கனடாவில் வெளிநாட்டார் வீடு வாங்கத் தடை
தற்காலிக வதிவிட உரிமையுள்ளவர்களுக்கும், வெளிநாட்டு மாணவர்களுக்கும் விசேட அனுமதி
ஜநவரி 2023 முதல் கனடாவில் வெளிநாட்டார் வீடுகளை வாங்க முடியாது. கடந்த சில வருடங்களாக வீட்டுச் சந்தையில் ஏற்பட்ட பாரிய விலை அதிகரிப்பிற்கு வெளிநாட்டார் முதலீடுகளும் ஒரு காரணம் என்ற சந்தேகத்தினால் அரசாங்கம் இந் நடவடிக்கையை எடுத்திருக்கிறது எனக் கூறப்படுகிறது.
2022 ல் கொண்டுவரப்பட்ட C-19 சட்டமூலத்தின் பிரகாரம் இச்சட்டம் நடைமுறைக்கு வருகிறது.
கடந்த சில வருடங்களாக மத்திய அரசு நடைமுறைப்படுத்திவந்த ‘குறைந்த வட்டி வீத’ பொருளாதார / நிதிக் கொள்கையே வீட்டுச் சந்தையை இந்நிலைக்குக் கொண்டு வந்தது எனப் பலரும் கூறிவரும் நிலையில் வெளிநாட்டார், குறிப்பாகச் சீனா, ஈரான், ரஸ்யா போன்ற நாடுகளிலுள்ள முதலீட்டாளர்கள் கனடிய சட்டங்களிலுள்ள ஓட்டைகளைப் பாவித்து தமது முதலீடுகளைப் பாதுகாக்க கனடிய வீட்டுச் சந்தைகளில் முதலீடு செய்திருந்தனர் எனவும் இதனாலேயே வீடுகளின் விலை பாரிய உயற்சியைக் கண்டது எனவும் பலர் கண்டனங்களை எழுப்பி வந்தனர். குறிப்பாக இவ்வீட்டு விலை அதிகரிப்பினால் வீடுகளின் வாடகைகளும் கூடவே உயர்ந்தன. இதனால் கனடிய இளைய சமுதாயம் கல்விகளை முடித்தபின் வீடுகளை வாங்கவோ அல்லது வாடகைக்கு பெறவோ முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதன் காரணமாக எழுந்த அழுத்தங்களினால் அரசாங்கம் இப்போது வீட்டு விலைகளைக் கட்டுப்படுத்த சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வெளிநாட்டர் வீடுகள் வாங்குவதைத் தடைசெய்வது அதிலொன்று.
இச்சட்டத்தினால் கனடாவில் குடியுரிமை பெறாது நிரந்தர வாழுரிமை பெற்றவர்களும், கனடாவில் தற்காலிகமாக வாழ்ந்துவரும் மாணவர்கள் போன்றோரும் பாதிக்கப்படமாட்டார்கள். அத்தோடு இச் சட்டம் தற்காலிகமானது எனவும் குறைந்தது 2 வருடங்களுக்காவது இது நீடிக்கும் எனவும் கூறப்படுகிறது.
கடந்த சில வருடங்களாக வான்கூவர், ரொறோண்டோ போன்ற நகரங்களில் வெளிநாட்டுக்காரர் பெருமளவு வீடுகளை முதலீட்டுக்காக வாங்கி வைத்திருந்தனர். இதனால் வீடுகளின் விலை அதிகரித்ததைத் தொடர்ந்து உள்ளூர் முதலீட்டாளர்களும் வீடுகளில் முதலிட முற்பட்டனர். வீடுகளை வாங்குபவர்களில் ஏறத்தாள 20 % மானவர்கள் முதலீட்டாளர்கள் என அறிக்கையொன்று தெரிவிக்கிறது.
இருப்பினும் கடந்த காலங்களில் கனடிய அரசு பின்பற்றிய ‘குறைந்த வட்டிக்’ கொள்கையே இம் முதலீட்டாளர்களை ஊக்குவித்தது என்பதைப் பலர் தொடர்ந்தும் கண்டித்து வந்திருந்தனர் எனினும் அரசு அதை உதாசீனம் செய்து வந்தது. இதன் ஒரு பக்க விளைவாக நாட்டின் பண வீக்கம் அதிகரித்தது. இப்போது வட்டி வீதத்தைப் பலதடவைகள் அதிகரித்து பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு முனைகிறது. ஆனால் அதற்கேற்ப சம்பளங்களும் அதிகரிக்காமையால் பெரும்பாலானோர் வீடுகளை வாங்க முடியாமல் திண்டாடுகின்றனர்.
அரசாங்கத்தின் வட்டி உயர்வு முயற்சியால் பல நகரங்களில் வீடு விற்பனையிலும் வீட்டின் விலைகளிலும் சரிவுகள் ஏற்பட்டிருந்தாலும் சந்தையில் விற்பனைக்குப் போதுமான வீடுகள் இல்லாமையால் அரசாங்கம் எதிர்பார்த்த அளவுக்கு வீட்டு விலைகளில் சரிவு ஏற்படவில்லை. இதனால் 2024 இலும் வட்டி வீத உயர்வுகளை அரசாங்கம் அறிவிக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.