சட்டம்

சட்டம்: வீட்டு முன்றலில் டிலிவரி செய்பவர் வழுக்கி விழுந்தால் யார் பொறுப்பு?

இது கடும் பனிக்காலம். எதிர்பாராத வேளை எதிர்பாராத அளவு பனியோ, பனிமழையோ பெய்ததால் உங்கள் வீட்டு முற்படிகள், நடைபாதை, வாகனத் தரிப்பிடம் ஆகியவை மூடிக்கிடக்கின்றன. பஞ்சியோ, குளிரோ குசினிப் பக்கம் போகாமல் ஊபர்-ஈற்ஸ் மூலம் உணவை ஓர்டர் செய்திருக்கிறீர்கள். டிலிவரி செய்பவர் படிகளில் வழுக்கி விழுந்ததால் பெருங்காயத்துக்குள்ளாகிறார். அவரது காயத்துக்கு வீட்டுச் சொந்தக்காரராகிய நீங்களே காரணம் என அவர் நட்ட ஈடு கோரி உங்கள் மீது வழக்குப் போடுகிறார். அதற்கு நீங்கள் பொறுப்பு ஏற்க வேண்டுமா?

விழுந்தவர் ஊபர்-ஈற்ஸ் விநியோகஸ்தராக இருக்கவேண்டுமென்பதில்லை. அமசோன் விநியோகஸ்தராகவோ அல்லது தபால் விநியோகஸ்தராகவோ அல்லது பத்திரிகை / விளம்பர விநியோகஸ்ததாகவோ கூட இருக்கலாம். அவர்கள் யாராவது உங்கள் வீட்டின் எல்லைக்குள் வழுக்கி விழ நீங்கள் காரணமானால் நீங்களே பொறுப்பேற்கவேண்டும் என்கிறது ஒன்ராறியோ சட்டம். எனவே பனி பெய்து சில மணித்தியாலங்களுக்குள் தெருவிலிருந்து உங்கள் முன் கதவுக்கு வரும் நடைபாதையைத் துப்புரவு செய்து உப்பு அல்லது மணல் போன்றவற்றைப் போட்டு வழுக்காதவாறு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

உங்கள் வீட்டை வாடகைக்கு கொடுத்திருந்தால் பாதைகளையும் படிகளையும் சுத்தமாக வைத்திருப்பதற்கு வாடகைக் குடியிருப்பாளரே பொறுப்பு என்பதை ஒப்பந்தப் பத்திரத்தில் சேர்த்திருக்காவிட்டால் ஏதாவது சம்பவம் நேரும்போது வீட்டின் சொந்தக்காரரே அதற்கும் பொறுப்பேற்கவேண்டி ஏற்படும்.

வீட்டின் வாகனத் தரிப்பிடத்தின் வாயிலில் குறுக்கால் அல்லது மூலை வீடாயின் வீட்டைச் சுற்றியோ நடைபாதை (sidewalks) இருக்குமாயின் அதைச் சுத்தமாக வைத்திருப்பது நகரசபையின் பொறுப்பு என உப-சட்டங்கள் கூறினாலும் அவற்றுக்கும் வீட்டுச் சொந்தக்காரரோ அல்லது வாடகைக் குடியிருப்பாளரோதான் பொறுப்பேற்கவேண்டும் என நகரசபைகள் அறிவுறுத்துகின்றன. ஆனால் உண்மையில் அவை நகரசபைக்குச் சொந்தமான சொத்துக்களே தான். ஆனால் நீங்கள் ஒதுக்குகின்ற பனிக்கும்பல் இவற்றின் மேல் விடப்பட்டால் அதற்கு நீங்களே பொறுப்பு என நகரசபை குற்றஞ்சாட்டவும் கூடும்.

உங்கள் சொத்தின் எல்லைக்குள் டிலிவரி சாரதி வழுக்கி விழும் பட்சத்தில் அவர் தனது மருத்துவ, சம்பள மற்றும் இதர செலவுகளையும் நட்டங்களையும் உங்களிடம் கோரி வழக்குப் பதியலாம். ‘காயம்’ காரணமாக சிலர் நீண்டகால வேலையின்மையைக் காரணம் காட்டி பெரும் தொகையை உங்களிடமிருந்து வசூலிக்கவும் முனையலாம். சிலர் உங்களையும் நகரசபையையும் ஏககாலத்தில் நட்டஈடு கோரி நீதிமன்றம் கொண்டு செல்லலாம்.

உங்களில் சிலர் பனி அகற்றும் நிறுவனங்களை ஒப்பந்தம் செய்து வைத்திருப்பீர்கள். இந்நிலையில் வழுக்கி விழுபவர் உங்கள் மீதும் அந்நிறுவனத்தின் மீதும் ஏக காலத்தில் வழக்கைப் பதியலாம். பொதுவாக இப்படியான பனியகற்றும் ஒப்பந்தகாரர்கள் தமது ஒப்பந்தத்தில் ‘சிறிய்’ எழுத்துக்களில் சில நிபந்தனைகளைப் போட்டிருப்பார்கள். அதில் முக்கியமான ஒன்று “சில சென்ரிமீட்டருக்கு (3 அல்லது 4) மேல் பனி பெய்தால் மட்டுமே தாம் பனியைத் துப்புரவாக்குவோம்” என இருக்கும். பனிமழை பெய்யும்போது இந்த நிபந்தனையை அது மீறாது எனவே உப்பு அல்லது மண்ணைப் போடுவது அவர்களது பொறுப்பாகாது என்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சில விநியோகஸ்தர்களுக்காக சில நிறுவனங்கள் காப்புறுதிகளைச் (WSIB) செய்து கொடுக்கின்றன. இருப்பினும் WSIB சில செலவுகளுக்கு மட்டுமே பொறுப்பை ஏற்கும். மீதித் தொகைக்கு அவர்கள் கூட உங்கள் மீது வழக்குப்போட முடியும். இவ்வழக்கில் குற்றம் உங்கள் மீது எனக் காணப்படும் பட்சத்தில் WSIB யோ அல்லது OHIP போ தாம் கொடுத்த பணத்தை மீட்பதற்கு உங்கள் மீது வழக்குப் பதியலாம்.

வழுக்கி விழும் ஒருவர் 60 நாட்களுக்குள் தமது எண்ணத்தை உங்களுக்கு அறிவிக்க வேண்டும். இப்படியான வழக்குகளில் பெரும்பாலானவை வீட்டுச் சொந்தக்கார்ருக்கு எதிராகவே தீர்க்கப்படுகின்றதெனவும் அவர்களது வீட்டுக் காப்புறுதி நிறுவனங்கள் இந்நட்டஈட்டைச் செலுத்துவது வழக்கமெனவும் நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே உங்கள் வீட்டுக் காப்புறுதியில் ஒன்று அல்லது இரண்டு மில்லியன் டாலர்களுக்கு liability coverage இருக்கிறதா என்பதைப் பார்த்துக்கொள்ளுங்கள். (Image Credit: Brunet)

பொறுப்புத் துறப்பு: இது ஒரு ஆலோசனை மட்டுமே. மேலதிகமானதும், உண்மையானதுமான சட்ட ஆலோசனைகளுக்கு ஒன்ராறியோ மாகாணத்தில் பதிவு பெற்ற சட்ட வல்லுனரைத் தொடர்பு கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *