ரொறோண்டோவின் அதியுயர் வாடகையினாலும், போதுமான மலிவான குடியிருப்புகள் இல்லாமையாலும் பாதிக்கப்படும் ஒற்றைத் தாய்மாரின் துயரங்களைப் போக்குவதற்காக, அவர்களுக்காகப் பிரத்தியேகமாக மலிவான குடியிருப்புக்களை ஒதுக்கவென ரொறோண்டோ மாநகரசபை புதிய திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளது.

ரொறோண்டோ நகர் மத்தியிலுள்ள றீஜெண்ட் பார்க்கில் அமைக்கப்பட்டுவரும் ‘இவோல்வ்’ (EVOLV) என்ற வாடகைத் தொடர்மாடிக் குடியிருப்பில் இரண்டு படுக்கையறைகளைக் கொண்ட 34 குடியிருப்புகள் ஒதுக்கப்படவுள்ளன. கனடா அடமான மற்றும் வீட்டுக் கூட்டுத்தாபனத்தினால் (Canada Mortgage and Housing Corporation (CMHC)) பரிந்துரைக்கப்படும் வாடகைக் கட்டணத்தின் 80% மட்டுமே இக் குடியிருப்புகளின் வாடகையாக அறவிடப்படும்.

EVOLV toronto housing
மாதிரிக் குடியிருப்பு

ரொறோண்டோவின் தர்ம ஸ்தாபனமான வூட்கிரீன் கொம்யூனிட்டி சேர்விசெஸ், சன் லைஃப் ஃபைனான்சியல், டானியல்ஸ் கோர்ப்பொறேஷன் ஆகிய நிறுவனங்களின் கூட்டான முயற்சியில் கட்டப்பட்டுவரும் இக் கட்டிடம் 25 நிக்கொலஸ் அவெனியூவில் இருக்கிறது. 312 வாடகைக் குடியிருப்புகளைக் கொண்ட 29 மாடிக் கட்டிடம், செப்டம்பர் 2021 இல் இக் கட்டிடம் குடிபுகுவதற்குத் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வீடில்லாமல் அவதிப்படும் அல்லது சமூக உதவிப்பணத்தில் வாழ்ந்துவரும் ஒற்றைத் தாய்மாரை அடையாளம்கண்டு Woodgreen Community Services என்ற தர்ம ஸ்தாபனம் அவர்களுக்கு இவ் வீடுகளை வழங்கவிருக்கிறது.

  • Post category:Real Estate
  • Post published:February 13, 2021