாடிகளைப் பிடித்து உடனடியாக அவர்களின் மனநிலைகளை அறிந்ததன் விளைவே அவரது வெற்றி. எனவே இந்த வெற்றிக்கு அனைவரும் அவருக்கே நன்றி சொல்ல வேண்டும். இதைவிடப் பெருந்துயரம் பின்னால் பலாப்பழத்துடன் வரும் பியர் பொய்லியேவ். அவர் கர்ச்சிக்கப் பழகாதவர். கர்ச்சித்தால் தான் சிங்கம், குரைத்தல்தான் நாய், பிளிறினால் தான் யானை என்பதுபோல் கர்ச்சிப்பது அரசியல்வாதிகளுக்குரிய அடையாளம். ட்றம்ப் ஆட்சிக்கு வந்ததற்கும் அதுவே காரணம். அது வெற்றுக்கூச்சல் என்று சொல்லிவிட்டு மெளனமாக இருந்தால் தோல்விதான்.
ட்றம்பின் இம்சையைத் தாக்குப்பிடிக்ககூடிய ஒருவரை ஒன்ராறியோ தேர்ந்தெடுத்திருப்பது ஒரு தந்திரோபாய நகர்வு தான். தேர்தல் பிரச்சாரங்களின்போது எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டிய கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் என்பன ட்றம்பின் தீர்வையால் வரப்போகும் பிரச்சினைகளோடு ஒப்பிடும்போது ஜுஜுப்பிகள் என மக்கள் நினைத்திருக்கலாம். ஆனால் அந்த மக்களின் மனநிலைகளை அறிய முடியாத அளவுக்கு எதிர்க்கட்சிகள் இருந்திருப்பது தான் விநோதமானது.
வட கொரிய கிம், ரஸ்ய புட்டின் போன்ற சர்வாதிகாரிகள் மீது மோகம் கொண்ட ஒரு சைகோபாத் ட்றம்ப். ட்றம்பின் மொழியைப் பேசத் தெரிந்த, இப்போதைக்கு, ஒரு கனடிய ‘சர்வாதிகாரி’ டக் ஃபோர்ட் என்றே நான் நினைக்கிறேன். இவர் இப்போதைக்குக் கனடாவுக்கு அவசியமான counter weight.
வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.



