veedu.com

நாமார்க்கும் குடியல்லோம்

Real Estate

கடந்த ஒரு வருடத்தில் ரொறோண்டோவில் வீட்டு விலைகள் 17.9% வீழ்ச்சி!

கடந்த ஒரு வருடத்தில் ரொறோண்டோவில் சராசரி வீட்டு விலைகள் 17.9% த்தால் சரிவடைந்துள்ளன. கடந்த பெப்ரவரி 2022 அளவில் ஒரு வீட்டின் சராசரி விலை $1,334,062 ஆக இருந்தது. பெப்ரவரி 2023 இல் அது $1,095,617 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது என ரொறோண்டோ பிரதேச வீடு விற்பனைச் சபையின் தலைவர் போல் பாரன் தெரிவித்துள்ளார். ரொறோண்டொ பெரும்பாகத்தில் 1988 இற்குப் பிறகு இதுவே அதி வேகமான சரிவெனக் கூறப்படுகிறது.

அதே வேளை சந்தையில் விற்பனைக்கு வரும் வீடுகளின் எண்ணிக்கை சென்ற அவருடத்துடன் ஒப்பிடும்போது 40.9% த்தால் குறைவடைந்துள்ளது. இதனால் வீடுகளை வாங்குபவர்கள் இன்னும் போட்டிகளை எதிர்பார்க்கவேண்டி ஏற்படலாமென அவர் தெரிவித்தார்.

கனடிய மத்திய வங்கியின் வட்டி வீத அதிகரிப்பினால் முதல் தடவையாக வீடுகளை வாங்குபவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைக்கப்பட்டுவிட்டது. அவர்களின் தகமைக்கு சுமார் $7,000,000 வரையிலேயே வீடுகளை வாங்கமுடியும் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

கனடாவின் பண வீக்கத்தைக் குறைப்பதற்காக கனடாவின் மத்திய வங்கி தனது அடிப்படை வட்டி வீதத்தைக் கடந்த வருடம் அதி வேகமாக அதிகரிக்கவேண்டி ஏற்பட்டது. இதனால் சுமார் 8% மாக இருந்த பணவீக்கம் இப்போது 6% த்திற்குக் குறைக்கபட்டுவிட்டது. இதனால் இந்தத் தடவை வட்டியை உயர்த்தப் போவதில்லை என நேற்று (பெப்.08) கனடிய மத்திய வங்கி அறிவித்துள்ளது. ஆரோக்கியமான பொருளாதாரத்தைப் பேணுவதற்கான சராசரி பணவீக்கம் 2% அளவில் இருக்கவேண்டுமெனப் பொருளாதார நிபுணர்கள் கூறுவதுண்டு. எனவே பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும்வரை வட்டி வீதம் குறைக்கப்படுவதற்கான சாத்தியங்கள் இல்லை என நிபுணர்கள் கருதுகின்றனர். இக்காரணத்தால் வீட்டு விலைகள் தொடர்ந்தும் சரிவடைவதற்கான சாத்தியங்களே உண்டு. (Photo by Phil Hearing on Unsplash)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *