veedu.com

நாமார்க்கும் குடியல்லோம்

கனடாவில் வீடு வாங்கும் வெளிநாட்டவர் மீது மேலதிக வரி – மத்திய அரசு யோசனை

அதிகரித்து வரும் வீட்டு விலைகளைக் குறைக்கும் திட்டங்களில் ஒன்றாக, வெளிநாட்டவர் கனடாவில் வாங்கும் சொத்துக்களின் மீது மேலதிக வரியை விதிக்க கனடிய மத்திய அரசு திட்டமிடுகிறது.

இந்த வாரம் பாராளுமன்றத்தில் லிபரல் அரசு வெளியிட்ட இலையுதிர்கால பொருளாதார அறிக்கையில், அடுத்த வருடம் முதல் இம் மேலதிக வரியை விதிப்பதற்கான யோசனைகள் உண்டென கனடாவின் நிதியமைச்சர் கிறிஸ்டீனா ஃபிரீலாண்ட் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

கனடாவில் வீட்டு விலைகள் அதிகரிப்பின் பின்னால் வெளிநாட்டுக் காரரின் வீடுட்டுக் கொள்வனவு ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது எனக் கடந்த சில வருடங்களாகப் பல தரப்புக்களும் கூறி வந்தாலும், வெளிநாட்டுப் பணத்தை நாட்டுக்குள் கொண்டுவருவதில் உள்ள சில அனுகூலங்களால் அரசுகளும், இதனால் பலன் பெற்ற வங்கிகளும் இவ் விடயத்தில் அதிக அக்கறை காட்டவில்லை. இதன் விளைவாக கனடிய மக்கள், குறிப்பாக இளைய தலைமுறையினர் வீடுகளை வாங்க முடியாத நிலையும், வாடகைக்குப் பெற் முடியாத நிலையும் ஏற்பட்டது. இதன் காரணமாக எழுந்த அழுத்தங்களை இப்போது மத்திய, மாநில அரசுகள் உணரத் தொடங்கியுள்ளன.

பிரிட்டிஷ் கொலம்பியா, ஒன்ராறியோ, பிறின்ஸ் எட்வேட் ஐலண்ட் ஆகிய மாகாணங்களில் வெளிநாட்டவர்கள் வீடுகளை வாங்குவது கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருவதும் இதனால் மக்களின் எதிர்ப்பு அதிகரிப்பதும் அரசுகளை இவ்விடயத்தில் நடவடிக்கை எடுக்கத் தூண்டியுள்ளன.

கனடாவின் அரசியல் ஸ்திரம், பொருளாதாரக் கொள்கை, இலகுவான விதிகள் ஆகியவற்றால் கவரப்பட்டு ஈரான், சீனா, ரஷ்யா போன்ற பல நாடுகளிலுள்ள செல்வந்தர்கள் தமது பணத்தைப் பாதுகாக்க கனடாவில் சொத்துகளில் மீது முதலிட்டு வருகிறார்கள்.

கடந்த வருடம் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண அரசு விதித்த இலாபமீட்டுவதற்கென வீடுகளை வாங்குபவர்கள் மீதும் (speculative buying), வெறுமையாக இருக்கும் வீடுகள் மீதும் (vacancy) வரிகளைத் தொடர்ந்து அம் மாகாணம், கடந்த வருடம் மட்டும், $115 மில்லியன் வருமானத்தைப் பெற்றுள்ளது. இதன் நேரடி விளைவாக 2019 முற்பகுதியில் மட்டும் பிரிட்டிஷ் கொலம்பியாவில் வீட்டு விலைகள் 5.6% த்தால் சரிவடைந்திருந்தன. இதைப் புகழ்ந்த பிரதமர் ஜஸ்டின் ட்றூடோ, மத்திய அரசும் இப்படியான திட்டத்தைக் கொண்டுவரவேண்டுமெனக் கடந்த வருடம் தெரிவித்திருந்தார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் வீடுகளை வாங்கும் வெளிநாட்டுக்காரர்கள் அங்கு வசிப்பதில்லையாதலால் வருமான வரிகளை அவர்கள் செலுத்துவதில்லை. இக் காரணங்களினால் அவர்கள் வாங்கும் வீடுகளுக்கு ‘உரிமை மாற்று வரி’ யை (transfer tax) மாகாண அரசு விதிக்கிறது. இதுவும் அரசின் வருமானத்தை அதிகரிக்க உதவுகிறது.

அடுத்த வருடம் மத்திய அரசும் இப்படியான திட்டத்தை நடைமுறைப்படுத்தினால், அரசுக்கு வருமானம் அதிகரிக்கும் அதே வேளை, வீட்டு விலைகள் சரிவதற்கான வாய்ப்புகளுமுண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *