கனடா | வட்டி வீதம் விரைவில் அதிகரிக்கலாம் – பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை!
எதிர்பார்த்ததை விட விரைவில் கனடிய வங்கிகள் தமது வட்டி வீதத்தை அதிகரிக்கக்கூடிய சூழ்நிலை உள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
நடமாட்ட முடக்கம் தீவிரப்படுத்தப்பட்ட காலத்தில்கூட, கனடாவின் பண்ட உற்பத்திகள் மற்றும் சேவைகளின் பெறுமதி (GDP) எதிர்பார்த்ததைவிட வேகமாக வளர்ந்திருப்பதனால் தாம் இதை எதிர்பார்ப்பதாக வெள்ளியன்று சந்தித்த கனடாவின் பெரிய வங்கிகளின் பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளார்கள்.
பண்டங்களினதும் சேவைகளினதும் பெறுமதி அதிகரிக்கும்போது மக்களின் பணத் தேவைகள் (demand) அதிகரிப்பதால் அதை வழங்கும் (supply) நிதி நிறுவனங்கள் தமது பண வழங்கலைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்காக வட்டி வீதத்தை அதிகரிக்க வேண்டி ஏற்படுகிறது.
கோவிட் பெருந்தொற்றுக் காரணமாக பொருளாதாரத்தைச் சற்றுத் தளர்த்தி நிறுவனங்களும் மக்களும் பணமுடையால் அவதிப்படாமல் இருப்பதற்காக கனடிய மத்திய வங்கி வட்டி வீதத்தைக் கிட்டத்தட்ட பூச்சியத்துக்குக் கிட்டே வைத்திருந்தது. பொருளாதார இறுக்கம் 2023 வரை நீடிக்கலாம் என அது அஞ்சியது. ஆனால் 2020 இன் கடைசிக் காலாண்டில் GDP எதிர்பாராத அளவுக்கு முன்னேறியிருந்தது. இதன் காரணமாக விரைவில் வட்டி வீதத்தை அதிகரிக்க மத்திய வங்கி தள்ளப்படுமென இந் நிபுணர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
பொருளாதாரத்தைச் சிரமமின்றி நகர்த்துவதற்காக, கடந்த வருடம் மார்ச் முதல் கனடிய மத்திய வங்கி தனது ‘இரவு வட்டி வீதத்தை’ 0.25% ஆக வைத்துக்கொண்டிருக்கிறது. (கனடிய வங்கியிலிருந்து இதர நிதி நிறுவனங்கள் நாள் வட்டிக்குப் பணம் பெறும் வீதத்தை overnight lending rate என்பார்கள்). வர்த்தக வங்கிகள் இப்படிக் குறைந்த வட்டிக்குப் பெற்ற பணத்தை குறைந்தது 2% அதிகமாக வைத்துத் தமது வாடிக்கையாளருக்கு வழங்குகின்றன.
கோவிட் பெருந்தொற்றினால் சிதைக்கப்பட்ட பொருளாதாரம் நிவர்த்தி செய்யப்படும்வரை மத்திய வங்கி தனது நாள் வட்டியை அதிகாரிக்காமல் வைத்துக்கொண்டிருக்கிறது. தற்பொழுது நடைபெறும் நகர முடக்கங்கள் மேலும் பொருளாதாரத்தைச் சிதைக்கலாம் என்பதனால் 2023 வரை பொருளாதாரம் புத்துயிர் பெறும் என அரசு எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால் அது எதிர்பார்த்ததைவிட பொருளாதார வளர்ச்சி அதிகமாக இருக்கிறது.
கடந்த வெள்ளியன்று வெளியிடப்பட்ட புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கைப்படி, கடந்த காலாண்டின் வளர்ச்சி 8% த்தைத் தாண்டியிருந்தது. அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு 4.8% மாகும்.