ஒன்ராறியோ: மேலும் பல வியாதிகளுக்கு மருந்துகளைப் பரிந்துரைக்க மருந்தகங்களுக்கு மாகாண அரசு அனுமதி
ஒன்ராறியோ மாகாணத்தில் பொது வைத்தியர்களுக்கு ஏற்பட்ட பற்றாக்குறை காரணமாக பல நோயாளிகள் மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகளை நாடவேண்டி ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் தற்போது நிலவும் தீவிர தாதிமார் பற்றாக்குறையினால் நிர்வாகத்திற்கு இது மேலும் அழுத்தங்களைக் கொடுத்து வருகிறது. இதைத் தளர்வு செய்வதற்காக ஒன்ராறியோ மாகாண அரசு தீவிரமற்ற, இலகுவாகச் சிகிச்சையளிக்ககூடிய பிணிகளுக்கு சிகிச்சையளிக்கும் அனுமதியை ஜனவரி 01, 2023 முதல் சில தெரிவு செய்யப்பட்ட மருந்தகங்களுக்கு வழங்கியிருந்தது. அப்போது அனுமதி வழங்கப்பட்ட வியாதிகளுடன் தற்போது மேலும் 6 பொது வியாதிகளைச் சேர்த்துள்ளது.
மாகாண சுகாதார அமைச்சு பதிவுகளின்படி ஜனவரி 01 இல் வழங்கப்பட்ட இச் சிகிச்சை அனுமதிக்கு சுமார் 89% மான மருந்தகங்கள் விண்ணப்பித்திருந்தன எனவும் அவர்களால் இதுவரை 400,000 சிகிச்சைப் பரிந்துரைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் தெரிய வருகிறது.
ஜனவரி 01, 2023 முதல் அனுமதிக்கப்பட்ட மருந்தக சிகிச்சைக்கான வியாதிகள்:
- தூசியால் வரும் சளிக்காய்ச்சல் (hay fever (allergic rhinitis));
- வாய்ப் புண் (oral thrush (candidal stomatitis));
- கண் தொற்று (pink eye (conjunctivitis; bacterial, allergic and viral));
- தோல் அழற்சி (dermatitis (atopic, eczema, allergic and contact));
- மாதவிடாய்ப் பிடிப்புகள் (menstrual cramps (dysmenorrhea));
- நெஞ்செரிவு (acid reflux (gastroesophageal reflux disease (GERD));
- மூல வியாதி (hemorrhoids);
- உதடு வெடிப்பு (cold sores (herpes labialis));
- தோல் கொப்புளம் (impetigo);
- பூச்சிக் கடி (insect bites and hives);
- உண்ணிக் கடி (tick bites (post-exposure prophylaxis to prevent Lyme disease));
- சுழுக்கு மற்றும் பிறழ்வு (sprains and strains (musculoskeletal));
- சிறுநீர்க் கால்வாய்த் தொற்று (urinary tract infections (UTIs).
அக்டோபர் 01, 2023 சேர்க்கப்பட்ட வியாதிகள்:
- முகப்பரு (acne);
- வாய்ப்புண்கள் (canker sores);
- ‘டயப்பர்’ சிரங்கு (diaper rash);
- யீஸ்ட் தொற்று (yeast infections);
- ஒட்டுண்ணிப் புழுக்கள் (parasitic worms (pinworms and threadworms));
- கர்ப்பத்தின் போதான குமட்டல் , வாந்தி (nausea and vomiting in pregnancy).
இவற்றை விடவும் குளிர் காலத்தில் எதிர் நோக்கும் ஃபுளூ போன்ற வியாதிகளுக்கான தடுப்பு ஊசிகளை மருந்தகங்களில் போட்டுக்கொள்ளும் வசதிகள் பற்றியும் சுகாதார அமைச்சு ஆலோசனை செய்துவருகிறது.