கனடிய மத்திய வங்கி வட்டி வீதத்தை அதிகரித்தது!
மேலும் அதிகரிப்புகளை எதிர்பார்க்கலாம்?
கனடிய மத்திய வங்கி இன்று தனது அடிப்படை வட்டி வீதத்தை 4.5% த்திலிருந்து 4.75% த்துக்கு உயர்த்தியுள்ளது. 2001 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இதுவே மத்திய வங்கியின் அதிகூடிய வட்டி வீதம். இதனால் மாறும் வட்டி வீதத்தில் (ARM) அடமானக்கடன்களைப் பெற்றிருப்பவர்கள் மீளச் செலுத்தும் மாதாந்த கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன.
வட்டி வீத அதிகரிப்பின் மூலம் பண வீக்கத்தைக் கட்டுப்படுத்துவதே முக்கிய நோக்கமெனினும் வீட்டு விலைகளின் அதிகரிப்பைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதே தற்போதைய வட்டி அதிகரிப்பின் பிரதான நோக்கமெனத் தெரிகிறது. அடுத்தடுத்த பல வட்டி அதிகரிப்புகளைத் தொடர்ந்து ஜனவரி மாதம் அதிகரிப்பைத் தற்காலிகமாக நிறுத்துவதென வங்கி முடிவெடுத்திருந்தது. தற்போது அந் நிறுத்தம் முடிவுக்கு வருகிறது. எனவே இவ்வதிகரிப்பைத் தொடர்ந்து மேலும் பல அதிகரிப்புகள் நிகழ்வதற்கான சாத்தியங்கள் உண்டு என நிதிச்சந்தை நிபுணர்கள் எதிர்வுகூறியுள்ளனர்.
கடந்த வட்டி அதிகரிப்புகளைத் தொடர்ந்து கனடிய பொருளாதார வளர்ச்சி தாமதமடையாலாம் அல்லது சுருங்கலாமென மத்திய வங்கி எதிர்பார்த்தது. கட்டு மீறிய பொருளாதார வளர்ச்சி மக்களின் பைகளில் தேவைக்கதிகமான பணத்தைக் குவித்துக்கொள்வதால் அவர்கள் பண்டங்களை அதிக விலைகொடுத்தும் வாங்குவதற்குத் தயங்கமாட்டார்கள். வீட்டுச் சந்தையும் இப்படியே. கடந்த ஒரு வருடத்தில் அடமான வட்டியினால் மட்டும் ஏற்பட்ட பண வீக்க அதிகரிப்பு 28%. இதனால் வங்கி எதிர்பார்த்த அளவுக்கு வீட்டு விலைகளில் சரிவு ஏற்படவில்லை. இதைக் கட்டுப்படுத்த ஒரே வழி அடமானக் கடன் பெறும் தகமைகளை அதிகரிப்பதே. வங்கி எதிர்பார்த்தது போல பண வீக்கமும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை. கடந்த மாதம் அது மேலும் வளர்ந்திருக்கிறது. எனவே தான் இந்த வட்டி அதிகரிப்பு.
சந்தை நிபுணர்கள் இவ்வதிகரிப்பை எதிர்பார்த்திருக்கவில்லையாயினும் இனிவரும் காலங்களில் வட்டி வீதம் மேலும் அதிகரிக்கப்படலாமென்பதில் உடன்படுகின்றனர். எனவே இவ்வருட முடிவிற்குள் வட்டி வீதம் 5.25% த்திற்கு உயர்ந்தாலும் ஆச்சரையப்படத் தேவையில்லை.
சில வீட்டுடைமையாளர்கள் தமது அடமானங்களை 3, 4, 5 வருடங்களுக்கு மாறா வட்டியில் பெற்றிருந்தாலும் இன்னும் சில மாதங்களில் அவற்றில் பெரும்பான்மையானவை தவணைப் பூரணத்துவம் (maturity) பெரும் நிலையை எய்துகின்றன. அப்போது புதிய வட்டி வீதம் மூன்று அல்லது நான்கு மடங்குகளால் அதிகரித்திருக்க வாய்ப்புண்டு. இந்நிலையில் அவர்களது வருமானம் இப்புதிய கடன் திட்டத்தைத் திருப்திப்படுத்த முடியாவிட்டால் பலரும் தமது வீடுகளை விற்கவோ அல்லது புதிய வீடுகளில் முதலீடு செய்வதைத் தவிர்க்கவோ முயல்வார்கள். இதனால் வீட்டு விலைகளில் சரிவு ஏற்படும் என்பதே வங்கியின் எதிர்பார்ப்பு. நிபுணர்களும் இப்படியான நிலையொன்றையே எதிர்வு கூறுகிறார்கள்.
தற்போதைய வட்டி அதிகரிப்பின் மூலம் $500,000 அடமானத்தை வைத்திருக்கும் ஒருவரது மாதாந்த கட்டுப்பணம் $1100 டாலரினால் அதிகரிக்கலாம்.