veedu.com

நாமார்க்கும் குடியல்லோம்

Image credit: Govement of Canada Website
Maintenance

சக்தி விரயம் தவிர்க்கும் வீட்டுத் திருத்தங்களுக்கு $5,000 சன்மானம் – கனடிய மத்திய அரசு

கனடிய வீட்டுச் சொந்தக்காரர்களுக்கு மேலுமொரு கொடுப்பனவை அறிவித்திருக்கிறது கனடிய மத்திய அரசு.

வீடுகளில் சக்தி விரயத்தைத் தவிர்க்கும் திருத்த வேலைகளைச் செய்பவர்கள் அதிக பட்சம் $5,000 டாலர்கள் மட்டில் பெற்றுக்கொள்ள முடியுமென பிரதமர் ஜஸ்டின் ட்றூடோவும் இயற்கை வளங்கள் அமைச்சர் சீமஸ் ஒரேகனும் இணைந்து சமீபத்தில் அறிவித்திருக்கிறார்கள்.

‘கனடா பசுமை வீடுகள் உதவித் திட்டம்’ (Canada Greener Homes Grants program) என்ற திட்டத்தின் கீழ், 7 வருடங்களுக்கு நடைமுறையிலிருக்கும் இத் திட்டத்திற்காக அரசாங்கம் $2.6 பில்லியன் டாலர்களை ஒதுக்கியிருக்கிறது.

வீடுகளில் சக்தியை விரயமாக்கும் எரிஉலை சூடாக்கிகள் (heaters), சாளரங்கள் (windows), கதவுகள் (doors) ஆகியவற்றை நவீன சக்தி சேமிக்கும் வகைகளுக்கு மாற்றுதல், சூரிய ஒளி மின் பிறப்பாக்கிகளை (solar panels) பொருத்துதல் ஆகிய திருத்த வேலைகளுக்காக இப் பணம் வழங்கப்படும்.

இத் திருத்த வேலைகளின் முதற்படியாக வீடுகள் இத் திட்டத்தின் உதவியைப் பெறத் தகுதியானவையா அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை நிறுவனங்களைக் கொண்டு பரிசோதிக்க வேண்டும். இதற்காக ஆகும் சுமார் $600 டாலர்கள் செலவையும் அரசாங்கம் பொறுப்பேற்கும்.

700,000 வீட்டுச் சொந்தக்காரர்கள் இத் திட்டத்தினால் பயனடைவர் என அரசாங்கம் எதிர்பார்க்கிறது என பிரதமர் தெரிவித்துள்ளார்.

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இவ்விணைப்பின் மூலம் இணையவழி விண்ணப்பங்களைச் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பத்தைச் செய்தவுடன் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து பரிசோதகர் ஒருவர் தொடர்புகொண்டு வீட்டைப் பரிசோதிக்கும் ஒழுங்குகளைச் செய்வார். இத் திட்டத்தினால் பலன்பெற வீடு தகுதியானது எனக் காணப்படின், வீட்டுச் சொந்தக்காரர் திருத்த வேலைகளைச் செய்ய உடன்படும் பட்சத்தில், அங்கீகரிக்கப்பட்ட திருத்த வேலைகளைச் செய்யும் நிறுவனம் அவ்வேலைகளை மேற்கொள்ளும். செய்யப்பட்ட வேலைகளின் தராதரம் பரிசோதிக்கப்பட்ட பின்னர் அரசாங்கம் இத் திருத்த வேலைகளுக்கான செலவுகளை வீட்டுச் சொந்தக்காரருக்கு மீளச் செலுத்தும்.

நாட்டின் மொத்த காபனீரொக்சைட் மாசுருவாக்கத்தில் 18%, சக்திய விரயமாக்கும் வீடுகளினால் ஏற்படுகின்றது எனக் கூறப்படுகின்றது.

இத் திட்டத்துக்காக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட 2,000 பரிசோதகர்களைப் பயிற்றுவிப்பதற்காக $10 மில்லியன் டாலர்களை அரசாங்கம் ஒதுக்கியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *