ரொறோண்டோவில் வெறுமையாக இருக்கும் குடியிருப்புக்களுக்கு விசேட வரி விதிக்கும் தீர்மானமொன்றை, நீண்ட விவாதத்தின் பின், ரொறோண்டோ மாநகரசபை நிறைவேற்றியுள்ளது.

Vacant Home Tax என அழைக்கப்படும் இவ் வரிவிதிப்புக்கான தீர்மானத்துக்கு ஆதரவாக 24 கவுன்சிலர்களும் எதிராக 1 கவுன்சிலரும் வாக்களித்திருக்கின்றனர்.

செல்வந்த முதலீட்டாளர்கள் வீடுகளை வாங்கி விடுவதுடன், அவற்றில் தாமும் வசிக்காது வாடகைக்கும் கொடுக்காது வைத்திருக்கிறார்கள். ரொறோண்டோவில் தற்போது நிலவும் வாடகை வீடுகளின் தட்டுப்பாடு இதனால் மேலும் அதிகரிக்கிறது.

“வீடுகளைக் கட்டுவதன் நோக்கம் மக்கள் வசிப்பதற்கு. இத் தீர்மானத்தின் மூலம் நகரிலுள்ள ஒவ்வொரு குடியிருப்புக்களிலும் மக்கள் வசிக்கும் நாளொன்று வருமென்று நான் நம்புகிறேன்” என இவ் விவாதத்தின் மீது இறுதியாகப் பேசிய நகரபிதா ஜோன் ரோறி தெரிவித்தார்.

இவ் வரி விதிப்பு நகரிலுள்ள ஆயிரக் கணக்கான குடியிருப்புக்களைச் சந்தைக்குக் கொண்டு வரும். இதனால் நகரில் வாடகை வீடுகளின் பற்றாக்குறை ஓரளவு குறைக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

2022 இல் இத் திட்டம் நடைமுறைக்கு வருமென நம்பப்படுகிறது.

வான்கூவர் நகரில் அறிமுகப்படுத்தப்பட்ட இதே போன்ற திட்டம் மிகவும் வெற்றிகரமாக அமைந்ததென்றும் தற்போது அவ்வழியை ரொறோண்டோ மாநகரசபையும் பின்பற்றுகிறதென்றும் இத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த கவுன்சிலர் அனா பேலோ தெரிவித்தார். வான்கூவரில், 2017 இல் நடைமுறைக்கு வந்த இவ் வரி விதிப்பால் 2017-2019 காலப்பகுதியில், வெறுமையான குடியிருப்புக்கள் 24% தால் குறைவடைந்தன.

  • Post category:Real Estate
  • Post published:December 16, 2020