Tax

கோவிட் கொடுப்பனவு: சட்ட நடவடிக்கை எடுக்க வருமானவரித் திணைக்களம் திட்டம்

கோவிட் பெருந்தொற்றின்போது வருமானக்குறைவு காரணமாக கனடிய மத்திய அரசின் உதவிப்பணத்தைப் பெற்ற தனியார் சில இவ்வுதவிப்பணத்தைப் பெறத் தகுதியற்றவர் எனக் காணப்படும் சந்தர்ப்பத்தில் அப்பணத்தை அரசுக்கு மீளச் செலுத்தவேண்டுமென வருமானவரித் திணைக்களம் சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தது. இவ்வகையில் தவறாகப் பெறப்பட்டு மீளச்செலுத்தாமல் நிலுவையிலிருக்கும் தொகை $9 பில்லியன் எனவும் தவறாகப் பெறப்பட்ட இப்பணத்தை மீளப்பெற அரசு எடுத்த சமரச் முயற்சிகள் பலனளிக்காமையால் இவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வருமானவரித் திணைக்களம் உத்தேசித்து வருவதாகவும் அது அறிவித்துள்ளது.

இதன் ஆரம்ப நடவடிக்கையாக ஜூல முதல் எச்சரிக்கைக் கடிதங்களை அனுப்பவுள்ளதாகவும் அது பலன் தராத பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்தும் சம்பளக் கொடுப்பனவுகளிலுமிருந்தும் சிறிது சிறிதாகப் பணத்தை மீட்டெடுக்க வருமானவரித் திணைக்களம் திட்டமிடுகிறதெனவும் அறியப்படுகிறது.

வருமானவரித் திணைக்களம் ஏற்கெனவே சம்பந்தப்பட்டவர்களுடன் மீள் கொடுப்பனவுகள் பற்றித் தொடர்புகொண்டிருப்பதாகவும் இதற்கு இணங்கி மீள்கொடுப்பனவு ஒழுங்குகளைச் செய்யாதவர்கள் மீது மட்டுமே இச்சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அது அறிவித்துள்ளது.

“எமது முதன்மை நோக்கம் சம்பந்தப்பட்டவர்கள் தம்முடன் தொடர்புகொண்டு தமது நிதி நிலைமைகளுக்கேற்ப இயலுமான மீள் கட்டுமான ஒழுங்குகளைப் பரஸ்பர இணக்கப்பட்டுடன் செய்ய வேண்டுமென்பதே” என வருமானவரித் திணைக்களத்தின் பேச்சாளர் சில்வியா பிரான்ச் தெரிவித்துள்ளார்.

கோவிட் பெருந்தொற்றினால் வருமானம் பாதிக்கப்பட்ட தனியார் மற்றும் வியாபார நிறுவனங்களுக்கு மத்திய அரசு சுமார் $200 பில்லியன் டாலர்கள் உதவிக் கொடுப்பனவாக வழங்கியதும் இவ்வவசரக் கொடுப்பனவின் போது உதவிகோருபவர்களது தகமைகளை விசாரித்தறியாமல் அரசு இந்த உதவியைச் செய்திருந்ததும் இச்சலுகையைப் பாவித்து தகமைகளற்ற பலர் இப்பணத்தைப் பெற்றுக்கொண்டிருந்தனர் என்பதும் வரலாறு. இப்பணத்தில் பெரும்பாலானவற்றை உரியவர்கள் மீளச்செலுத்திவிட்டதாகவும் மீதியாக $9.53 பில்லியன் தொகை நிலுவையில் இருக்கிறதெனவும் வருமானவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வருமானவரித் திணைக்களத்தின் சட்ட நடவடிக்கை பற்றிய கடிதங்களைப் பெற்றவர்கள் இத்திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு அதன் தீர்மானம் மீதான இரண்டு மீளாய்வுகளைக் கோர முடியும். இதன் போது இவ்வுதவிப்பணத்தைப் பெற அவர்கள் தகுதியுடையவர்களா இல்லையா என்பதை திணைக்களம் எப்படித் தீர்மானித்தது என்பது பற்றி வினவ முடியும். இந்த இரு சந்தர்ப்பங்களின்போதும் திருப்தியான மறுமொழியைப் பெறாதபோது அவர்கள் மத்திய நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம். இதற்கு வழக்கறிஞரின் உதவியும் பெருந்தொகையான பண விரயமும் இருக்க வாய்ப்புணடு. Photo by Erik Mclean on Unsplash

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *