ஒன்ராறியோ: முதியவர்கள் வாகன ஓட்டுனர் அனுமதிப்பத்திரம் புதுப்பிப்பதில் மாற்றங்கள்
ஜூலை 2025 நடைமுறைக்கு வருகிறது
நீங்கள் வாகன ஓட்டுனராகவிருந்து [G அல்லது M வகையானவற்றுக்கு மற்றும் வணிக வாகனங்கள் (commercial licenses) வகைகள் A,B,C,D,E அல்லது F] 80 வயதியும் அண்மிக்கிறீர்களாகவிருப்பின் உங்கள் வாகன ஓட்டுதல் அனுமதிப் பத்திரத்தைப் புதுப்பிக்கும்படி ஒன்ராறியோ போக்குவரத்து அமைச்சிலிருந்து ஒரு கடிதம் வரும். அப்படிக் கிடைத்தவர்கள் பெப்ரவரி 3, 2025 முதல் ஒன்ராறியோவின் சில சேர்விஸ் ஒன்ராறியோ நிலையங்களில் (Service Ontario Centres) இப்புதுப்பித்தல் பத்திரங்களை நிரப்பிக் கையளிக்கலாம். ஜூன் 2025 இற்குப் பின்னர் ஒன்ராறியோவின் அனைத்து சேர்விஸ் ஒன்ராறியோ நிலையங்களிலும் இவ்வசதி வழங்கப்படும்.
குறிப்பு: உங்களது வயது 70 மேலாகி, ஏதாவது ஒரு வாகன விபத்தில் / மோதலில் சம்பந்தப்பட்டிருப்பின் உங்களுக்கும் அனுமதிப்பத்திர புதுப்பித்தல் பற்றிய அறிவித்தல் வரும். நீங்கள் ஒரு பரீட்சைக்குச் செல்லவேண்டி இருக்குமென ஒரு அறிவிப்பு இதில் இணைக்கப்பட்டிருக்கும். 60 நாட்களுக்குள் நீங்கள் இப்பரீட்சையை செய்து முடித்திருக்கவேண்டும்.
முதியவர்களுக்கான இச் சாரதி அனுமதிப் பத்திரப் புதுப்பித்தல் விடயங்களில் ஒன்ராறியோ போக்குவரத்து அமைச்சு, சேர்விஸ் ஒன்ராறியோ மற்றும் ‘ட்றைவ் ரெஸ்ட்’ குழுக்கள் சம்பந்தப்படலாம். சேர்விஸ் ஒன்ராறியோ மற்றும் ஒன்ராறியோ போக்குவரத்து அமைச்சு ஆகியவற்றினால் வடிவமைக்கப்பட்ட முதியவர்களுக்கான வாகன ஓட்டுதல் பரீட்சையை ‘ட்றைவ் ரெஸ்ட்’ நிலையங்களே முன்னெடுக்கின்றன. நீங்கள் 80 வயதைத் தாண்டியவுடன் இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை பின்வரும் நடைமுறைகள நீங்கள் மேற்கொள்ள வேண்டும்:
படி 1: கல்வி / அறிவுறுத்தல் காணொளி
வாகனம் ஓட்டுபவர்கள் வயது முதிரும்போது உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள், தெருக்களில் பின்பற்ற வேண்டிய பொதுவான சட்டங்கள், அனுமதிப் பத்திரத்தைப் புதுப்பிப்பது எப்படி என்பது பற்றிய தகவல்களை இக்காணொளி மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
படி 2: உங்கள் பரீட்சைக்கான கால நிர்ணயம் ( Booking Appointment)
உங்கள் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான கால நிர்ணயத்தைப் பெறுவதற்கு: 1). இணையத்தளம் மூலம்: Ontario.ca/Appointment 2). தொலைபேசி மூலம் (திங்கள் – வெள்ளி: காலை 8:30 முதல் மாலை 5:30 வரை) – 1-800-396-4233 அல்லது 416-235-3579 (ரொறோண்டோ பெரும்பாகம்)
படி 3: சேர்விஸ் ஒன்ராறியோ நிலையத்தில் நேரடியாக
நீங்கள் நேரடியாக உங்களுக்கு அண்மையிலுள்ள சேர்விஸ் ஒன்ராறியோ நிலையத்திற்குச் சென்று உங்கள் ஓட்டுனர் அனுமதிப் பத்திரத்தைப் புதுப்பித்துக்கொள்ள முடியும். சுமார் 1- முதல் 20 நிமிடங்கள் இதற்குத் தேவைப்படலாம். இச்சந்திப்பின்போது 1). உங்கள் அறிவாற்றல் (cognitive) 2). கட்புல (vision) பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்
இதுபற்றி மேலதிக தகவல்களைப் பெற இத்தொடுப்பினூடு செல்லவும்.
ஒன்ராறியோ மாகாணத்திற்கு வெளியே வாழ்பவர்களுக்கு
ஓட்டுனர் அனுமதிப்பத்திரப் புதுப்பித்தல் வசதிகள் ஒன்ராறியோ மாகாணத்திற்கு வெளியே வாழ்பவர்களுக்கு கிடைக்க மாட்டாது. உங்கள் ஓட்டுனர் பத்திரம் புதுப்பிக்கப்படும் தருணத்திலோ அல்லது அதற்கு முன்பாகவோ நீங்கள் ஒன்ராறியோ மாகாணத்திற்கு வெளியே வாழ நேரின் 180 நாட்களுக்கு முதல் புதுப்பிக்கும் முயற்சிகளை ஆரம்பிக்க வசதிகளுண்டு. அது தவறின் தஹ்ற்காலிக சாரதிப்பத்திரமொன்றைப் பெறும் வசதிகளுமுண்டு.
G மற்றும் M வகை ஓட்டுனர் பத்திரப் புதுப்பித்தலுக்கான ஆலோசனை / துணை வளங்கள்
முதியோர்களின் ஓட்டுனர் பத்திரப் புதுப்பித்தல் பரீட்சைகளுக்கு உதவி செய்யும் வகையில் ஒன்ராறியோ ஓட்டுனர் பத்திரக் கைநூல் மற்றும் ஒன்ராறியோ மோட்டார் சைக்கிள் கைநூல் ஆகிய உசாத்துணை நூல்களை ஒன்ராறியோ போக்குவரத்து அமைச்சு வெளியிட்டிருக்கிறது. (Senior drivers in Ontario page , https://www.ontario.ca/driving-and-roads/renew-drivers-licence-outside-ontario).
புதுப்பித்தலுக்கான நடைமுறைகள்
5 பிரதான படிமுறைகளில் இது மேற்கொள்ளப்படுகிறது:
1.) புதுப்பிப்பதற்கான அறிவுறுத்தல் கிடைக்கப்பெறுதல்:
உங்கள் ஓட்டுனர் அனுமதிப் பத்திரம் காலவதியாவதற்கு 90 நாட்களுக்கு முன்னர் 1). புதுப்பித்தலுக்கான விண்ணப்பப் படிவம் 2). அதை நிரப்புவதற்கான உதவிக்குறிப்புகள் ஆகியவற்றைக் கொண்ட தகவல்கள் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
2). ஓட்டுனர் அனுமதிப்பத்திரப் புதுப்பித்தலுக்கு முன்னர்:
- இக்காணொளியைப் பாருங்கள்
- ஒன்ராறியோ போக்குவரத்து அமைச்சின் ஓட்டுனர் கைநூல் மற்றும் மோட்டர் சைக்கிள் கைநூல் ஆகிய நூல்களைக் கடைகளில் வாங்கி வாசியுங்கள்
3. நேரடிச் சந்திப்பு / பரீட்சைக்கான கால நிர்ணயம்:
ஓட்டுனர் அனுமதிப்பத்திரப் புதுப்பித்தலுகான விண்ணப்பப் படிவம் தபால் மூலம் கிடைக்கப்பெற்றதும்,- பெப்ரவரி 03, 2025 இற்குப் பிறகு குறிக்கப்பட்ட சில சேர்விஸ் ஒன்ராறியோ நிலையங்களிலும் ஜூன் 2025 முடிவில் அனைத்து சேர்விஸ் ஒன்ராறியோ நிலையங்களிலும் பத்திரப் புதுப்பித்தலுக்கான செயற்பாடுகளை ஆரம்பிக்கலாம். இதற்கான நேர்முகப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு:
- 1-800-396-4233 அல்லது 416-235-3579 என்ற இலக்கங்களை அழையுங்கள்
- உங்கள் ஓட்டுனர் பத்திர இலக்கத்தைக் கொடுங்கள்
- மொழிப் பரிவர்த்தனைப் பிரச்சினை இருப்பின் உங்களுக்குப் பரிச்சயமான மொழியில் உரையாட வசதிகளைக் கேளுங்கள்
- செவிப்புலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் கைச்சைகை மொழியில் உரையாடுவதற்கான வசதிகளைக் கேளுங்கள்
- நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவம் கைவசமிருப்பின் அதைக் கொடுங்கள்
- வாகன ஓட்டுதலின்போது கண்ணாடி அல்லது ஒட்டு வில்லைகள் (contact lenses) பாவிப்பவரானால் அவற்றையும் கையோடு எடுத்துச் செல்லுங்கள்
- செவிப்புல உதவி சாதனம் (hearing aid) பாவிப்பவரானால் அதையும் எடுத்துச் செல்லுங்கள்
4. நேர்முகப் பரீட்சையின்போது:
- இப்பரீட்சையின்போது கட்புலம் / பார்வை ஏற்றுக்கொள்ளப்படும் வகையில் இருக்கிறதா எனப் பரிசோதிக்கப்படும்
- 5 நிமிட அறிவாற்றல் பரிசோதனை நிகழ்த்தப்படும்
5. நேர்முகப் பரீட்சையின் பின்னர்:
- $36 டாலர்களைக் கொடுத்து சேர்விஸ் ஒன்ராறியோவில் ஓட்டுனர் பத்திரம் புதுப்பிக்கப்படும்.அதற்கு முன்னர் சில வேளைகளில் பின்வரும் செயற்பாடுகளுக்கு நீங்கள் உள்ளாக்கப்படவும் கூடும்: 1). தெருவில் வாகனத்தை ஓட்டிப் பரிசோதிக்கப்படலாம் 2). உங்கள் வைத்தியரிடமிருந்து பெற்ற சான்றிதழ் ஒன்றைச் சமர்ப்பிக்கும்படி கேட்கப்படலாம் 3). கண் வைத்தியரிடமிருந்து புதிதாகப் பெறப்பட்ட சான்றிதழைச் சமர்ப்பிக்கும்படி கேட்கப்படலாம். 4). மேலதிக மருத்துவ சன்றிதழ்கள் / பரிசோதனைகள் அவசியமானால் தபால் மூலம் அதற்கான கோரிக்கைகள் அனுப்பி வைக்கப்படும்.
6. இப்பரீட்சைகளில் சித்திபெறாவிட்டால்…
இப்பரீட்சைகளில் சித்திபெறாவிட்டால் உங்கள் மருத்துவரிடமிருந்து சான்றிதழ்களைப் பெறவோ அல்லது மீண்டுமொரு தடவை தெருவோட்டச் சோதனை ஒன்றைச் செய்யும்படி நிர்ப்பந்திக்கப்படவோ கூடும். இதற்குத் தேவையான தகவல்கள் அடங்கிய கடிதமொன்று போக்குவரத்து அமைச்சின் சுகாதார மீள்பார்வை அலுவலகத்தினாலோ அல்லது ட்றைவ் ரெஸ்ட் நிலையத்தினாலோ தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இப்பரிசோதனைகளில் நீங்கள் மீண்டும் சித்திபெறத் தவறினால், நீங்கள் சித்தியடையும் வரை, உங்கள் ஓட்டுனர் அனுமதிப்பத்திரங்கள் G1 அல்லது M1 தரத்திற்குக்குக் கீழிறக்கப்படும். இதற்காக, பரீட்சைக்கு வரும்போது 4 வருட அனுபவங்களோடு கூடிய ஒரு ஓட்டுனரை பரீட்சையன்று அழைத்து வரும்படி அறிவுறுத்தப்படுகிறது.
7. சித்தி பெற்றால்…
ஓட்டுனர் அனுமதிப்பத்திரப் புதுப்பித்தலுக்கான தேவைகள் அனைத்தும் வெற்றிகரமாகப் பூத்தி செய்யப்பட்டால் புதுப்பித்தலை நீங்கள் இணைய வழியாகச் செய்துகொள்ள முடியும். மாறாக சேர்விஸ் ஒன்ராறியோ நிலையத்திற்கு நேரடியாகச் சென்று புதுப்பிக்க விரும்பினால் செல்லுபடியாகக் கூடிய அடையாளப் பத்திரங்கள் மற்றும் காலாவதியான ஓட்டுனர் பத்திரம் ஆகியவற்றைக் கொண்டு செல்ல வேண்டும். (Image Credit: Service Ontario)



