veedu.com

நாமார்க்கும் குடியல்லோம்

Real Estate

ஒன்ராறியோ: வீட்டு வாடகை செலுத்துபவர்களுக்கும் வீட்டு சொந்தக்காரருக்கும் இருக்கும் உரிமைகள் என்ன?

வாடகை செலுத்தாதோரை எழுப்பும் வழிகள்

கடந்த இரண்டு மூன்று வருடங்களில் கனடாவில் வீட்டு விலைகள் மற்றும் வட்டி வீதம் அதிகரித்த காரணத்தால் வீடுகளின் வாடகைகளும் குடியிருப்பாளர்களின் இயலுமைகளையும் மீறி அதிகரித்து வருகின்றன. இதனால் வாடகை குடியிருப்பாளர்களிடையே ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக மூன்று நிலை அரசுகளும் வாடகை குடியிருப்பு விடயங்களில் தமது சட்டங்களை இறுக்க ஆரம்பித்திருக்கின்றன. ஒன்ராறியோவில் வாடகைக் குடியிருப்பு சம்பந்தமான பெரும்பாலான சட்டங்கள் வாடகை செலுத்துபவர்களுக்குச் சாதகமாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஒருவர் உரிய காலத்தில் வாடகை செலுத்துவதில் தாமதமாக இருந்தாலோ அல்லது செலுத்துவதை முற்றாக நிறுத்திவிடாலோ ஏற்படும் சட்டப் பிரச்சினைகளில் வீட்டுச் சொந்தக்காரருக்கும் வாடகை செலுத்துபவருக்கும் இருக்கக்கூடிய உரிமைகள் என்ன என்பதை விளக்குகிறது இக் கட்டுரை.

ஒன்ராறியோவில் வீடுகளை வாடகைக்கு அமர்த்துபவர்கள் – அது வீட்டு முகவர்களினூடாகவோ அல்லது நேரடியாக வீட்டுச் சொந்தக்காரர்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் காரணமாகவோ – ஒன்ராறியோ மாகாண அரசினால் வெளியிடப்பட்ட Residential Tenancy Agreement (RTA) என்னும் ஒரு பத்திரத்தின் மூலம் ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும். இரு தரப்புக்குமிடையில் பிணக்குகள் ஏற்படும்போது இருதரப்பும் எடுக்கப்போகும் அடுத்த நடவடிக்கைக்கு இப் பத்திரம் அவசியமானது.

இவ்வொப்பந்தத்தின்படி வாடகைக்கு இருப்பவர் வாடகை செலுத்தாமல் விடும் பட்சத்தில் அவரை எழுப்பும் உரிமை வீட்டுச் சொந்தக்காரருக்கு உண்டு. ஆனால் வாடகை செலுத்துபவருக்கு நியாயமான காரணங்கள் இருப்பின் இருக்கும் வீட்டை விட்டு எழும்புவதற்கு முன்னர் சில நடவடிக்கைகளை எடுக்கும் உரிமையும் உண்டு. தமது காரணங்களை விளக்கி அவர் Landlord and Tenant Board (LTB) இற்கு அவர் விண்ணப்பிக்கலாம். எப்படியானாலும் இக் காலகட்டத்தில் வாடகைக்கு இருப்பவர் தொடர்ந்தும் வீட்டுச் சொந்தக்காரருடன் தொடர்புகளைப் பேணி வருவதுடன் செலுத்தவேண்டிய வாடகையின் ஒரு பகுதியையாவது செலுத்தும் முயற்சிகளை மேற்கொள்வதும் அவசியம். இக்காலகட்டத்தில் அவருக்கு வருமானம் குறைந்திருப்பின் அதற்கேற்றவாறு இயலுமான தொகையொன்றைச் செலுத்த முயற்சிகளை எடுத்திருக்க வேண்டும். இதற்கு வீட்டுச் சொந்தக்காரர் மறுப்புத் தெரிவிப்பினும் இம் முயற்சியை வாடகை செலுத்துபவர் எடுத்திருப்பதுடன் மீதியைச் செலுத்துவதற்கான ஒரு கால அட்டவணையைப் பரிந்துரைப்பதும் அவசியம். இவற்றுக்கான பதிவுகளையும் ஆதாரங்களையும் கைவசம் வைத்திருப்பது உதவியாகவிருக்கும். இவ்வொழுங்குக்கு இரு தரப்பினரும் உடன்படாத பட்சத்தில் LTB இற்கு விண்ணப்பிப்பது அடுத்தகட்ட நடவடிக்கையாகும். இவ்விண்ணப்பம் கடித மூலமாகவோ, வ்நியோக நிறுவனங்கள் (கூரியர்) மூலமாகவோ அல்லது ஒன்ராறியோவிலுள்ள ServiceOntario அலுவலகங்களில் நேரடியாகவோ வழங்கப்படலாம்.

வீட்டுச் சொந்தக்காரர் செய்ய வேண்டிய விடயங்கள்

வாடகை செலுத்துபவர் இம்முயற்சிகளை எடுக்காத பட்சத்தில் வீட்டின் சொந்தக்காரர் வாடகைக் குடியிருப்பாளரை எழுப்புவதற்கு முன் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதில் முதலாவது நடவடிக்கை N4 Eviction Notice வழங்குவது. இதற்குச் சில நிபந்தனைகள் உண்டு.

  • வாடகை செலுத்தப்படும் இறுதி நாளின் இரவு 12:00 மணி வரை வாடகையைச் செலுத்தும் உரிமை குடியிருப்பாளருக்கு உண்டு. எனவே இக் கால அவகாசம் முடிந்து குறைந்தது 24 மணித்திலாலங்களுக்குள் N4 ஐ சொந்தக்காரர் வழங்க முடியும்.
  • குடியிருப்பாளரின் இறுதி நாளுக்குரிய சரியான திகதி இப்படிவத்தில் இருக்க வேண்டும். வாடகை மாதாந்த ரீதியாகவோ அல்லது வருடாந்த ரீதியாகவோ செலுத்தப்பட்டிருந்தால் 14 நாட்கள் அவகாசம் குடியிருப்பாளருக்கு வழங்க வேண்டும். வாடகை நாளுக்கு நாளோ அல்லது வாரத்துக்கொருமுறையோ கொடுக்கப்பட்டு வந்தால் 7 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்படலாம்.
  • ஒப்பந்தத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குடியிருப்பாளர்களின் பெயர் இருப்பின் அதிலுள்ள அத்தனை பேர்களுகளின் பெயர்களும் N4 படிவத்தில் இருக்க வேண்டும்.
  • இப்படிவம் உரிய கையெழுத்தும் திகதியும் இடப்பட்டிருக்க வேண்டும்.

இப்பத்திரத்தில் குறிப்பிட்டபடி 14 நாட்களுக்குள் குடியிருப்பாளர் தனது நிலுவையைச் செலுத்துவாராகின் பத்திரம் செல்லுபடியாததாகிவிடும். இப் 14 நாட்களுக்குள் குடியிருப்பாளரால் வாடகை நிலுவையைச் செலுத்த முடியாதுபோனால் அதன் பின்னர் குடியிருப்பாளரை எழுப்புவதற்கான விண்ணப்பத்தை சொந்தக்காரர் LTB யிற்கு அனுப்பலாம். இதைத் தொடர்ந்து வழக்குக்கான திகதியொன்றை LTB இரு பகுதியினருக்கும் அறிவிக்கும்.

இவ்வழக்கிற்குச் செல்வதற்கு முன்னர் இரு தரப்பினரும் Community Legal Services அல்லது Paralegal Services தருபவர்களை அணுகுவது பரிந்துரைக்கப்படுகிறது. இங்குதான் இரு தரப்பும் எடுத்துக்கொண்ட நியாயமான முயற்சிகள் பற்றி ஆராயப்படும். சில வேளைகளில் பிணக்குகள் சுமுகமாகத் தீர்த்துவைக்கப்பட இம்முயற்சிகள் உதவுகின்றன.

விசாரணையின் பின்னர் வாடகை செலுத்துபவரை எழுப்புவதா இல்லையா என்பதை LTB உறுப்பினர் தீர்மானிப்பார். ஒவ்வொரு LTB உறுப்பினரும் இரு தரப்பினரினதும் நிலைமைகளை ஆராய்ந்து தத்தம் வழிகளில் முடிவுகளை அறிவிப்பர். எனவே இரு தரப்பினரும் தத்தம் நிலைப்பாடுகளைப் பிறர் புரிந்துகொள்ளும் முன்வைப்பது அவசியம்.

LTB உறுப்பினர் வாடகை செலுத்துபவரை எழுப்ப மறுக்கும் பட்சத்தில் வாடகை நிலுவையைச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நிர்ணயிப்பார். இதற்கு எதிராக, ஒருவர் N4 படிவத்தில் குறிப்பிட்டபடி 14 நாட்களில் எழும்புவதற்கு உடன்பட்டால் அதே வேளை வாடகை நிலுவை செலுத்தப்படாமலிருந்தால் வீட்டுச் சொந்தக்காரர் தனது நிலுவைப்பணத்தை அறவிட அடுத்த கட்டமாக Small Claims Court இல் வழக்குப் போடவேண்டும்.

வாடகை செலுத்துபவரை எழுப்புவதற்கான உத்தரவு வழங்கப்பட்டால்…

LTB விசாரணையின் பின்னர் தீர்ப்பு வீட்டுச் சொந்தக்க்காரருக்கு சாதகமாக வழங்கப்பட்டால் LTB “Standard Order” என்னுமொரு கட்டளையை வாடகை செலுத்துபவருக்கு வழங்கும். இதன் பிரகாரம் நிலுவையையும் LTB யிற்கான விண்ணப்பப் பணத்தையும் செலுத்தி அவ்விடத்தில் தொடர்ந்தும் சீவிக்க 10 நாட்கள் அவகாசத்தை LTB வழங்குகிறது. இத் தொகையைச் செலுத்தியதற்கான ஆதாரத்தைக் கவனமாக வைத்திருப்பது நல்லது.

இப் 10 நாட்களில் உரிய நிலுவையைச் செலுத்த முடியாத பட்சத்தில் வீட்டுச் சொந்தக்காரர் குடியிருப்பாளரை எழுப்புவதற்கான வழக்கொன்றை நீதிமன்றத்தின் enforcement office இல் பதிய வேண்டும். இதற்குப் பின் நீதிமன்றம் ஒரு அதிகாரியை நியமிக்கும். Sheriff என இவர் அழைக்கப்படுகிறார். அவரே வீட்டின் பூட்டை மாற்றி குடியிருப்பாளரை எழுப்புவத்ற்கு அனுமதி பெற்றவர். வீட்டுச் சொந்தக்காரரோ, LTB யோ, நீதிமன்றமோ அல்லது பொலிஸ்காரரோ இதில் சம்பந்தப்படமாட்டார்கள்.

அனுமதி கிடைத்ததும் தநது வருகை பற்றி Sheriff குடியிருப்பாளருக்கு கடிதம் அனுப்புவார். அந்நாளில் குடியிருப்பவர் முற்று முழுதாக வீட்டைக் காலி செய்யாவிட்டால் இடைநடுவிலேயே வீட்டின் திறப்பைக் கொடுத்துவிட்டு குடியிருப்பாளர் போய்விடவேண்டியதுதான். அதன் பிறகு மீதமான பொருட்களை எடுப்பதற்கு வீட்டுச் சொந்தக்காரர் குடியிருப்பாளருக்கு 72 மணித்தியாலம் கால அவகாசம் கொடுக்கவேண்டும். அதன் பிறகு eviction process முடிவு பெற்றதாகக் கருதப்படும்.

வாடகை செலுத்துவதை இடைநிறுத்தம் செய்தல்

எந்தவொரு காரணங்களுக்காகவும் வாடகையைச் செலுத்த ஒருவர் மறுக்கக்கூடாது. “எனது வீட்டில் சொந்தக்காரர் திருத்தங்கள் எதையும் செய்யவில்லை” என்ற சில காரணங்களைக் காட்டி சிலர் வாடகையைச் செலுத்த மறுப்பதுண்டு. RTA ஒப்பந்தத்தின்படி வீட்டை முறைப்படி பாவிக்க முடியவில்லை என்ற காரணத்துக்காக வாடகையை கொடுக்காமல் நிறுத்த அதிகாரமில்லை.

அதே வேளை வீட்டில் குடிபுகுந்த பின்னரும் வீட்டுச் சொந்தக்காரர் கையெழுத்து வைத்த ஒப்பந்தத்தின் பிரதியொன்றை குடியிருப்பாளருக்குக் கொடுக்க வேண்டும். அது கிடைக்காத பட்சத்தில் குடியிருப்பாளர் எழுத்து மூலம் அதைக் கோர வேண்டும். இப்படிக் கோரிக்கை விடுத்து 21 நாட்களுக்குள் அப் பிரதியை சொந்தக்காரர் தராத பட்சத்தில் கொடுக்கும் வாடகையைத் தற்காலிகமாக நிறுத்த குடியிருப்பாளருக்கு அனுமதியுண்டு. இப்பத்திரம் கையில் கிடைத்தபின்னர் நிறுத்தப்பட்ட வாடகை உட்பட அனைத்து நிலுவையையும் குடியிருப்பாளர் செலுத்திவிட வேண்டும். (Photo by Erik Mclean on Unsplash)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *