கனடா வட்டி வீதத்தை உயர்த்துகிறது
அக்டோபரில் மேலும் 0.5% உயரலாம்?
கனடிய மத்திய வங்கி இன்று தனது அடிப்படை வட்டி வீதத்தை 0.75% ஆல் அதிகரித்திருக்கிறது. இதனால் RBC, TDCT, BMO, BNS, CIBC ஆகிய கனடிய வர்த்தக வங்கிகளும் தமது முதன்மை (Prime) வட்டி வீதங்களை உயர்த்தியுள்ளன. ஒவ்வொரு வர்த்தக வங்கிகளும் தமது முதன்மை வட்டி வீதத்தைத் தாமே தீர்மானித்துக் கொள்வதால் அவை கொடுக்கும் அடமான மற்றும் கடன் வட்டி வீதங்கள் வங்கிகளுக்கு வங்கி மாறுபடுகின்றன. இருப்பினும் சராசரியாக இவற்றின் முதன்மை வட்டி வீதம் 4.7% த்திலிருந்து 5.45% மாக அதிகரித்திருக்கிறது. நாளை (வியாழன்) இவ்வதிகரிப்பு நடைமுறைக்கு வருகிறது.
கனடிய மத்திய வங்கியின் முதன்மை வட்டி வீதம் இதுவரை 2.5% மாக இருந்து இப்போது 3.25% த்திற்கு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. கனடாவின் கட்டுக்கடங்காத பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் மத்திய வங்கி தனது முதன்மை வீதத்தை அதிகரிக்க ஆரம்பித்தது. இது ஐந்தாவது அதிகரிப்பாகும். இவ்வதிகரிப்பினால் மாறுவீத அடமானக்கடன்கள் (Variable Rate Mortgages (VRM)) மற்றும் வீட்டை அடமானமாக வைத்துப் பெறப்படும் அத்தாட்சிக் கடன்கள் (Home Equity Line of Credits) ஆகியவற்றைப் பாதிக்கும். ஆனால் மாறா வட்டி வீதத்தில் (Fixed Rate) பெறப்பட்ட கடன்களைப் பாதிக்காது.
இவ்வட்டி உயர்வு மேலும் தொடர வாய்ப்புண்டு என மத்திய வங்கி ஆளுனர் ரிஃப் மக்லெம் தெரிவித்துள்ளார். தற்போது இருக்கும் பணவீக்கம் தொடருமானால் அக்டோபர் மாதத்தில் இன்னுமொரு 0.5% உயர்வை எதிர்பார்க்கலாம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த உயர்வோடு அபிவிருத்தியடைந்த நாடுகளில் கனடாவே அதிக முதன்மை வட்டி வீதத்தைக் கொண்டதாக இருக்கிறது.
பண வீக்கம் 2% மாக இருப்பதே நாட்டின் பொருளாதாரம் சுமுகமான நிலையில் இருக்கிறது என்பதற்கு அர்த்தமாகும். ஆனால் கனடாவின் பணவீக்கம் தற்போது சுமார் 7%த்தைத் தாண்டிவிட்டது. இதற்கு காரணம் ரஸ்ய – யூக்கிரெய்ன் போராக இருந்தாலும் கோவிட் காரணமாகச் சரிந்த சீன பொருளாதாரம் மீட்கப்படுவதற்கு முன்னர் போரின் பாதிப்பு அதை மேலும் மோசமாக்கிவிட்டிருக்கிறது. வருட முடிவில் பண வீக்கம் 4% மாகக் குறையும் என நிபுணர்கள் எதிர்பார்க்கிறார்கள்.