கனடா: ட்றூடோவின் ஆட்சி முடிவுக்கு வருகிறதா?
இது அரசுகள் கவிழும் காலம்
சிவதாசன்
கனடிய துணைப் பிரதமரும், நிதியமைச்சரும், பிரதமர் ட்றூடோவின் ஒரு கால நம்பிக்கை நடசத்திரமுமான கிறிஸ்டியா ஃப்றீலாண்டின் திடீர் பதவி விலகல் பலருக்கு அதிர்ச்சியைத் தந்திருக்கிறது. ‘இதற்கேன் இவ்வளவு காலம் எடுத்தது?’ எனச் சிலர் விசனம் கொள்வதும் தெரிகிறது. தேன் நிலவு நீண்ட நாட்கள் ருசிப்பதில்லை.
ஃப்றீலாண்ட் தனது பதவி விலகலை திங்கள் (டிசம்பர் 16) அன்று அறிவித்திருந்தாலும் அதற்கு மூன்று நாட்களுக்கு முன்னரே (வெள்ளி) பிரதமர் ட்றூடோ அவரைப் பதவி விலகும்படி கேட்டுக்கொண்டிருந்தார் எனவும் கூறப்படுகிறது. ட்றூடோ அரசினால் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ‘ஜி.எஸ்.ரி. விடுமுறை’ விடயத்தில் ஃப்றீலாண்டிற்கு உடன்பாடில்லை எனவும் அவரது விருப்பத்திற்கு எதிராகவே ட்றூடோ இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறார் எனவும் இதுவே பதவி விலகலுக்குக் காரணமெனவும் கூறப்படுகிறது. ஆனாலும் ஃப்றீலாண்ட்டின் நிதி அமைச்சின்போது நடைமுறைப்படுத்தப்பட்ட பல பொருளாதாரக் கொள்கைகள் ட்றூடோ அரசு மக்களின் நம்பிக்கையை இழந்ததற்குக் காரணமாகின என்பதுவும் காரணமாகக் கூறப்படுகிறது.
என்ன இருந்தாலும் அடுத்த தேர்தலில் ட்றூடோவின் கட்சி தோற்றுப்போகப் போவது ஓரளவு உறுதி. குடிவரவு, வீட்டுரிமை போன்ற விடயங்களில் ட்றூடோ அரசு தற்கொலை செய்துகொண்டமையை விளக்க ஒருவருக்கு கலாநிதிப்பட்டம் தேவையில்லை. வீடமைப்பு அமைச்சர் சோன் ஃப்றேசர் முன்னர் குடிவரவு அமைச்சராக இருந்தபோது ஒரு மில்லியனுக்கு மேல் குடிவரவாளர்கள் அகதிகளாகவும், மாணவர்களாகவும், தற்காலிக வதிவிடக்காரர்களாகவும் வந்து குவிந்தார்கள். கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் உள்நாட்டு மாணவர்களிடம் பெறும் கட்டணத்தை விட ஆறு மடங்கு அதிகம் பெற்று போலி பத்திரங்களுடன் ‘மாணவர்களை’ இறக்குமதி செய்ததன் விளைவாக அவர்களை நம்பி பல வீட்டு முதலீட்டாளர்கள் நான்கு, ஐந்து என வீடுகளை வாங்கி வாடகைக்கு விட ஆரம்பித்ததும், போலி வேலைக்கடிதங்களுடன் இவர்களுக்கு அடமானம் கொடுத்து தெரிந்தும் தெரியாமலும் வங்கிகளும் சேர்ந்து போலிப் பொருளாதாரத்தை வளர்த்துவிட்டதன் காரணமாகவே இப்போது ட்றூடோ அரசு விழி பிதுங்கி நிற்கிறது. இறக்குமதி செய்யப்பட்ட ‘இந்திய’ மாணவர்களும் தம் பாட்டிற்கு உணவு வங்கிகளில் வரிசைகளை நிரப்ப பழைய குடிவரவாளர் உட்பட கனடியர்கள் பலரும் ட்றூடோ எதிரிகளாகிவிட்டனர். இதனால் சும்மா இருந்துகொண்டே கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் புரட்சியை மேற்கொண்டு ஆட்சியைக் கைப்பற்றப் போகிறார்.
ட்றூடோவைப் பகைப்பவர்களுக்கு என்ன நடக்கும் என்பது அவரது கட்சியிலுள்ள பலருக்கும் தெரியும். அவருக்கு நெருக்கமாக இருந்தால் நெற்றியால் கொஞ்சிக்கொள்வார். வெறுபிற்குக் காரணமாகிவிட்டால் விட்டு விட்டு வேறு வேலைகளைப் பார்க்கவேண்டியது தான். பழிவாங்குவதில் மகா கெட்டிக்காரர்.
ட்றூடோ பதவி விலகவேண்டுமென கடந்த சில மாதங்களில் அவரது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் புறப்பட்டார்கள். ஆனாலும் ‘நான் எங்கும் போகப் போவதில்லை’ என அவர் கதிரையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டிருந்தார். ஆனால் இப்போது அப்பிடி இப்போது தளர்கிறது போலத்தான் தெரிகிறது. அதனால் அக்கதிரையில் ஆசை வைத்திருக்கும் சிலரிடையே பனிப்போர் மூண்டிருக்கிறது என்கிறார்கள். இவர்களில் , சில காலத்திற்கு முன்னர், முன்னணியில் இருந்தவர் ஃப்றீலாண்ட். ஆனால் ட்றூடோவுக்கும் ஃப்றீலாண்ட்டிற்குமிடையே வெளிவிவகார அமைச்சர் ‘இளவரசி’ மெலனி ஜோலி வந்து புகுந்துவிட்டதாகவும் ட்றூடோவுக்கும் இவருக்குமிடையிலான மிக நெருக்கமான நட்பினால் ஃப்றீலாண்டின் இடைவெளி அதிகரித்துவிட்டது எனவும் கொசிப்பரசர்கள் கூறுகிறார்கள்.
ஃப்றீலாண்ட் ஒரு சிறந்த தலையாட்டியாக நீண்டகாலம் இருந்துவந்தவர். அப்படியிருந்தவரைத் திடீரென்று பதவி விலகும்படி ட்றூடோ கேட்டிருக்கிறார். அதுமட்டுமல்லாது கால அவகாசம் கொடுக்காமல் திங்களன்று குளிர்கால பொருளாதார அறிக்கையைச் சமர்ப்பிக்கும்படி ஃப்றீலாண்டிற்குக் கட்டளையிட்டதாகவும் கூறப்படுகிறது. இப்பொருளாதார அறிக்கையை முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் மார்க் கார்ணி ஏற்கெனவே தயாரித்து வைத்திருந்ததாகவும் கார்ணிக்கும் ஃப்றீலாண்டிற்குமிடையில் ஏற்கெனவே உரசல் இருந்ததாகவும் தெரிகிறது. எனவே ஃப்றீலாண்டின் வெளியேற்றம் முற்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று என ஆய்வாளர் நம்புகிறார்கள்.
சரி இது ட்றூடோ அரசின் இறுதி நாட்களா? ஃப்றீலாண்டைத் தொடர்ந்து சோன் ஃபிறேசரும் தான் அரசியலிலிருந்து ஒதுங்கப் போவதாக அறிவித்திருக்கிறார். இறுதியாக நடைபெற்ற லிபரல் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கூட்டத்தில் சுமார் 15 உறுப்பினர்கள் ‘ட்றூடோ’ பதவி விலகவேண்டுமெனக் கோரியுள்ளனர். நடந்து முடிந்த இரண்டு இடைத்தேர்தல்களில் லிபரல் கட்சி தோல்வியைத் தழுவியிருக்கிறது. ‘ஏற்கெனவே இளகிப்போயிருந்த மலையுச்சி மண் விரைவில் உடைந்து சரியப்போகிறது; இன்னும் சில நாட்களில் அரசாங்கம் விழுந்துவிடும்’ என்கிறார்கள் ஆய்வாளர்கள். வலதுசாரி ஊடகங்கள் நீண்டநாட்களாகச் சங்குகளை ஊத ஆரம்பித்துவிட்டன. போதாததற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் பொலியேர்வும் சிங்கும் ட்றூடோவின் தலையைக் கோரி சபதமெடுக்கத் தொடங்கிவிட்டார்கள்.
என்ன இருந்தாலும் ட்றூடோவுக்கு இது நல்ல காலமென்றுதான் எண்ணத் தோன்றுகிறது. ட்றூடோ ஒரு மிதவாதி. தீவிரமாக வலதுபக்கம் நகர்ந்துகொண்டிருக்கும் உலகத்தை அவரால் எதிர்கொள்ள முடியாது. பெண்டூலம் திரும்பியும் இடதுபக்கமாக நகருமட்டும் அவர் ஓய்வெடுப்பது தான் நல்லது. அதற்குள் அவரது வாரிசுகள் முடிக்குரிய அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டுவிடும். தெற்கே ட்றம்பர் இறக்குமதி வரி வாளைச் சுழற்றிக்கொண்டு தற்கொலைக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார். அவரது பொருளாதாரக் கொள்கையால் பாதிப்புக்குள்ளாகப் போகும் கனடாவை வழிநடத்துவது பொலியேர்விற்குப் பெரும் சவாலாக இருக்கப் போகிறது. இரு நாடுகளினதும் எல்லைக்காவலர்கள் பிசியாக இருக்கப்போகிறார்கள். இதே வேளை கனடாவின் கமக்காரர்களும், தொழிலதிபர்களும் வேலைக்கு ஆட்களில்லாமல் சீன றோபோக்களை இறக்குமதி செய்து அதன் பொருளாதாரத்தை முன்னேற்றப் போகிறார்கள்.
ட்றம்பரின் ‘மேக் அமெரிக்கா சிமோல் எகய்ன்’ வெற்றிபெற வாழ்த்துக்கள் (Image Credit: Canadian Press)



