கனடிய வீடு விற்பனை 20% வீழ்ச்சியடையும் – CREA
கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் உச்சத்தை எட்டியிருந்த கனடிய வீட்டுச் சந்தை அடுத்த வருடம் (2023) பாரிய சரிவை எதிர்நோக்குமென கனடிய வீடு விற்பனையாளர் சங்கம் (Canadian Real Estate Association (CREA)) எதிர்வுகூறியுள்ளது.
கனடிய வீடு விற்பனையின் புள்லிவிபரங்களைச் சேகரிக்கும் MLS பொறிமுறை மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்களை ஆதாரமாகக் கொண்டு இச் சங்கம் வியாழனன்று (செப்.15) தனது ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுல்ளது. இதன் பிரகாரம் இந்த வருடம் மொத்தம் 532,545 வீடுகள் கைமாறியுள்ளதாகவும் 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 20% வீழ்ச்சி எனவும் அடுத்த ஆண்டில் இது மேலும் 2.3% த்தால் சரிவடையக்கூடுமெனவும் அது எதிர்வுகூறியுள்ளது.
வீட்டு விலைகளைப் பொறுத்தவரை தேசிய அளவில் வீடொன்றின் சராசரி விலை $720,255 ஆக இருக்குறது எனவும் இது சென்ற வருடத்துடன் ஒப்பிடும்போது 4.7%த்தால் அதிகரித்திருக்கிறது எனவும் 2023 இல் இது மேலும் 0.2% அதிகரிப்புடன் $721,814 ஆக உயருமெனவும் இச் சங்கம் எதிர்பார்க்கின்றது.
கடந்த ஜூன் மாதம் இச்சங்கம் வெளியிட்ட அறிக்கையின்படி இந்த வருடம் விற்பனை எண்ணிக்கை 14.7% வீழ்ச்சியையும், 10.8% விலை அதிகரிப்பையும் காணும் என எதிர்வுகூறியிருந்தது எனினும் உண்மையான இலக்கங்கள் அதைவிடக் குறைவாகவே இருக்கின்றன.
இதே வேளை TD வங்கியின் பொருளாதார நிபுணர் ரிஷி சொண்டியின் கருத்துப்படி கடந்த 6 மாதங்களாக தொடர்ந்து வீடு விற்பனையில் சரிவு ஏற்பட்டு வருகிறதென்றும் கோவிட் பெருந்தொற்றுக்கு முன்னர் இருந்த நிலைமையிலிருந்து விற்பனை 17% வீழ்ச்சியைக் கண்டிருக்கிறதென்றும் அறியப்படுகிறது. கனடாவின் 10 மாகாணங்களில் 9 மாகாணங்கள் வீடு விற்பனையில் வீழ்ச்சியைக் கண்டிருந்தாலும் ஒன்ராறியோ மாகாணம் மட்டுமே விற்பனையில் வளர்ச்சியைக் கண்டுள்ளது எனக் கூறப்படுகிறது. இதற்குக் காரணம் ரொறோண்டோ பெரும்பாகத்தில் விற்பனையில் ஏற்பட்ட அதிகரிப்பே எனவும் கூறப்படுகிறது.
கனடிய மத்திய வங்கியின் வட்டிவீத அதிகரிப்பினால் வீடுகளை வாங்குபவர்கள் மட்டுமல்லாது விற்பவர்கள் கூடக் குழப்பமடைந்த நிலையில் இருக்கிறார்கள். இதனால் அவர்கள் தமது வீடுகளை விற்கும் திட்டங்களைப் பின்போட்டு வருகிறார்கள் என பாங்க் ஒஃப் மொன்றியால் பொருளாதார நிபுணர் றொபேர்ட் கெளசிக் தெரிவித்துள்ளார்.