கனடிய மத்திய வங்கி வட்டி வீதத்தை 0.25% உயர்த்தியது
மேலும் அதிகரிக்கும் சாத்தியமுண்டு
சில்லறை வங்கிகளுக்கு தான் வழங்கும் கடனுக்கான (Overnight Lending Rate)வட்டி வீதத்தை கனடிய மத்திய வங்கி 4.75% த்திலிருந்து 5.00% மாக அதிகரித்திருக்கிறது. இதனால் சில்லறை வங்கிகள் வாடிக்கையாளருக்குத் தாம் வடங்கும் கடனுக்கான அதிகுறைந்த வட்டி வீதமாக 5.25% த்தை (bank rate) அறவிடலாம். அதே வேளை வாடிக்கையாளர் சேமிப்பில் இடும் தமது பணத்துக்கு அதி குறைந்த வட்டியாக 5%த்தை (deposit rate) சேமிப்பு நிறுவனங்கள் வழங்கவேண்டும்.
உலகளாவிய ரீதியில் குறைந்து வரும் எரிபொருள் மற்றும் பண்டச் செலவுகள் காரணமாகப் பணவீக்கம் குறைந்துவருகிறதெனினும் மக்களின் வாங்கும் திறன் அதிகரிப்பு வேலைகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை ஆகிய காரணங்களினால் உலக பொருளாதாரம் இன்னும் மிகவும் ‘சூடாகவே’ இருப்பதால் அதைக் கட்டுப்பாடாக வைத்திருக்க வேண்டியது அவசியம் எனவும் அதனால் 2025 வரை வட்டி வீதம் தொடர்பாக இளகுநிலையை எதிர்பார்க்கவேண்டாமெனவும் கனடிய மத்தியவங்கி ஆளுனர் எச்சரித்துள்ளார்.
பொருளாதாரம் ‘சூடாக’ இருக்கின்றபோது வேலையில்லாதோர் எண்ணிக்கை குறைவாக இருப்பதும் அதனால் மக்கள் பைகளில் அதிக பணப்புழக்கம் இருப்பதும் இதன் காரணமாக அவர்கள் எந்தப்பண்டங்களையும் கேட்ட விலைகளுக்கு மேலாகவும் கொடுத்து வாங்குவார்கள் (வாங்கும் திறன்) என்பதும் பொதுவான பொருளாதாரக் கொள்கை. இதையே பண வீக்கம் எனப்படுகிறது. பணவீக்கம் அதிகரிக்கின்றபோது உலகச் சந்தையில் ஒரு நாட்டின் நாணயத்தின் பெறுமதி குறைந்துவிடுகிறது. இதனால் இறக்குமதி செய்யப்படும் பண்டங்களுக்கு அதிக விலையைக் கொடுக்கவேண்டி ஏற்படுகிறது. இக்காரணங்களுக்காக பண வீக்கத்தை சராசரி 2% த்தில் வைத்திருக்க கனடிய மத்திய வங்கி முயல்கிறது. தற்போது அது 3.4% மாக இருக்கிறது. தற்போதுள்ள நிலையில் இதைச் சாதிக்க 2025 ஆண்டளவில் தான் முடியுமென அது எதிர்வுகூறியுள்ளது. அதுவரை வட்டி வீதம் ஏறத்தாழ 5% முதல் 6% த்திற்குள் இருக்கலாமென நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
இதே வேளை சில்லறை வங்கிகள் தமது வாடிக்கையாளருக்குக் கொடுக்கும் அடமானக் கடன்களுக்கான வட்டி வீதத்தை தாமே தீர்மானிக்கின்றன. மத்திய வங்கியிடமிருந்து பெறும் பணம், மக்களின் நீண்டகால வைப்புப் பணம் ஆகியவற்றையே இவ்வங்கிகள் அடமானப் பணமாகவும் சில்லறைக் கடன்களாகவும் கொடுக்கின்றன. எனவே இவற்றின் வட்டி வீதம் எப்போதும் மத்தியவங்கியின் வட்டி வீதத்தைவிட அதிகமாகவே இருப்பது வழக்கம். வீடுகளை ஈடாக வைத்துப் பெறும் மூடிய அடமானக் கடன்களுக்கு ஆபத்து (risk) குறைவாகையால் அதற்கான வட்டிவீதம் குறைவாகவும், லைன் ஒஃப் கிறெடிட், மாறும் வட்டி வீதக் கடன்களுக்கு மத்திய வங்கியின் வட்டிவீத மாற்றங்களினால் நன்மைகளும் தீமைகளும் ஏற்படுவது வழக்கமாகவும் இருப்பதுண்டு.