Politics

ஒன்ராறியோ லிபரல் கட்சித் தலைவராகும் பொணி குறொம்பீ

ஒன்ராறியோ மாகாணத்தின் பெரிய நகரங்களில் ஒன்றான மிஸ்ஸிசாகா நகரில் தொடர்ந்து மூன்று தவணைகள் வெற்றிபெற்று முதல்வராகக் கடமையாற்றிவந்த பொணி குறொம்பீ தற்போது மாகாண லிபரல் கட்சியின் தலைவராகத் தெரிவாகியுள்ளார்.

டிசம்பர் 02, 2023 ல் நடைபெற்ற கட்சித் தலைவருக்கான தேர்தலில் பொணி குறொம்பீயுடன் பா.உ. நேட் ஏர்ஸ்கீன்-ஸிமித், முன்னாள் மா.உ. யசிர் நக்வி மற்றும் முன்னால் பா.உ. ரெட் சூ ஆகியோர் போட்டியிட்டிருந்தனர். மூன்றாவது சுற்றுவரை சென்ற இப்போட்டியில் இறுதியாக பொணி குறொம்பீ வெற்றியீட்டியுள்ளார்.

2022 இல் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்ட லிபரல் கட்சி 9 ஆசனங்களை மட்டுமே வெற்றிகொண்டதால் அதிகார பூர்வமான எதிர்க்கட்சி என்ற தகமைகூட இல்லாதிருக்கின்றது. ஸ்டீபன் டெல்லூகா தலைமையில் போட்டியிட்ட லிபரல் கட்சி படுதோல்வியடைந்ததைத் தொடர்ந்து அவர் பதவியைத் துறந்ததிலிருந்து ஜோன் ஃபிறேசர் என்பவர் கட்சியின் அடுத்த கட்சித் தலைவர் தேர்தல் வர்ம்வரை இடைக்காலத் தலவைராகப் பணியாற்றிவந்தார். இத் தேர்தல் டிசம்பர் ஆரம்பத்தில் நடைபெற்றது.

2015 ஆம் ஆண்டு கதலீன் வின் தலைமையில் நடைபெற்ற தேர்தலில் கட்சி 58 ஆசனங்களைப் பெற்று ஆட்சியமைத்திருந்தது. அவரது ஆட்சியின்போது நடைபெற்ற சில ஊழல்கள் காரணமாக 2018 இல் நடைபெற்ற தேர்தலில் 7 ஆசனங்களை மட்டுமே பெற்றதன் மூலம் கட்சி அதிகாரபூர்வமான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை இழந்திருந்தது. இத் தோல்வியின் காரணமாக கட்சித் தலைவர் வின் அன்றிரவே தநது பதவியைத் துறந்திருந்தார். இதைத் தொடர்ந்து டக் ஃபோர்ட் தலைமையிலான கந்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியில் இருந்துவருகிறது,

மிஸ்ஸிசாகா நகரின் முதல்வராக தொடர்ந்து மூன்று தடவைகள் கடமையாற்றிய பொணி குறொம்பீ அநுபவம் மிக்கவர் மட்டுமல்லாது டக் ஃபோர்ட் போன்ற தலைவர்களை எதிர்த்து நிற்கக்கூடிய திராணியுள்ளவர் எனவும் கூறப்படுகிறது. 2026 இல் நடைபெறவிருக்கும் அடுத்த மாகாணசபைத் தேர்தலுக்கு முன் கட்சியைக் மீளக்கட்டியெழுப்பும் பணி அவர் தோள்களில் இப்போது சுமத்தப்பட்டிருக்கிறது.

தற்போது மாகாணசபையில் உறுப்பினராக இல்லாத நிலையில் அவர் 2024 ஆரம்பத்தில் மிஸ்ஸிசாகா நகர முதல்வர் பதவியைத் துறந்துவிட்டு இடைத் தேர்தல் ஒன்றின் மூலம் மாகாணசபைக்குள் நுழையலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

கட்சித் தலைவர் போட்டிக்குமுன்னர் வாக்களிக்கும் தகமையைப் பெறுவதற்காக ஒவ்வொரு வேட்பாளரும் அங்கத்தவர்களைச் சேர்க்கவேண்டியிருந்தது. இதன் பயனாக நான்கு வேட்பாளர்களும் மொத்தம் 100,000 வாக்காளர்களைப் பதிவுசெய்திருந்தனர். இதற்கு முன்னர் நடைபெற்ற இரண்டு தலைவர் போட்டிகளில் முறையே 44,000, 38,000 அங்கத்துவப் பதிவுகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டிருந்தன. அப்படியிருந்தும் இறுதித் தேர்தலில் நான்கு வேட்பாளர்களுக்கும் மொத்தம் 22,827 வாக்குகள் மட்டுமே கிடைத்திருந்தன.

இரண்டு வேட்பாளர்கள் இரண்டாம் சுற்றில் விடுபட்டுப் போக அவர்களது ஆதரவாளர்கள் தமது ஆதரவை குறொம்பீக்கும் ஏர்ஸ்கீன்- ஸ்மித்திற்குமிடையே பிரித்துக்கொள்ளவேண்டி ஏற்பட்டது. இறுதிப் போட்டி குறொம்பீக்கும் ஏர்ஸ்கீன் ஸ்மித்துக்குமிடையில் நடைபெற்ற நிலையில் குறொம்பீக்கு 6911 வாக்குகளும் ஏர்ஸ்கீன்-ஸ்மித்திற்கு 6029 வாக்குகளும் கிடைத்திருந்தன.

இச்சூழ்நிலையில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின் பெறுபேறுகளின்படி அடுத்த தேர்தலில் டக் ஃபோர்ட்டின் அரசை வீழ்த்த வல்ல தலைமை பொணி குறொம்பீக்கே இருக்கிறது எனக்கூறப்படுகிறது.

2014 இல் நகரசபை முதல்வராக வருவதற்கு முதல் குறொம்பீ மத்திய அரசில் உறுப்பினராக இருந்தார். மூன்று பிள்ளைகளுக்குத் தாயான குறொம்பீயின் பூர்வீகம் போலந்து ஆகும். போதைக்கு அடிமையாகி மனநோய் பீடித்த நிலையில் குறொம்பீக்கு 3 வயதாக இருக்கும்போதே தாய் தந்தையார் பிரிந்துவிட்டனர். இதன் பின்னர் குறொம்பீ தனது தாயாருடன் வாடகை அறையொன்றில் வாழவேண்டியேற்பட்டது. தற்போது அவருக்கு 63 வயதாகிறது.

ஒன்ராறியோவின் பசுமை நிலங்களை வீட்டு நிர்மாண நிறுவனங்களுக்கு விற்பது தொடர்பாக தற்போதைய அரசு எடுத்த முடிவுகள் மீளப்பெறப்பட்டதைத் தொடர்ந்து டக் ஃபோர்ட்டின் அரசு மீதான செலவாக்கு மிக வேகமாகச் சரிந்து வருகிறது. இருப்பினும் குறொம்பீயும் வீட்டு நிர்மாண நிறுவனங்களுக்கு நிலங்களைத் தாரைவார்ப்பதற்கு ஆதரவாகப் பேசியிருந்தமை சூழலியலாளர் மத்தியில் பலத்த எதிர்ப்பைத் தந்திருந்தது. அது மட்டுமல்லாமல் தான் வலதுசாரிய நிலைப்பட்டிலிருந்து மத்திய நிலைப்பாட்டை எடுப்பேன் எனத் தெரிவித்துவிட்டு பின்னர் அதை மாற்றிக்கொண்டவர் என அவரது போட்டியாளர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். இதனால் இவரது ஆட்சியும் டக் ஃபோர்ட் ஆட்சிபோலவே இருக்கும் எனவும் அவர்கள் எச்சரித்திருந்தனர். குறொம்பீயின் நிதி சேகரிப்பில் சேகரிக்கப்பட்ட தொகையின் பெரும்பங்கை வீட்டு நிர்மாண நிறுவனங்களே வழங்கியிருந்தன என்றொரு குற்றச்சாட்டும் உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் அடுத்த தேர்தல் மிகவும் சூடாக இருக்குமென எதிர்பார்க்கலாம். (Image Credit: CatIQ Connect)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *