veedu.com

நாமார்க்கும் குடியல்லோம்

கனடா: நீங்கள் அரசாங்க உதவிப் பணம் பெறுபவர்களா? வருமானவரித் திணைக்களத்திடமிருந்து உங்களுக்கு கடிதம் கிடைக்கலாம்

கனடிய அரசிடமிருந்து ஏதோ ஒருவகையில் நீங்கள் உதவிப்பணம் பெறுபவராக இருந்தால் உங்களுக்கு வருமான வரித் திணைக்களத்திடமிருந்து விரைவில் கடிதமொன்று வரலாம். அதைக் கண்டு பயப்பட்டு, அதி உடைக்காமல் அப்படியே வருடம் வருடமாக உங்கள் வருமானவரியை விண்ணப்பிக்கும் ‘அக்கவுண்டனிடம்’ கொண்டு ஓடாத் தேவையில்லை – அட் லீஸ்ட் உடனடியாக.

அப்ப்டி இந்தக் கடிதத்தில் என்னதான் இருக்கிறது? ஒரு அட்வைஸ். இக் கடிதத்தை உதாசீனம் செய்துவிடாதீர்கள். அடுத்த சில மாதங்களில் உங்களுக்கு வரவிருக்கும் இக் கடிதத்தில் – நீங்கள் உதவிப் பணம் பெறுபவராக இருந்தால் – உங்களுக்குத் தரப்படும் உதவிப்பணம் பற்றிய விபரங்களை வருமான வரித் திணைக்களம் மீளாய்வு செய்யப்போவதாக அறிவிக்கும்.

இக் கடிதத்துடன் ஒரு கேள்விக் கொத்தும் இணைக்கப்பட்டிருக்கும். அதில் நீங்கள் பெற்றுவரும் உதவிப்பணம் பற்றிய விபரங்கள் மீளாய்வு செய்யப்படவுள்ளதாகக் குறிக்கப்பட்டிருக்கும். அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் பதிலளிப்பது அவசியம். ஏனெனில் பொய்த் தகவல்களைச் சொல்லி உதவிப்பணம் பெறுபவர்கள் பற்றிய விபரங்களை அவர்கள் இப்போது கிண்டியெடுத்து தயாராக வைத்திருக்கிறார்கள். எனவே உங்களுக்கு இப்போ வரும் கடிதம் கிட்டத்தட்ட பொய் சொல்பவர்களைக் காட்டிக்கொடுக்கும் கருவி (lie detector). எனவே அக் கேள்விக்கொத்தில் இருக்கும் கேள்விகளுக்கு உண்மையான பதில்களையே கொடுக்க வேண்டும்.

இக் கேள்விகொத்துக்கான பதில்களை மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது வருமானவரித் திணைக்களத்தின் இணையத்தளம் மூலமாகவோ (My Account portal) அனுப்பிக் கொள்ளலாம். உங்கள் பதில்களை ஆராயும்போது அரசாங்கத்திடமிருந்து நீங்கள் பெறும் பணம் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் என்பதைத் திணைக்களம் உறுதிப்படுத்துகிறது எனவே அவ்விடயத்தில் பயப்படத் தேவையில்லை.

நீஙகள் பதிலளிக்காவிட்டால்?

வருமான வரித் திணைக்களத்தின் கடிதத்துக்குப் பதிலளிக்காவிட்டால் அது உங்களைப் பற்றித் தாம் சேகரித்து வைத்திருக்கும் தகவல்களைக் கொண்டு உங்களது உதவிப்பணத்தின் தொகையைக் குறைக்கவோ அல்லது முற்றாக நிறுத்தவோ அதற்கு அனுமதியுண்டு. எனவே தான் இக் கடிதத்தை உதாசீனம் செய்யக்கூடாது என்பதோடு விரைவாக அதற்குப் பதிலளித்தலும் அவசியம்.

வேண்டுமென்றோ அல்லது வெருமானவரித் திணைக்களத்தின் தெளிவற்ற வரைமுறைகளைத் தவறாகப் புரிந்துகொண்டதனாலோ உதவிப்பணம் பெறுவதற்குத் தகுதியற்ற பல கனடியர்கள் பணத்தைப் பெற்றிருக்கிறார்கள். இப்படியானவர்கள் தாம் பெற்ற பணத்தைத் திருப்பித் தரும்படி வருமானவரித் திணைக்களம் கேட்கும்.

வருமானவரித் திணைக்களம் யார் யாரைக் குறி வைக்கிறது?

ஒருவரது சமூக அந்தஸ்து அல்லது அவரது இனம் அப்படி என்று பாரபட்சம் காட்டி, குறிப்பிட்ட் ஒரு சாராரைக் குறிவைத்து இந்த மீளாய்வு செய்யப்படவில்லை என்பதை திணைக்களம் உறுதி செய்திருக்கிறது. ஆனால் ஒருவரது வாழ்வில் அவரது வருமானத்தைப் பாதிக்கும் சம்பவங்கள் திடீரென நிகழ்ந்திருந்தால் அதைத் தொடர்ந்து அவர் உதவிப்பணம் பெறுபவராக இருந்தால் அப்படியானவர்களின் கோப்புகள் மீளாய்வுக்குள்ளாகும். சிரமங்கள் ஏதுமின்றி அவர்களுக்குப் பணம் கிடைக்கிறதா என்பதை அறிவதும் அர்சாங்கத்தின் இக் கேள்விக்கொத்தின் ஒரு நோக்கம். எனவே இக் கடிதத்துக்குப் பதிலளிப்பது பலவழிகளிலும் நன்மை பயக்கும் ஒன்று எனப்படுகிறது.

இக்கடிதத்துக்குப் பதிலளிக்க மேலும் கால அவகாசம் தேவைப்பட்டல் அக் கடிதத்தில் காணப்படும் தொடர்பிலக்கத்தில் தொடர்புகொண்டு அவகாசத்தைப் பெற முடியும். உங்களது பதில் கிடைக்கப்பெற்று 45 நாட்களுக்குள் மீளாய்வின் பெறுபேறுகள் உரியவருக்கு அனுப்பி வைக்கப்படுமென வருமானவரித் திணைக்களம் கூறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *