Real Estate

கனடா: வீட்டு விலைகளில் பாரிய சரிவு!

2019 இல் வட்டி வீதம் மிகவும் குறைந்திருந்தபோது வீடுகளை வாங்கியவர்களும், புதிய அடமானக் கடன்களைப் பெற்றவர்களும் அக்கடன்களின் ஐந்து வருட தவணை முடிவான 2024 இல் கடன்களைப் புதுப்பிக்க வேண்டி ஏற்பட்டது. ஆனால் இப்போதுள்ள வட்டி வீதம் 2019 இல் இருந்ததை விட பல மடங்குகள் அதிகரித்துவிட்டபடியால் அவர்களின் மாதாந்த கட்டுப்பணமும் பன்மடங்குகளால் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பல வீட்டுச் சொந்தக்காரர்கள் தமது வீடுகளை விற்க நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் என வீட்டுச் சந்தையை உற்றுக் கவனித்துவரும் வங்கிகளும் பொருளாதார நிபுணர்களும் கவலை தெரிவித்துள்ளனர். இக்காரணத்தினால் ரொறோண்டோ பெரும்பாகத்தில் விற்பனைக்காக விடப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரித்திருக்கிறது எனவும் இப்படியே போனால் அடுத்த வருடம் வீடுகளின் விலைகளில் பாரிய சரிவு ஏற்படலாமெனவும் அவர்கள் எச்சரிக்கிறார்கள்.

இந்நிலைமையை எதிர்பார்த்து பல வங்கிகளும் பொருளாதார நிபுணர்களும் வட்டி வீதத்தைக் குறைக்கும்படி அரசாங்கத்திற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னரேயே ஆலோச்னை வழங்கியிருந்தும் பணவீக்க அதிகரிப்பைக் காரணம் காட்டி அரசாங்கம் வட்டி வீதக் குறைப்பைப் பின்போட்டு வந்தது. கடந்த சில மாதங்களில் அது வட்டி வீதத்தைக் குறைத்திருந்தாலும் அதனால் வீட்டுச் சந்தையில் குறிப்பிடக்கூடிய மாற்றம் எதையும் கொண்டுவர முடியவில்லை. அதே வேளை வீட்டு வாடகைக் குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையும் குறைந்துகொண்டு போவதால் முதலீட்டுக்கென வீடுகளை வாங்கியவர்கள் அடமானம் செலுத்த முடியாமல் தமது முதலீட்டு வீடுகளை விற்கவேண்டிய நிலைமைக்குத் தள்ளப்ப்ட்டுள்ளனர்.

நிபுணர்களின் கருத்துக்களின்படி அடுத்த வருடம் மட்டும் $300 பில்லியன் பெறுமதியான அடமானக் கடன்கள் புதுப்பித்தலுக்குத் தயாராகின்றன. இக்கடன்களில் சில முதலீட்டாளர்களுடையது. இவர்களில் பெரும்பாலானோர் கடன்களை மீளச் செலுத்த முடியாது வீடுகளை வங்கிகளிடம் மீள ஒப்படைத்து விடும் சாத்தியமுண்டு என கோஸ்டார் குழுமத்தின் முதன்மை பொருளாதார நிபுணர் கார்ள் கோமேஸ் தெரிவித்துள்ளார்.

தொடர்மாடிக் குடியிருப்புக்களின் (கொண்டோமினியம்) உடமையாளர்களே பெரும்பாலான அடமானக் கடன் சிக்கல்களுக்கு உள்ளாகிறார்கள் எனவும் தற்போது விற்பனைக்காகச் சந்தையில் இருக்கும் குடியிருப்புகள் அதியுச்சமாக உள்ளன எனப்படுகிறது. ஆனாலும் அவற்றை வாங்குவதற்கு ஒருவரும் முன்வருகிறார்கள் இல்லை எனவும் சில குடியிருப்புகள் 5 மாதங்களுக்கு மேல் சந்தையில் இருக்கின்றன எனவும் அறியப்படுகிறது. ரொறோண்டோ வீடு விற்பனை முகவர்களின் சபையின் கணிப்பின்படி 2024 இன் முதல் மூன்று மாதங்களில் மட்டும் சந்தையில் விற்பனைக்கென வரும் வீடுகளின் எண்ணிக்கை 25% த்தால் உயர்ந்திருக்கிறது எனப்படுகிறது.

இந்த வருட முடிவிற்குள் ஐந்து வருட அடமானக் கடனின் வட்டி வீதம் 3 முதல் 4% த்திற்குள் கொண்டுவரப்படாவிடில் வீட்டு விலைகளில் பாரிய வீழ்ச்சி ஏற்படச் சாத்தியமுண்டு. பொதுவாக குடிவரவு அதிகரிக்கும்போது வீட்டுத் தேவையும் அதிகரிப்பதால் இதை எதிர்பார்த்து வீட்டுச் சந்தை சிறிது தாக்குப்பிடிப்பதுண்டு. ஆனால் கனடாவில் விரைவில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால் குடிவரவில் உடனடியான மாற்றங்கள் எதையும் எதிர்பார்க்க முடியாது. அடுத்த வருடம் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் முடிவுற்ற பின்னர்தான் கனடிய பொருளாதாரம் ஒரளவுக்கு ஸ்திரத்தை எட்டும். எனவே அதுவரை வீட்டு விலைகள் கொஞ்சம் தளம்பல் நிலையிலேயே இருக்குமென நிபுணர்கள் கருதுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *