ஜூன் 26, 2023 ரொறோண்டோ நகர முதல்வர் தேர்தல் – மக்கள் வாக்குகள் யாருக்கு?
ஒலிவியா ச்சவ், அனா பைலோ முன்னணியில்…
திங்களன்று (ஜூன் 26, 2023) நடைபெறவிருக்கும் ரொறோண்டோ மாநகரசபையின் முதல்வருக்கான தேர்தலில் 102 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் கடந்த வாரங்களில் முன்னணி வேட்பாளர்கள் எனக் கருத்துக்கணிப்புகள் சுட்டிக்காட்டிய ஒழுங்கில் தற்போது பாரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மறைந்த என்.டி.பி. கட்சித் தலைவர் ஜாக் லெயிட்டனின் மனைவியுமான ஒலிவிய ச்சவ் தொடர்ந்தும் முன்னணியில் இருந்தாலும் அவருக்குப் பினால் நான்காவது இடத்தில் இருந்த முன்னாள் பதில் முதல்வர் அனா பைலோ தற்போது வேகமாக முன்னேறி இரண்டாமிடத்தை எட்டியுள்ளதாகத் தெரிய வருகிறது. பதவியைத் துறந்த முன்னாள் முதல்வர் ஜோன் ரோறியின் காலத்தில் உதவி முதல்வராக இருந்தவர் அனா பைலோ. அது மட்டுமல்லாது மக்களிடம் மிகவும் செல்வாக்குப் பெற்றிருந்த ஜோன் ரோறி முன்னெடுத்த பல செயற்திட்டங்களின் பின்னால் பணியாற்றியவர் அனா பைலோ. இதனால் மக்களிடம் அவருக்கு ஓரளவு ஆதரவு இருந்தாலும் கடந்த சில நாட்கள் வரை ஜோன் ரோறி போன்றோரின் ஆதரவு அவர்க்குப் பகிரங்கமாகக் கிடைக்கவில்லை. ஜோன் ரோறி மட்டுமல்லாது மாநகரசபையின் 25 கவுன்சிலர்களில் இதுவரை 9 பேர் பகிரங்கமாகத் தமது ஆதரவை அனாஅ பைலோவுக்கு அளித்துள்ளமை மக்களுக்கு அவர் மீதான ஆதரவைத் திடீரென ஊதிப் பெர்ப்பித்துள்ளது என்கிறார்கள்.
நேற்று எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகளில் மெயின் ஸ்ட்றீட் நிறுவனத்தின் கருத்துக்கணிப்பு ஒலிவியா ச்சவ்வின் ஆதரவென 30% த்தைக் கூறுகிறது. இது செவ்வாயன்று எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பிலிருந்து 6% குறைவெனக் கூறுகிறது. அதே வேளை அனா பைலோவின் ஆதரவு 9%த்தால் உயர்ந்து 22% த்துக்கு வந்திருக்கிறது. அதே வேளை மூன்றாமிடத்தில் இருக்கும் அந்தோனி ஃபியூறேயின் ஆதரவு 6%த்தால் உயர்ந்து 13%த்துக்கு வந்திருக்கிறது. இவர்களைவிட ஒன்ராறியோ பிரதமர் டக் ஃபோர்ட்டின் ஆதரவைப் பெற்ற மார்க் சோண்டர்ஸ் 4ஆம் இடத்திலும் 9% ஆதரவுடன் ஜோஷ் மற்லோ 5ஆம் இடத்திலும், 5% ஆதரவுடன் மிற்சீ ஹண்டர் 6ஆவது இடத்திலும் இருக்கிறார்கள். 1481 பேரிடம் எடுக்கப்பட்ட இக் கருத்துக் கணிப்பு பொதுவாக 95% சரியானதாக இருக்கிறது எனக் கூறப்படுகிறது.
இதற்கு முன்னர் நடைபெற்ற நகர முதல்வருக்கான தேர்தலிலும் ஆரம்பத்தில் முன்னணியில் இருந்த ஒலிவியா ச்சவ் அடுத்த இடத்திலிருந்த ஜோன் ரோறியினால் தோற்கடிக்கப்பட்டிருந்தார். எனவே வாக்களிப்புக்கு இன்னும் 3 நாட்கள் இருக்கும் வேளையில் மக்களின் தீர்ப்பு எப்போதும் எப்படியும் மாறுவதற்கான வாய்ப்புகள் உண்டு.