veedu.com

நாமார்க்கும் குடியல்லோம்

Politics

கனடாவில் வீடு பற்றாக்குறை: சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க அரசு யோசனை

2022 இல் கற்கை அனுமதி வழங்கப்பட்ட 549,570 சர்வதேச மாணவர்களில் 226,000 இந்தியர்கள் எனவும் இவ்வருடம் ஜூன் மாதம் வரை வழங்கப்பட்ட 238,960 அனுமதிகளில் 96,175 பேர் இந்தியர்கள்

கனடிய புள்ளிவிபரம்

கனடிய பிரதமரின் பதவிக்கே அச்சுறுத்தலாக எழுந்திருக்கும் வீடு பற்றாக்குறைப் பிரச்சினைக்கு சர்வதேச மாணவர்களைத் தேவைக்குமதிகமாக உள்ளெடுத்ததும் ஒரு முக்கிய காரணமென பொதுமக்களும் அரசியல்வாதிகளும் குரலெழுப்ப ஆரம்பித்துள்ளனர். 2022 இல் மட்டும் 800,000 சர்வதேச மாணவர்கள் உள்வர அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர்களில் 226,000 பேர் இந்தியர்களெனவும் கூறப்படுகிறது. 2022 இல் மட்டும் 549,570 இந்திய மாணவர்களுக்கு கற்கை அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக சர்வதேச மாணவர்களின் உள்வரவு எண்ணிக்கையை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது பற்றி ஆராய்ந்து வருவதாக கனடிய வீடு, உட்கட்டுமானம் மற்றும் சமூகங்களின் அமைச்சர் ஷோன் ஃபிறேசர் தெரிவித்துள்ளார்.

“சில கல்வி ஸ்தாபனங்கள் சர்வதேசமாணவர்களின் பரிதாபகரமான நிலையைத் தமது இலாபங்களுக்காகப் பயன்படுத்துகின்றன. எதிர்கால கனடிய குடிமக்களுக்கு தரமான கல்வியைக் கொடுக்காமல் அவர்களை இந்நிறுவனங்கள் சுரண்டுகின்றன. இந்நிறுவனங்களால் நாட்டுக்குள் கொண்டுவரப்படும் மாணவர்களுக்கு போதுமான தங்கு வசதிகளைச் செய்துகொடுப்பதும் அவற்றின் கடமை” என அமைச்சர் ஃபிறேசர் தெரிவித்துள்ளார்.

வீடு பற்றாக்குறை காரணமாக கனடிய பெருநகரங்களில் வாழும் மக்கள் கடும் துன்பங்களை எதிர்கொண்டு வருகின்றார்கள். பெரும்பாலான சர்வதேச மாணவர்கள் பெரு நகரங்களில் இருக்கும் கல்வி ஸ்தாபனங்களில் கல்வி கற்பதால் இந்நகரங்களில் வீட்டு வாடகை உச்சம் பெற்று வருகிறது. இதனால் ஆளும் லிபரல் கட்சி மீதும் பிரதமர் ட்றூடோ மீதும் மக்களிடையே அதிருப்தி அதிகரித்து வருகிறது. இவ்விடயத்தை இதர கட்சிகளும் பெரிதாகத் தூக்கிப் பிடிக்காமைக்குக் காரணம் பெருநகரங்களில் அதிக வாக்குகள் குடிவரவுச் சமூகங்களிடமிருந்தே கிடைக்கின்றன. லிபரல் கட்சி உட்பட மூன்று பிரதான கட்சிகளும் இவ்வாக்குகளிலேதான் தங்கியிருக்கின்றன. இருப்பினும் சர்வதேச மாணவர்களின் வரவு பல வழிகளிலும், குறிப்பாக வாடகை வீடு பற்றாக்குறை, வீட்டு விலை அதிகரிப்பு போன்ற விடயங்களில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என நீண்ட காலமாக நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். இது தொடர்பாகச் சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகளில் லிபரல் கட்சிக்கும் அதன் தலைவர் ட்றூடோவுக்கும் மக்கள் மத்தியில் ஆதரவு சரைவடைந்து வருகிறது.

கனடிய புள்ளிவிபரத் திணைக்களத்தின் 2022 தரவுகளின்படி கல்லூரி / பல்கலைக்கழக இளமானிப் படிப்புக்கு சர்வதேச மாணவரொருவர் வருடமொன்றுக்கு $36,100 டாலர்களைச் செலுத்த வேண்டும். இதே வேளை கனடிய மாணவரின் கட்டணம் வருடத்துக்கு $6,463 டாலர்கள் மட்டுமே. முதுமானிப் படிப்புக்கான கட்டணம் வருடமொன்றுக்கு சர்வதேச மாணவருக்கு $21,000 ஆகவும் கனடிய மாணவருக்கு $7,056 ஆகவும் அறவிடப்படுகிறது. இதில் ஈட்டும் கொள்ளை இலாபம் காரணமாக கனடிய கல்லூரிகள் இந்தியா, ஹொங் கொங், இலங்கை போன்ற நாடுகளில் தமது கிளை அலுவலகங்களை அல்லது தமக்கான உள்ளூர் பிரதிநிதிகளையோ வைத்து நேர்மையற்ற வழிகளில் உறுதிப்படுத்த முடியாத பத்திரங்களுடன் மாணவர்களை அழைத்துவருகின்றன. ஆனால் இப்படி உள்ளெடுக்கப்படும் மாணவர்களுக்கான வதிவிடங்களை அவை ஒழுங்கு செய்து கொடுப்பதில்லை.

இதே வேளை இப்படி கனடாவுக்குள் நுழையும் மாணவர்களை பல வீட்டுச் சொந்தக்காரர்கள் அனுகூலமாகப் பாவிக்கிறார்கள். மாணவர்களுக்கு தலா $600 முதல் $900 வரை வாடகை அறவிடுவதுடன் அவர்கள் எத்தனைபேர் எப்படி நெரிசலாக வாழ்கின்றனர் என்பது குறித்து அக்கறையில்லாதவர்களாகவும் இருக்கிறார்கள். கனடாவில் தற்போது ஒரு படுக்கையறையுடனான குடியிருப்பின் வாடகை $2,078 (ஜூலை 2023) வான்கூவரில் இது $3,000 ஆகவும் இருக்கிறது. கனடாவின் வீட்டு விலை அதிகரிப்புக்கு இதுவும் ஒரு காரணமாக அமைகிறது என நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.

2022 இல் கற்கை அனுமதி வழங்கப்பட்ட 549,570 சர்வதேச மாணவர்களில் 226,000 இந்தியர் எனவும் இவ்வருடம் ஜூன் மாதம் வரை வழங்கப்பட்ட 238,960 அனுமதிகளில் 96,175 பேர் இந்தியர் எனவும் புள்ளிவிபரம் கூறுகிறது. இக்காலகட்டத்தில் ஷோன் ஃபிறேசரே குடிவரவு அமைச்சராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *