திருட்டைத் தவிர்க்க விரும்புகிறீர்களா? – திருடர்களே உதவிக்குறிப்புகளைத் தருகிறார்கள்
மாயமான்
விடுமுறையில் செல்வதற்காகவோ அல்லது வேறு ஏதாவது காரணங்களுக்காகவோ, சில மணித்தியாலங்களோ அல்லது சில நாட்களோ வீட்டை விட்டு வெளியில் போகவேண்டிய தேவை இருந்தாலோ நீங்கள் சில முற்பாதுகாப்புகளைச் செய்துகொள்வீர்கள். அப்படியிருந்தும் உங்களை விடக் கெட்டித்தனமான திருடர்கள் அசத்தும் வழிகளில் கன்னம் வைத்தோ வைக்காமலோ உங்கள் பெறுமதியான பொருட்களைத் திருடிவிடுகிறார்கள்.
உங்கள் உடமைகளைப் பாதுகாக்க விரும்பினால் திருடர்கள் பாவிக்கும் வழிகளைத் தெரிந்துகொள்வது நல்லது. கீழே தரப்படும் ‘டிப்ஸ்’, ‘திருந்திய’ முன்னாள் பக்காத் திருடர்களிடமிருந்து பெறப்பட்டவை. யாரோ ஒருவர் ‘றெடிற்’ தொடரில் பகிர்ந்ததைத் ‘திருடி’ உங்களுக்குத் தருகிறேன்.
****
திருடராய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. திருட்டும், விபசாரமும் மனித குலம் ஆரம்பமாகியதிலிருந்தே கூட வருபவை. அவற்றையும் தொழில்களாகவே நாம் அங்கீகரிக்க வேண்டும்.
ஒருமுறை – ‘கொஞ்சம்’ இளம் – வயதில் நண்பர் ஒருவரின் வியாபார நிலையத்தில், இரவு பூட்டப்பட்டதற்குப் பின்னர், நிலையத்துக்கு மேலே இருந்த அப்பார்ட்மெண்டில் எங்கள் வார விடுமுறைப் போதை விழாவைக் கொண்டாடிக்கொண்டிருந்தோம். நள்ளிரவிருக்கும், பின் கதவால் வெளியே வெண் சுருட்டுடன் வெளியே போனபோது பக்கத்து வியாபார நிலையத்தின் பின் கதவை ஒருவர் உடைக்க முயற்சிப்பது தெரிந்தது. நான் அவரைக் கண்டுவிட்டதை அவரும் கண்டுவிடார். என்னைப் பார்த்துவிட்டு எந்தவித குழப்பமுமில்லாமல் தொடர்ந்தும் முயற்சித்தார். ஹேய், என்ன செய்ய முயற்சிக்கிறாய் என உரத்த குரலில் நான் கேட்டேன் (கொஞ்சம் போதை). அவரும் அமைதியாக, “If you want, try the other one’ (தேவையானால் மற்றக் கடையை நீ உடை) எனக்கூறிவிட்டு தன் சோலியைத் தொடர்ந்தார். அவரது துணிச்சலையும், கெட்டித்தனத்தையும் பாராட்டிச் சிரித்துக்கொண்டே ‘குட் லக்’ சொல்லிவிட்டு நான் என் சோலிக்குப் போய்விட்டேன். ஒரு professional திருடனை அன்றுதான் முதன் முதலாகக் கண்டேன்.
திருடர்கள் பலவிதம். வைரஸ்கள் போல அவர்களும் கூர்ப்படைந்து செய்வன திருந்தச் செய்யப் பழகிவிட்டார்கள் எனவே அவர்களிடமிருந்து எம்மைப் பாதுகாக்க நாம் தான் இசைவாக்கமடையவேண்டும் அதற்கான உதவிக் குறிப்புகளே இவை.
****
- நீங்கள் விடுமுறையில் போவதைப் ‘பேப்பரில் போடாதீர்கள்’
விடுமுறையில், அதுவும் கியூபா போவது மனதுக்கு இதந்தரும் விடயம் என்பது எல்லோருக்கும் தெரியும். அதற்காக விமான நிலையத்தில் நிற்பது, ஏறுவது, கண்ணாடிக்குள்ளால் பார்க்கும் விமானங்கள், பின்னர் முகிற் கூட்டம், இறங்கு தளம் என்று எடுத்த அத்தனை படங்களையும் முகநூலில் ஏற்றி உறவினர்கள், நண்பர்களின் ‘லைக்குகளை’ வாங்கலாமென்றோ அல்லது சிலரைக் கடுப்பேத்தலாமென்றோ நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதே வேளை திருடர்களும் அவற்றை ‘லைக்’ பண்ணுவார்கள் என்பதையும் அறிந்து வைத்திருங்கள். அது மட்டுமல்ல உங்கள் ஈ-மெயிலைத் திருடி எப்போ திரும்பி வருவீர்கள் என்று கேட்டுப் பதில் பெறுமளவுக்கு திருடர்களில் புது variants உருவாகியிருக்கிறார்கள் என்பதையும் நம்பவேண்டும். அட்வைஸ்: விடுமுறையால் வந்த பின்னர் படங்களை நீங்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்.
2. நீங்கள் பொருட்களை ஒளித்து வைக்கும் இடங்கள் திருடர்களுக்கு ஏற்கெனவே ‘தெரிந்த இடங்கள்’
பெரும்பாலானவர்கள் தமது கடவுச் சீட்டு, நகைகள் ஆகியவற்றை, அழுக்குத் துணிகளை வைக்கும் கூடை, ஃபிறீசர், கூரை, எரிஉலை அறை என்று பல இடங்களிலும் மறைத்து வைக்கிறார்கள். இவையெல்லாம் திருடர்களுக்குப் பரிச்சயமான இடங்கள். முற்றிலும் எதிர்பாராத இடங்களைக் கண்டுபிடிப்பது அவரவர் கெட்டித்தனத்தைப் பொறுத்தது. ஆனால் எதை, எங்கே மறைத்து வைத்தீர்கள் என்பதை நீங்கள் கொண்டு திரியும் ஒரு டயறியில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் மறைத்து வைத்த விடயத்தை உங்கள் மூளையும் உங்களுக்கு மறைத்து விடலாம். உங்கள் வீட்டை ஒரு காலத்தில் வாங்குபவர்களுக்கு இது அதிர்ஸ்டமாகப் போய்விடலாம்!.
3. தெரியாத எவரையும் வீட்டுக்குள் அனுமதிக்காதீர்கள்
‘சோப்பு, சீப்பு, கண்ணாடி’ வியாபாரம் இப்போது குறைவெனினும், அவ்வப்போ தெரு வியாபாரிகள் ‘கேபிள்’, ‘ரெலிபோன்’, ‘வக்கூம் கிளீனர்’ ‘மலிவான எரிவாயுத் திட்டம்’ என்ற கழுத்துப் பட்டிகளுடனும், கையில் துண்டுப் பிரசுரங்களுடனும் வருவார்கள். சிலர் கையில் ஒரு மட்டையை வைத்துக்கொண்டு ‘எரிவாயு நிறுவனத்திலிருந்து’ வருவதாகக் கூறி உங்கள் எரி உலையைப் பார்க்கவேண்டுமென்று உள்ளே வருவதற்கு அனுமதி கேட்பார்கள். நீங்கள் அனுமதி கொடுப்பதற்கு முதலே சப்பாத்துக்களைக் கழற்றிவிட்டு உள்ளே நுழைந்து விடுவார்கள். இப்படியானவர்களை அனுமதிக்காமல் அவர்களது பெயர், தொலைபேசி இலக்கங்களைப் பெற்றுக்கொண்டு நிறுவனத்தைத் தொடர்புகொண்டு கேட்டு இன்னுமொரு நாளில் அவர்களை வரச் சொல்லுங்கள். முக்கியமாக உங்கள் ஸ்மார்ட் ஃபோனில் அவர்களது படத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.
4. ‘நாய் கடிக்கும் கவனம்’ பலகையை அல்லது ஸ்டிக்கரை முன் யன்னலில் ஒட்டி விடுங்கள்
நாய் இருக்கிறதோ இல்லையோ இப்படியான விடயங்கள் நிரம்ப உதவும். துவக்குக்குப் பயப்படாத ஆனால் நாய்க்குப் பயப்படும் திருடர்கள் நிறைய உண்டு.
5. திருடர்களை ஏமாற்றுங்கள்
வீட்டுத் திறப்பை (சாவி) முன் கதவுக் கம்பளத்துக்குக் கீழேயோ அல்லது யன்னலின் மேல் விளிம்பிலோ வைப்பது வழக்கம். திருடர்களை ஏமாற்ற விரும்பினால், கம்பளத்துக்குக் கீழே அல்லது யன்னலுக்கு மேலே போலியான ஒரு திறப்பை வைத்துவிட்டு உண்மையான திறப்பை வேறு எங்காவது வைத்து விடுங்கள். வாகனங்களினுள் வீட்டுத் திறப்புகளை வைத்துக்கொள்ள வேண்டாம். அட்வைஸ்: ஏமாற்றப்பட்ட திருடனுக்கு ஆத்திரம் வந்து கண்ணாடியை உடைக்காமல் பார்த்துக்கொள்ள பக்கத்தில் கற்கள் எதையும் விட்டு வைக்காதீர்கள்!!.
6. வாகனத்தைப் பூட்டி வைத்திருங்கள்.
வாகனம் கராஜ் இனுள்ளோ அல்லது வெளியிலோ தரித்திருந்தாலும் எப்போதுமே பூட்டி வைத்துக்கொள்ளுங்கள். அநேகமான திருடர்கள் கராஜ் மூலம் உள்ளே செல்வதையே விரும்புவார்கள். வீட்டை வழித்துத் துடைத்துக்கொண்டு, அவற்றை அங்கு நிற்கும் வாகனத்தில் ஏற்றி ஜாலியாகத் தப்பிக்கொள்வது அவர்களுக்கு இன்பம் தருவது.
நவீன வாகனங்கள் எலெக்ட்றோணிக் பூட்டுக்களைக் கொண்டவை. பலநாள் விடுமுறையில் போகும்போது வாகனத்தின் பற்றறி இணைப்பைத் துண்டித்து விடுங்கள். இதனால் திருடர்கள் ‘ஸ்கானிங்’ முறையால் வாகனத்தைத் திறக்க முடியாது. அதே வேளை வாகனத்தின் எலெக்ட்றோணிக் Fob இன் பற்றரியையும் கழற்றி வேறாக வைத்துவிடுங்கள். வாகனங்களுக்கு இரண்டாம் அல்லது மூன்றாம் உப சாவிகள் இருக்குமானால் அவற்றையும் மறைத்து விடுங்கள். வழக்கமாக அவற்றைத் தூக்குமிடத்தில் போலிச் சாவிகளைத் தூக்கி விடுங்கள்.
அநேகமான கராஜ்கள் இயந்திரம் மூலம் இயக்கப்படுபவை. இதையும் ஸ்கான் செய்து திறக்கத் திருடர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். இதிலிருந்து அவர்களை ஏமாற்ற காரஜ் கதவைத் திறக்கும் மோட்டரிலிருந்து வரும் சங்கிலியில் தூங்கும் கயிற்றை இழுத்து கதவுகள் தானியக்க முறையில் இயங்காது பார்த்துக்கொள்ளுங்கள். விடுமுறையால் திரும்பியதும் இதைத் திரும்பவும் தானியக்க முறைக்குக் கொண்டு வரலாம்.
7. யன்னல்களைச் சாத்திப் பூட்டிக்கொள்ளுங்கள்
விடுமுறையில் போவதற்கு முதல் சகல யன்னல்களையும் கெட்டியாகப் பூட்டிக் கொள்ளுங்கள். முடிந்தால் ‘நாய் கடிக்கும் கவனம்’ ஸ்டிக்கர்களையும் ஒட்டிக் கொள்ளுங்கள். நிலக்கீழறையில் இருக்கும் யன்னல்களையும் மறந்துவிடாதீர்கள். திருடனுக்கு விருப்பமானவை அவை. இய் யன்னல்களுக்கு குறுக்கே இரும்பினாலான தடுப்புகளை வாங்கிப் பூட்டிக் கொள்ளுங்கள்.
8. தங்க நகைகளைமறைத்துவைக்கச் சிறந்த இடம் ‘குளோசெட்டுகள்’ அல்ல.
குளோசெட்டுகளில் துணிகளுக்குக் கீழே, துணிக் கூடைகளுள் அல்லது ‘இரும்பாலான’ பெட்டிகளுள் (iron safe) நகைகளையும் கடவுச் சீட்டுக்களையும் ஒளித்து வைப்பது பெரும்பாலானோரின் பழக்கம். இது திருடர்களுக்கும் பழக்கம். எனவே இவ் விடயத்தில் கொஞ்சம் கற்பனையைப் பாவிப்பது நல்லது. விடுமுறைக்குப் போவதற்கு முதல் எல்லாவற்றையும் வங்கியில் வைப்பது நல்லது.
திருமண, சுபகாரிய நாட்கள் எப்போதென்பதையும் திருடர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். அநேகமான திருட்டுக்களில் வேற்றினத்தவரோடு நம்மவரும் சேர்ந்தே செயற்படுகிறார்கள். எனவே போலித் தாலிக்கொடிக்கும் 22 கரட்டுக்கும் வித்தியாசம் வேறினத்தவர்களுக்கும் தெரிந்திருக்கிறது. சுப காரியங்களுக்கு இரண்டொரு நாட்களுக்கு முன்னரும், பின்னரும் அவதானமாக இருக்கவேண்டிய நாட்கள். பணம், நகை ஆகியவற்றைக் கண்டுபிடிக்க சில ஸ்மார்ட் திருடர்கள் எலெக்ட்றோணிக் ஸ்கானர்களையும் பாவிக்கிறார்கள். போலி நகைகள் மூலம் அவர்களை ஏமாற்றலாம். சிறிய iron safe பயன்படப் போவதில்லை. ஆனால் திருடர்களை ஏமாற்ற அவற்றைப் பயன்படுத்தலாம்.
அநேகமான திருடர்கள் 15 நிமிடத்துக்கு மேல் வீடுகளுக்குள் செலவழிப்பதில்லை. எனவே போலி நகைகள், பொருட்களை அவர்கள் எடுத்துக்கொண்டு ஓடித் தப்பவே செய்வார்கள் என்பதையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
9. CCTV கமராக்கள், அசைவினால் இயக்கப்படும் ஒளி விளக்குகளின் பாவனை
கண்காணிப்பு கமராக்கள் மற்றும் அசைவனவற்றால் இயக்கப்படும் ஒளி விளக்குகள் சில திருடர்களைத் தூர வைத்துக்கொள்ளும். ஆனாலும் அவற்றையும் இயங்காமல் செய்யப் பல திருடர்கள் வழிவகைகளை வைத்திருக்கிறார்கள். ஒரு அலாரம் அடித்து எத்தனை செக்கண்டுகள், நிமிடங்களில் பொலிஸ் அல்லது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வருவார்கள் என்பதைத் திருடர்கள் மிகவும் துல்லியமாக அறிந்து வைத்திருக்கிறார்கள். எனவே இப்படியான தொழில் நுட்பங்கள் திருட்டைக் குறைக்கலாம் ஆனால் அவற்றை ஒழிக்க மாட்டா என்பதை மனதில் வைத்திருங்கள். அசைவினால் இயங்கும் ஒளி விளக்குகள் மலைக்க வைப்பதனால் பல திருடர்கள் அது எங்கிருந்து வருகிறது எனத் தெரியாமல், எதிர்பாராத ஆச்சரியத்துக்குள்ளாகி ஓடித் தப்பிவிடுவதுண்டு. சில கமராக்கள் இவ்வெளிச்சத்தில் திருடர்களது ஒளிப்படங்களைத் துல்லியமாகப் பதிவுசெய்துவிடுவதுமுண்டு.
சிலர் பல நுண்ணிய கமராக்களை (பொத்தான்) பூட்டுகள் மற்றும் யன்னல் மூலைகளில் பொருத்துகிறார்கள். தொழில்நுட்பம் பல வழிகளிலும் திருடர்களைப் பிடிக்கவும், அடையாளம் காணவும் உதவுகிறது. ஆனால் அவற்றையும் ஏமாற்றும் வழிகளையும் திருடர்கள் விரைவில் கண்டுபிடித்து விடுவார்கள் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
10. ஸ்மார்ட் லைட்களைப் பொருத்திக் கொள்ளுங்கள்
வீட்டில் எவருமில்லாதபோது தானாக, எழுந்தமானமாக ஒளிர்ந்து அணையும் ஸ்மார்ட் லைட்களைப் பொருத்திக் கொள்ளுங்கள். நீங்கள் இல்லாதபோது இந்த விளக்குகள் தானாகவே ஒளிர்ந்து வீட்டில் யாரோ இருக்கிறார்கள் என்ற உணர்வைத் திருடர்களுக்குக் கொடுக்கும். சில வீடுகளில் வெளியில் பொருத்தப்பட்ட அசைவினால் இயங்கும் விளக்குகளின் இயக்கத்தின்போது வீட்டுக்கு உள்ளேயும் விளக்குகள் எரியக்கூடியதாகச் செய்துகொள்ளலாம்.
11. தபால் பெட்டிகளைத் தினமும் வெறுமையாக்குங்கள்
தபால் பெட்டி நிறைந்திருப்பது பல வழிகளிலும் திருடர்களுக்கு வெற்றிலை வைத்து அழைப்பது போல. வீட்டில் ஒருவருமில்லை என்பதைப் பெரிய பானர் கட்டி அறிவிப்பது அது. விடுமுறையில் செல்வதற்கு முன்னர் அதைத் தினமும் வெறுமையாக்கும் வழிகளைச் செய்ய வேண்டும். தபால் அலுவலகத்திற்கு அறிவித்து வருகின்ற தபால்களை நீங்கள் திரும்புமட்டும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும் ஒழுங்குகளையும் செய்துகொள்ளலாம்.
12. கதவு மணி அடிக்கும்போது சிறுவர்களைக் கதவுகளைத் திறக்க அனுமதிக்காதீர்கள்.
சில திருடர்கள் சிறுவர்களோடு கதைத்து வீட்டு நிலைமைகளை அறிந்துகொள்வார்கள். சிலர் பலாத்காரமாக உள்ளே நுழைவதற்கும் இது வழி வகுக்கும்.
13. போலி மின்னிணைப்பு பெட்டிகள்
சிலர் தமது நகைகள் போன்ற சிறிய பொருட்களையோ அல்லது பணத்தையோ மறைத்து வைக்கவென போலியான மின்னிணைப்பு பெட்டிகளை (electrical outlets) பொருத்தி வைக்கிறார்கள். இவற்றையெல்லாம் கழற்றி உள்ளே பார்ப்பதற்கு திருடர்களுக்கு நேரமில்லை.
14. ‘படம் காட்டாதீர்கள்’
ஏற்கெனவே கூறியது போல், உங்கள் வீட்டிலிருக்கும் பெறுமதியான அலங்காரங்களையோ அல்லது வீட்டின் அறைகள், தளபாடங்களையோ, கொண்டாட்டங்களின்போது வளைந்த படியிலிருந்து குடும்பமாக எடுத்த படங்களையோ, அல்லது விலையுயர்ந்த வாகனத்தில் சரிந்து ஒய்யாரமாக நின்று எடுக்கும் படங்களையோ சமூக வலைத் தளங்களில் பதிந்து புகழ் சேர்க்க வேணடாம். திருடர்கள் மட்டுமல்ல, பொலிஸ், வருமானவரித் திணைக்களம் எல்லாமே முதலில் போவது இத் தளங்களுக்கே.
15. வீட்டின் கூரைக்குக் கீழ்
சிலர் தமது பெறுமதியான பொருட்களைக் கூரைக்குக் கீழே (attic) மறைத்து வைக்கிறார்கள். இது திருடனுக்கும் தெரியுமானாலும் அவன் வீட்டுக்குள் நிற்கும் சொற்ப நேரத்தில் கூரைக்குள் ஏறிப்பார்க்க விரும்பமாட்டான். ஆனால் எங்கு மறைத்து வைத்தீர்கள் என்பதை எங்காவது குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
16. பக்கவாட்டுக்குத் தள்ளித் திறக்கும் கதவுகள்
அநேகமான வீடுகளில் பின் தோட்டத்திற்குச் செல்லும் கதவுகள் பக்கவாட்டுக்குத் திறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. பல தடவைகளில் சிலர் இவற்றை உறுதியாகப் பூட்டிக் கொள்ளாமல் சென்று விடுகின்றனர். சில பூட்டுகள் இலகுவாக முறிந்துவிடுகின்றன. பெரும்பாலான திருடர்கள் இப் பாதையத்தான் விரும்புகிறார்கள். இதற்கு மிகச் சிறந்த தடையாக ஒரு இரும்புக் கம்பி அல்லது மரக் கட்டையைக் கதவு நகரும் கீழ்ப்பாதையில் குறுக்காக வைத்துக்கொள்வது நல்லது.
17. புல் வெட்டுதல் / பராமரிப்பு
பலர் விடுமுறை செல்லும்போது குறைந்தது முன் தோட்டத்தின் புல்லை வெட்டுவதற்கும், தண்ணீர் பாய்ச்சுவதற்கும் ஏதாவது ஒழுங்குகளைச் செய்துகொள்ள வேண்டும். திருடர்களை இலகுவாக அழைக்கும் விடயங்களில் இதுவுமொன்று.
18. குப்பைக் கூடை
சிலர் புதிய விலைகூடிய ரெலிவிசன் போன்ற பொருட்களை வாங்கிவிட்டு அவற்றின் வெறும் பெட்டிகளை உடைக்காமல் அப்படியே வெளியே வைத்து விடுகிறார்கள். இதுவும் திருடன் குறித்து வைத்துக்கொள்ளும் ஒரு விடயம். இயலுமானால் குப்பை எடுப்பவர் வரும்வரை கராஜ் உள்ளே அல்லது வீட்டுக்குப் பின்னால் வைத்துக்கொள்தல் நல்லது. உடைத்து மடித்துக் கட்டும்போது உள்பக்கம் வெளியேயாக வைத்து மடிப்பதும் நல்லது.
19. ஏணிகளை வெளியில் வைக்காதீர்கள்
சிலர் ஏணிகளை வீடுகளின் வெளிப்புறத்தில் வைப்பதுண்டு. இதுவும் திருடர்களை இலகுவாக ஈர்க்கும் விடயம். பெரும்பாலானவர்கள் இரண்டாவது மாடிகளில் யன்னல்களைப் பூட்டுவதில்லை. ஏணி திருடர்களுக்கு இவ்விடயத்தில் உதவியாகி விடுகிறது.
20. வெளிக்கதவுகள் அனைத்தும் இரும்பினால் செய்யப்பட்டதாக இருப்பது நல்லது
அநேகமான வீடுகள் மரத்தினாலான கதவுகளையே கொண்டுள்ளன. திருடர்கள் வைத்திருக்கும், பற்றரியில் இயங்கும் வாள்களின் மூலம் இவற்றை இலகுவாக வெட்டி ஓட்டை போட்டு பூட்டைத் திறந்துவிடலாம். எனவே முடிந்தால் வெளிக்கதவுகளை இரும்பினாலான கதவுகளாக மாற்றி விடுங்கள்.
21. இணைய வியாபாரம்
சிலர் தமது பொருட்களை இணையத் தளத்தில் போட்டு விற்கிறார்கள். இதற்காகத் தெரியாதவர்களையும் வீட்டுக்குள் அழைக்கவேண்டி ஏற்படுகிறது. பல திருடர்கள் இவற்றைச் சாதகமாகப் பயன்படுத்தி தமது கைங்கரியங்களைச் செய்துவிடுகிறார்கள்.
22. எச்சரிக்கை அலாரம் ஒன்றைப் பூட்டிக் கொள்ளுங்கள்
முக்கியமாக விடுமுறையில் செல்லும்போது அல்லது நீண்டகால அலுவல்களுக்கு வெளியிடங்களுக்குச் செல்லும்போது வீட்டிற்கு ஒரு அலாரம் ஒன்றைப் பொருத்திக்கொள்வது நல்லது. பல தடவைகளில் இது எழுப்பும் ஒலியால் திருடர்கள் மிரண்டுபோய் ஓடிவிடுவது வழக்கம்.