கனடிய வங்கிகளில் பெருந்தொகையான ஊழியர்கள் பணி நீக்கம்
கனடாவின் ஐந்து பெரும் வங்கிகளில் ஒன்றான ஸ்கோஷியா பாங்க் (Scotia Bank) தனது பணியாளர்களில் 3% மானோரை (2,700 பேர்) பணிநீக்கம் செய்யத் தீர்மானித்திருக்கிறது. எதிர்பார்க்கப்படும் பொருளாதாரச் சரிவு ஏற்படுத்தப்போகும் பணவிழப்பைச் சமாளிக்க எடுக்கப்படும் முன்னேற்பாட்டு நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
இதர பெரும் வங்கிகளான றோயல் பாங்க் (RBC) , பாங்க் ஒஃப் மொன்றியால் (BMO) ஆகியனவும் தமது பணியாளர்களில் குறிப்பிட்ட வீதத்தை ஏற்கெனவே குறைத்துக்கொண்டு விட்டன. ரொறோண்டோ டொமினியன் பாங்க் (TD) இதுவரை பணிநீக்கம் பற்றி எதுவும் அறிவிக்கவில்லை அதே வேளை சீ.ஐ.பி.சீ பாங்க் (CIBC) ஒரு குறிப்பிட்ட தொகையினரைப் பணிநீக்கத் தயாராகி வருகிறது.
கனடாவின் பணவீக்க அதிகரிப்பின் காரணமாக மத்திய வங்கி வட்டி வீதத்தை உயர்த்தியதால் மக்கள் செலவுசெய்யத் தயங்குவது, டிஜிட்டல் வங்கிகளின் வருகை, பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களின் நாட்டமின்மை போன்ற பல காரணங்களால் பெரு வங்கிகளின் இலாபம் வெகுவாகச் சரிந்துள்ளது. இதே வேளை கனடிய அரசாங்கத்தின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் வீட்டு விலைகள், வீட்டு வாடகை அதிகரிப்பு அரசின் மீதான மக்களின் கசப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது. வட்டிவீத அதிகரிப்பினால் வீட்டுரிமையாளர்களின் அடமானக் கடன்களுக்கான வட்டி பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. மக்களின் கோபத்தைச் சமாளிக்க அரசு எடுக்கவிருக்கும் முயற்சிகளில் ஒன்று கனடிய வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் அறவிடும் பாவனைக் கட்டணத்தைக் குறைக்க கட்டளை இடுவது. இது நடைபெறின் வங்கிகளின் இலாபத்தில் துண்டுவிழும். இதற்குப் பதிலடியாக வங்கிகள் பணிநீக்க அறிவிப்புகளைச் செய்கின்றன. வேலையற்றோர் எண்ணிக்கை அதிகரிப்பது அரசுக்கு பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பலத்த தலையிடியைக் கொடுக்கும்.
இதை விட எதிர்வரும் மாதங்களில் வட்டிவீத அதிகரிப்பின் காரணமாக பல அடமானக் கடன் தவணைகளைப் புதுப்பிக்கும் வாடிக்கையாளர்கள் தமது மாதாந்த கட்டுப்பணம் பன்மடங்கால் அதிகரிப்பதை எதிர்நோக்கப் போகிறார்கள். இவ்வதிகரிப்பைச் சமாளிக்க முடியாதவர்கள் வீடுகளை வங்கிகளிடம் விட்டுவிட்டு தப்பிக்க முயற்சிப்பார்கள். இதே வேளை வீட்டு விலைகள் சரிவடையும் சாத்தியம் அதிகமாக இருப்பதால் வீட்டின் பெறுமதியை விட இருக்கும் கடனின் தொகை அதிகமாக இருப்பின் பலர் வீடுகளை வங்கிகளிடமே விட்டுவிடுவார்கள். இப்படியான நிலை ஏற்படுமென்ற சந்தேகத்தில் வங்கிகள் தமது இழப்புக்களையும் இலாபங்களையும் குறைக்க எடுக்கும் முற்கூட்டிய நடவடிக்கையாகவே இப் பணி நீக்கங்கள் பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவிலும் நிலைமை இதுதான். ஜே.பி.மோர்கன் வங்கியைத் தவிர ஏனைய ஐந்து பெரும் வங்கிகள் இதுவரை மொத்தமாக 20,000 பேரைப் பணிநீக்கம் செய்துள்ளன. அடுத்த வருடம் பொருளாதார நிலைமை எதிர்பார்க்கமுடியாத ஒன்றாக இருக்கப்போகிறது என்ற காரணத்தால் இப்பணிநீக்கங்களை அவை செய்வதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். (Image Credit: Photo by PiggyBank on Unsplash)