கனடிய மத்திய தேர்தல்: தலைவர்கள் விவாதம் ஒரு வரலாற்றுப் பதிவு
சிவதாசன்
இறுதி நேரடி வாக்களிப்பிற்கு இன்னும் பத்து நாட்கள் இருக்கின்றன. இன்று முதல் முற்கூட்டிய வாக்களிப்பு ஆரம்பமாகிறது. இரண்டு முக்கிய கருத்துக் கணிப்பு நிறுவனங்களான நனோஸ் மற்றும் அபாக்கஸ் ஆகியன லிபரக் கட்சியின் வெற்றியையே உறுதிப்படுத்துகின்றன. நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்களுக்கிடையேயான விவாதமும் ஏறத்தாழ இதையே தான் சுட்டிக்காட்டியது.
சில மாதங்களுக்கு முன்னர் அதல பாதாளத்திலிருந்த லிபரல் கட்சிக்கு மறுபிறப்பளித்தமைக்கு ட்றம்பிற்குத்தான் கார்ணி வாழ்த்துச் சொல்ல வேண்டும். கன்சர்வேட்டிவ் கட்சி ஒரு போலி என்பதை அவர் தான் முதலில் கண்டுபிடித்திருந்தார். கட்சியின் ஆதரவாளர்களோ அல்லது உறுப்பினர்களோ அதற்குக் காரணமில்லை. முற்று முழுதாக அப்பொறுப்பு தலைவர் பொய்லியேவிலும் அவரது மேய்ப்பர்களிலும் தான் விழவேண்டும். நேற்றைய விவாதத்தில் பொய்லியேவ் அதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தியிருந்தார்.
விவாதத்தை நெறிப்படுத்திய ரீ.வி.ஓ. நெறியாளர் ஸ்டீவ் பேய்க்கின் மத்திய கிழக்கு / பாலஸ்தீன விவகாரத்தை எடுத்துப் போட்டார். இது கனடாவுக்கு இப்போதைக்கு அதி முக்கிய ஒரு விடயமில்லை எனத் தெரிந்திருந்தும் கட்சித்தலைவர்களின் மனச்சாட்சிக்கு வைத்த ஒரு அமிலப் பரிசோதனையாக அது அமைந்தது. புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங்க் ‘இனப்படுகொலை’ என்ற பதத்தைப் பாவித்து தனது மனச்சாட்சி நிற்கும் இடத்தைத் தெளிவாகக் காட்டிக்கொண்டார். கார்ணி பயங்கரவாதம் என்ற சொல்லைத் தவிர்த்து ‘இரு நாட்டுக் கொள்கையை’ இழுத்து வந்து சிங்கிற்கு வலது பக்கம் அமர்ந்து கொண்டார். கியூபெக்கின் பிரிவினைவாதக் கட்சியான புளொக் கியூம்பெக்குவா கட்சியின் தலைவர் பிளான்சே பாலஸ்தீனத்துக்கும் பயங்கரவாதத்திற்கும் முடிச்சுப் போட்டு கியூம்பெக் யூத சமுதாயத்தைத் திருப்திப்படுத்திவிட்டு கார்ணியை விலத்தி அப்பால் அமர்ந்து கொண்டார். இறுதியில் பொய்லியேவ் பல படிகள் மேலே போய் பாலஸ்தீனப் பயங்கரவாதிகளை மட்டுமே குறை கண்டு, இஸ்ரேலுக்குப் புகழ்பாடி அப்படியே அப்பயங்கரவாதத்தைக் கனடாவிற்குள் இழுத்து வந்து ‘இமிக்கிரண்டுகளின்’ தலையில் கட்டி வழக்கமான கன்சர்வேட்டிவ் சுலோகங்களில் ஒன்றான “கனடாவுக்கு வர விரும்புபவர்கள் தங்கள் தங்கள் நாடுகளில் இருக்கும் பிரச்சினைகளை இங்கு கொண்டுவந்து இங்கத்தைய தெருக்களில் வைத்து கொட்டிக் கழுவக்கூடாது” எனப் பவ்வியமாக பாலஸ்தீனப் போராட்டத்தைக் கடிப்பது போல ‘தமிழீழ இனப்படுகொலையையும்’ ஒரு சீவு சீவி வெற்றிப் புன்னகை தந்தது கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. கடந்த காலங்களில் இவர் தமிழ் மேடைகளில் பேசியவற்றை மீளக் கேட்டிருக்க மாட்டார் எனவே நினைக்கவேண்டி இருக்கிறது.
கார்ணியின் நிதி முகாமைத்துவம் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும் அவர் எப்படியான அரசியல்வாதியாக இருப்பார் என்பதில் கொஞ்சம் சந்தேகமிருந்தது. ‘சீமான்’ பிராண்ட் கிலு கிலுப்பைகளில் கார்ணிக்கு ஆர்வமில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. ட்றம்பின் அடாவடித் தனத்திற்கு ஒரே வழி ஐரோப்பாவுடன் இணைந்து அமெரிக்காவிற்கு எதிரான புதியதொரு சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்புவது மட்டுமே அவரது முதற் கடமை என அவர் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல தடவைகள் எடுத்துக் காட்டினார். சுகாதாரம், கல்வி, அது இதுவென சிங்க் அடுக்கி வைத்திருந்த லேகொ கட்டுமானம் கார்ணிக்கு மட்டுமல்ல வாக்காளர்களுக்கும் இப்போது அவசியமற்றது என்பதை கார்ணி ஒருவர் தான் புரிந்துகொண்டிருப்பதாகப் பட்டது. “ட்றம்பின் அமெரிக்காவுக்கு ஒரு பாடம் புகட்டுவதே எமது தலையாய கடன் அதற்காக எதையும் நாம் சகித்துக்கொள்ளத் தயார்” என்னும் கனடிய மக்களின் மனநிலையை அறிந்துகொள்ளும் விவேகம் கார்ணிக்கு மட்டுமே இருக்கிறது. அதனால் தான் அவர் பின்னால் படை திரள்கிறது.
பொய்லியேவிற்கு புத்தி மத்திமம். ஜெனி பேர்ண்ஸ் தலைமையிலான அவரது பேய்ப்பர்களுக்கு விசுவாசம் வேறெங்கோ இருக்கிறது. ஆட்சியைக் கைப்பற்றுவது அவர்களுக்கு முதல் கடமையாக இருக்குமென்பதை நான் நம்பவில்லை. இறுதி நேரத்தில் ஜெனி பேர்ண்ஸ் இரகசியமாக அகற்றப்பட்டாலும் மாற்றுத் தலைமை ‘அங்கிருந்து தான்’ வரவேண்டும். மல்ரோணி காலத்தில் பரந்த கனடாவின் பிரதிநிதியாக இருந்த புரோகிரெஸ்ஸிவ் கன்சர்வேட்டிவ் கட்சியை அல்பேர்ட்டா. பிறேயரிஸ் போன்ற வட மேற்கு மாகாணங்களுக்குள் கொண்டுபோய் முடக்கியதோடு அது ஒரு பிராந்தியக் கட்சியாக மாற்றப்பட்டு விட்டது. ஹார்ப்பர் போன்றவர்களால் வளர்க்கப்பட்ட இக்குறுநில மனப்பான்மைக்கு பொய்லியேவ் அடிபணிந்தேயாக வேண்டும். இந்த இரண்டு மாகாணங்களைத் தவிர மீதிக் கனடா முழுவதும் மிதவாதப் போக்கிலேயே இருக்கிறது. ட்றம்ப் முடிசூடிக் கொண்டதும் அவரது ஃபுளோறிடா படை வீட்டிற்கு ஓடோடிப்போய் “நான் உங்களுடன்” என டயலாக் பேசிய மார்லேனா டானியல் ஸ்மித்தையோ அல்லது ‘இமிக்கிரண்ட், கிறைம், ரக்ஸ், ஹ்வ்சிங்’ என்ற நேர்கோட்டில் படுத்துறங்கும் பொய்லியேவையோ ட்றம்ப் கண்டுகொள்ளாது கார்ணியைச் சிலாகித்துப் பேசியிருப்பது ஒரு விடயத்தைச் சொல்கிறது. ட்றம்ப் எப்படியான கொடுமையானவராக இருந்தாலும் உண்மையானவர்களை அவரால் இலகுவில் இனம்கண்டுகொள்ள முடிகிறது.
விவாதத்தின் முடிவில் பொய்லியேவ் தன் பிறப்பு வளர்ப்பு பற்றி உருக்கமாகப் பேசினார். தன் நாட்டின் மீதான தன் பந்தம் எப்படியிருக்கும் என்பதை விபரிக்கவே அது இழுக்கப்பட்டது. அத்தோடு அவர் மீதான எனது மதிப்பு அதல பாதாளத்திற்குச் சென்றுவிட்டது. கழிவிரக்கம் தேடுவதுகூட ஒரு வகையில் lower form of wit என்றுதான் கூற வேண்டும்.
கன்சர்வேட்டிவ் கட்சியில் வேட்பாளர்களாகச் சில தமிழர்கள் நிற்கிறார்கள். அவரவர் தொகுதிகளில் அவரவர் வெல்ல வேண்டுமென்பதே எனது அவா. முயற்சி திருவினையாக்கும். காசாவில் துண்டாடப்படும் குழந்தைகளுக்கும் முள்ளிவாய்க்காலில் துண்டாடப்பட்ட குழந்தைகளுக்கும் வித்தியாசமுண்டு என்று நினைப்பவர்கள் வரலாற்றின் எந்தப்பக்கம் நின்றாலும் இலகுவாக இனம் காணப்படுவார்கள்.
இவ்விடயத்தில் நேற்றய விவாதத்தில் ஜக்மீத் சிங்க் காட்டிய துணிச்சலும் பொய்லியேவ் காட்டிய பதுங்கலும் வரலாற்றின் பதிவுகள்.



