ஒன்ராறியோ: வீட்டு வாடகை அதிகரிப்பு வரையறை 2.5%
ஒன்ராறியோ மாகாணத்தில் வீடுகளை வாடகைக்கு விடுபவர்கள் தவணை முடிவில் அறவிடும் வாடகையை அதிகரிக்க விரும்பினால் அதற்கென ஒரு வரையறையை மாகாண அரசு அறிவித்திருக்கிறது. உச்ச அதிகரிப்பு பொதுவாக நாட்டின் பணவீக்கத்தைச் சார்ந்து இருப்பினும் இந்த தடவை அது மிகவும் குறைவாகவே இருக்கிறது.
நாட்டின் பணவீக்கம் தற்போது 5.9% மாக இருக்கிறது. இதனால் வீட்டுரிமையாளர்களின் சோலை வரி, பராமரிப்பு மற்றும் இதர செலவுகள் பணவீக்கத்திற்கேற்ப அதிகரித்திருந்த போதிலும் மாகாண அரசு 2024 இற்கான வாடகை அதிகரிப்பை அதி உச்சம் 2.5% மாக மட்டுப்படுத்தியிருக்கிறது. அதாவது வாடகை வீட்டின் சொந்தக்காரர் வாடகை அதிகார சபையின் அனுமதியின்றித் மாதாந்த வாடகையை அதிகபட்சம் 2.5% வரை உயர்த்திக்கொள்ள முடியும். பல்வேறு காரணங்களுக்காக இவ்வரையறையை மீறி வாடகையை உயர்த்த விரும்புபவர்கள் இவ்வதிகாரசபைக்கு ((Landlord and Tenant Board) விண்ணப்பிக்க வேண்டும்.
கடந்த வருடமும் இந்த வாடகை அதிகரிப்பு உச்ச வரம்பு 2.5% மாகவே இருந்தது. அதிகரிக்கும் உணவு மற்றும் அத்தியாவசிய பண்டங்களின் விலைகள் கருதி வாடகைக் குடியிருப்பாளர்களை மேலும் சிரமங்களுக்குள்ளாக்காமல் இருப்பதற்காக நகரசபைகளின் ஆலோசனையுடன் மாகாண அரசு இந்நடவடிக்கையை எடுத்திருக்கிறது என நகரசபை மற்றும் வீடமைப்பு விவகாரங்களுக்கான மாகாண அமைச்சர் ஸ்டீவ் கிளார்க் தெரிவித்துள்ளார்.
2022 இல் ஒன்ராறியோவில் 15,000 புதிய வாடகைக் குடியிருப்புகள் கட்டப்பட்டன. 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 7.5% அதிகரிப்பாகும். இந்த வருடம் இதுவரை 8,500 புதிய வாடகைக் குடியிருப்புகளின் நிர்மாணம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. பல முதலீட்டாளர்கள் வீடுகளை வாங்கி குறுங்கால வாடகைக்கு விடுவதன் காரணமாக நீண்டகால வாடகைக் குடியிருப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. (Photo by Robert Linder on Unsplash)