கனடிய தமிழர் அடையாள அரசியல்
உரத்து யோசித்தல்
சிவதாசன்
இது நகரசபைகளின் தேர்தல் திருவிழா காலம். அரசியல்வாதிகள் / பொதுச்சேவை வழங்குபவர்கள் / சங்கங்கள் வைத்து சங்கூதுபவர்கள், ஊடகப்பெருமக்கள் (நானுட்பட) என அனைவருமே இப்படியான திருவிழாக்களை அவ்வப்போது கொண்டாடுபவர்கள். ‘வெட்டி வீழ்த்துவதாகப்’ புறப்பட்டவர்களில் பெரும்பாலோர் இலை, குழை, பட்டைகளோடு வீடு போனவர்கள். குழுமமாகச் சிலவேளைகளில் கொப்புகளை வீழ்த்தியிருக்கலாம். அவ்வளவுதான். எனவே இத் திருவிழாக்கள் பெரிதாக உசுப்பேத்துவதில்லை. ராதிகா சிற்சபைஈசன் அரங்கேற்றம் இதில் விதி விலக்கு. பதின்ம வயதுகளில் தேர்தல் காலங்களில் ஊர்ப் பெரியவர்களுக்கு சாராயம் கொண்டுவரும் அரசியல்வாதிகளின் வாகனங்களை மறித்து அட்டகாசம் செய்தளவுக்கு இது ஒன்றும் சுய இன்பம் தருவதல்ல.
எதிர்வரும் அக்டோபர் 26 இத்திருவிழா கொடியேறுகிறது. இக்காலகட்டத்தில் வந்தேறு குடி வேட்பாளர்கள் பக்தகோடிகளை உசுப்பேத்தி சாவடிகள் வரை அழைத்துவந்து ‘உபயோகம்’ பெற்று அனுப்புவது வழக்கம். இனம், நிறம், மதம், மொழி, சாதி, வர்க்கம் என இருக்கக்கூடிய வேறுபாடுகளுக்கு முலாம் பூசி ஜொலிக்கச் செய்து கருமம் நிறைவேற்றியவர்கள். இந்த சாய்ப்பு வேலையை நானும் ஒருகாலத்தில் செய்தவன்.
ஒன்ராறியோ மாகாண நகரசபை, கல்விச்சபை தேர்தல்களில் இம்முறை மொத்தம் 21 தமிழர்கள் வேட்பாளர்களாக நிற்கிறார்கள் என ஒரு தகவல் வந்தது. சென்ற வாரம் ரொறோண்டோவின் 25 ஆம் வட்டாரத்தில் வதியும் ஒரு நண்பர் ஒரு விடயத்தைச் சொன்னார். தனது வீட்டின் கதவைத் தட்டி ஒரு தமிழர் “ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்காக வாக்கு கேட்க வந்திருக்கிறேன்” என்றாராம். இதைக் கேட்டதும் நண்பரைப் பின்னால் இழுத்துவிட்டு அவரின் மனைவி முன்னே பாய்ந்து ” ஏன் மூன்று தமிழர்கள் போட்டியிடுகிறீர்கள். இவ்வட்டாரத்தின் முன்னாள் கவுன்சிலர் நீதன் ஷானுக்கு எதிராக நீங்கள் நிற்கிறதால நீங்க வாக்குகளைப் பிரிக்கிறீங்க என்கிறது தெரியாதா? நாங்க நீதனுக்குத்தான் போடுவம், நீங்க போயிட்டு வாங்க” என்று கதவை அடித்துச் சாத்திவிட்டார். நீதன் ஷான் அந்த வட்டாரத்தில் வதிவதில்லை என்பதோ அவரோ அவரது குடும்பமோ அவருக்கு வாக்களிக்க முடியாது என்பதோ அந்த அம்மைக்குத் தெரியாது. அப்படிப் பார்க்கின் கனடாவின் அரசியல்வாதிகளில் பெரும்பாலானோர் தங்களுக்கே வாக்களிக்க முடியாது எனத் திருவாளர் பொதுமகன் சொல்வதையும் ஏற்கத்தான் வேண்டும். அப்படியானால், தான் வாழாத தொகுதியின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பேன் என ஒருவர் எப்படிக்கூற முடியும்? அத் தொகுதியில் வாழாமல் அத் தொகுதியின் பிரச்சினைகளை அவர் எப்படி அறிவார்? என ஒரு மறுத்தானை நீங்கள் போடலாம். பெரும்பாலான தொகுதி வாசிகளுக்கே தமது தொகுதியின் எல்லைகள் எவை எனவோ, அத்தொகுதியில் உள்ள பிரச்சினைகள் என்ன என்பதோ தெரியாதென்பது இவ்வேட்பாளர்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால் தான் அவர்களும் தங்களது வாகுறுதிகளை அள்ளி வீசுகிறார்கள். இது உலக அரசியலின் டிசைன். பேசாமால் பின்பற்றவேண்டியதுதான். அதுதான் தமிழரது ‘அடையாள’ அரசியல். அந்த அடையாளத்துக்கு மறு பெயர் ‘உணர்வு’. எனது நண்பரது மனைவியாரும் இந்த அச்சில் வார்க்கப்பட்டவர்தான். இந்த அச்சை முன்னொருதடவை நானும் பாவித்திருந்தேன் என்பது வெட்கப்படக்கூடிய உண்மை.
நண்பர் வதியும் வட்டாரத்தில் போட்டியிடும் பலரில் நால்வர் தமிழர்கள். இப்போது அது இரண்டாகக் குறைந்துவிட்டது. இவ்வட்டாரத்தில் வதியும் வாக்காளர்களில் பெரும்பாலோர் தமிழர்கள். இதர இனத்தவர் / மொழியினர் தனித்தனியாகப் பலமிழந்தவர்கள். வழமையாக தமிழர்களது வாக்குகளுக்காக தமிழரல்லாத வேட்பாளர்கள் பறந்தோடி வருவார்கள். இந்த தடவை அவர்கள் அதற்காக பறந்தோடத் தேவையில்லை. தமிழர்களது வாக்குகள் பிரித்தால் போதும் தாம் இலகுவாக வென்றுவிடலாம் என எண்ணுவார்கள். தமிழர்கள் மட்டுமல்ல சீக்கிய சமூகங்கள் பலமாக வாழும் இடங்களிலும் இதே நிலை தான். (மரபணு ரீதியில் தமிழரும் சீக்கியரும் நெருங்கிய உறவினர் என்றொரு ஆய்வும் உண்டு என்பது வேறு). என் நண்பரது மனைவியின் லொஜிக் சரியானது தான். ஆனால் பல தமிழ் வேட்பாளர்களுக்கு மட்டுமல்ல தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் இயங்கும் அமைப்புக்களுக்கும் இது பொருந்தாது.
மீண்டும் 25 ஆம் வட்டாரத்திற்கு. ‘தமிழர்’ என்ற உணர்வு பீரிட்டு நிற்பவர்களுக்கு நண்பரின் மனைவி கேட்ட கேள்வி நியாயமானது. ஆனால் அதற்கு நீதன் ஷான் உதாரண புருஷரா? இதற்கு முன்னர் தமிழர்கள் கனடிய தேர்தல்களில் தமிழர்களை எதிர்த்து போட்டியிடவில்லையா? சென்ற தடவை கூட 25 ஆம் வட்டாரத்தில் மூன்று தமிழர்கள் போட்டியிட்டார்களே? அதில் நீதன் ஷானும் ஒருவர் தானே?
2016 செப்டம்பர் 1 ஆம் திகதி தமிழர்கள் செறிந்து வாழும் ஸ்காபரோ றூஜ் றிவர் தொகுதியில் மாகாண சட்டசபை இடைத் தேர்தல் நடந்தது. இத் தொகுதி ஒரு மாகாண லிபரல் கட்சியின் கோட்டையாக விளங்கிய காலமது. கறுப்பினத்தவரான அல்வின் கேர்ளிங் என்பவரும் அவரைத் தொடர்ந்து கரீபிய / இந்திய வம்சாவளியினரான பாஸ் பால்கிசூனும் லிபரல் உறுப்பினர்களாகத் தொடர்ந்து பிரதிநிதித்துவப்படுத்திவந்த தொகுதி இது. 2016 இல் பாஸ் பால்கிசூன் திடீரென பதவி விலகியதும் இத் தொகுதிக்கு இடைதேர்தல் வந்தது. இந்த அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தமிழ்ச்சமூகத்தவரும் தமிழ்த்தேசிய உணர்வாளருமான பிரகல் திரு என்பவர் லிபரல் கட்சி சார்பில் களமிறங்கினார். இவருக்கெதிராக நீண்டநாள் ரொறோண்டோ நகரசபை கவுன்சிலரான றேய்மண்ட் ஷோ கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் களமிறங்கினார். இத் தொகுதி ஒரு லிபரல் கோட்டை என்ற வகையில் பிரகல் திருவின் வெற்றி ஓரளவுக்கு உறுதிப்படுத்தக்கூடியதாக இருந்தது. இவ்வேளை நீதன் ஷான் என்.டி.பி. கட்சி சார்பில் இத் தொகுதியில் களமிறங்கினார் அல்லது களமிறக்கப்பட்டார். பிரகல் திருவின் வெற்றி உறுதியென இருந்த நிலையில் அவருக்கெதிராக போட்டியிடவேண்டாமென்று பல சமூகப் பெரியவர்கள் நீதன் ஷானிடம் இறைஞ்சினார்கள். நீதன் ஷான் அதற்கு உடன்படவில்லை. அவரது வரவிற்குப் பின்னால் இன்னுமொரு முக்கிய காரணமொன்றிருந்தது எனவும் றேமண்ட் ஷோ இத் தேர்தலில் வெற்றி பெற்றால் அவரது கவுன்சில் தொகுதியில் போட்டியிடலாமென்பது அவரது நோக்கம் எனவும் ‘அப் பெரியவர்கள்’ சிலர் ஊகித்தார்கள். அவர்களது ஊகம் பொய்க்கவில்லை. 2016 செப்டம்பர் 01 இல் நடைபெற்ற மாகாண சட்டசபை உப-தேர்தலில் றேமண்ட் ஷொ விற்கு 9693 வாக்குகளும், இரண்டாவதாக வந்த பிரகல் திருவிற்கு 7264 வாக்குகளும், மூன்றாவதாக வந்த நீதன் ஷானுக்கு 6883 வாக்குகளும் கிடைத்தன. கணக்கு இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.
றேமண்ட் ஷோ மாகாண சட்டசபைக்கு சென்றதும் காலியாகிய, அவர் பிரதித்துவப்படுத்திய 42 ஆம் வட்டாரத்திற்கு பெப் 03 2017 இல் உப தேர்தல் நடந்தது. எதிர்பார்த்தது போல் நீதன் ஷான் அதில் போட்டியிட்டு 4765 வாக்குகள் பெற்று கவுன்சிலர் ஆனார். றேமண்ட் ஷோ வின் ஆதரவு அவருக்கு இருந்தது என ‘அப்பெரியவர்கள்’ சொன்னார்கள். 2018 இல் ஒன்ராறியோ அரசு ரொறோண்டோவின் 42 வட்டாரங்களை 25 ஆகக் குறுக்கியது. இதனைத் தொடர்ந்து பதவியை இழந்த நீதன் ஷான் 2025 இல் நடைபெற்ற 25 ஆவது வட்டார கவுன்சிலர் இடைத் தேர்தலில் போட்டியிட்டார். இதன் போது இவருக்கெதிராக மேலும் இரண்டு தமிழர்கள் போட்டியிட்டனர். நீதன் ஷானினால் தோற்கடிக்கப்பட்ட, பிரகல் திரு, கனடிய தமிழர் பேரவை சார்பில் நீதனுக்கு ஆதரவாக,களமிறங்கிச் செயற்பட்டார். தோள்களில் ‘தமிழ்’ அடையாளத்தைச் சுமந்தவண்ணம் களப்போராளிகள் நீதன் ஷானுக்காக மீண்டும் வியர்வை சிந்தினர். வெற்றி பெற்றதும் நீதன் ஷான் கனடிய தமிழர் பேரவையின் முதுகில் குத்திவிட்டு கட்சி மாறியது நெடுங்கதை.
2026 இல் வாக்குப் போராட்டம் மீண்டும் களம் காண்கிறது. இந்த தடவை நீதன் ஷானுக்கு எதிராக இன்னுமொரு தமிழரான தர்ஷன் காசிநாதன் களமிறங்கியிருக்கிறார். இவரது தந்தையார் கனடிய தமிழர் சமூகத்தில் நன்கு அறிமுகமானவர். எனக்குத் தெரிந்து பல சமூக தொண்டு நிறுவனங்களுக்கு பலவருட காலமாக வாரி வழங்கி வருபவர். அதற்காக அவரது மகனுக்கு வாக்களிக்கவேண்டுமென நான் உபதேசம் செய்ய வரவில்லை. ஒரு தமிழருக்கு எதிராக இன்னுமொரு தமிழர் களத்தில் இறங்குவது எந்தவிதத்தில் நியாயமென எனது நண்பரின் மனைவி கேட்டதை நியாயப்படுத்த நீதன் ஷான் சிறந்த உதாரணமில்லை என்பதற்காகவே இதை எழுதுகிறேன்.
கனடிய அரசியலில் தமிழர் பிரகாசிப்பது ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்திற்கும் நற்பெயரைத் தேடித்தரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. உலகளாவிய ரீதியில் வர்த்தகத்தில், கல்வித் துறைகளில், சமூகப்பணிகளில், விளையாட்டுத் துறைகளில் தமிழர்கள் சாதித்தவை பல. வளர்ந்துவரும் சமூகத்திற்கு இவர்கள் முன்னுதாரணங்களாக இருப்பதன் மூலமே இதர சமூகங்கள் எம்மை மதிக்கும். கனடிய அரசியலில், துர்ப்பாக்கியமாக, சமூகத்திலிருக்கும் பிளவுகளைச் சாதகமாக்கி பிழைப்புவாத அரசியலை முன்னிறுத்தும் அரசியல்வாதிகளுக்கு ‘தமிழுணர்வு’ அடையாள அரசியல் முலாமைப் பூசுவதில் எனக்கு உடன்பாடில்லை.
குட்டை மிகவும் குழம்பிப் போயிருக்கிறது. ‘ஆமை பிடிப்பார் மல்லாத்துவார் அதை நான் சொன்னால் பாவம்’ என்ற முனிவரின் பதில் தான் என்னுடையதும்.
வாழ்க பலமுடன்!


