முதலீட்டு இலாப வரி (Capital Gains Tax) – ஒரு விளக்கம்
கனடாவில் வீடு, கட்டிடங்கள் போன்ற சொத்துகளில் முதலீடு செய்பவர்கள் அவற்றை விற்கும்போது இலாபமடைவார்களாயின் அந்த இலாபத்தை முதலீட்டு வருமானமாகாக் கணித்து அதற்கு கனடிய அரசு மேலதிக வரியை அறவிடுகிறது. ‘முதலீட்டு இலாப வரி (Capital Gains Tax) எனப்படும் இவ்வரி இதுவரை இலாபத்தின் 50% ஆக இருந்தது எனினும் இவ்வருடம் ஜூன் 25 முதல் இவ்விலாபம் $250,000 இற்கும் அதிகமாக இருப்பின் அந்த மேலதிக பங்கிற்கு 67% வரி அறவிடப்படுமென மத்திய அரசு அறிவித்திருந்தது. இதனால் பல முதலீட்டாளர்கள், குறிப்பாக ஆதன முதலீட்டாளர்கள் அதிக வரிப்பணத்தை அரசுக்குச் செலுத்தவேண்டி ஏற்படலாம். இதனால் இவ்வரி பற்றிய விளக்கத்தை இக்கட்டுரை தர முயற்சிக்கிறது.
முதலில் ஒரு சிறு வகுப்பு:
கனடாவில் ஒருவர் தனது சொந்த குடியிருப்பிற்காக வாங்கி அதில் தொடர்ச்சியாகக் குடியிருந்தால் அவ்வீட்டை ‘குடும்ப வீடு’ (matrimonial home) என அரசு கருதுகிறது. இவ்வீட்டை விற்கும்போது கிடைக்கும் இலாபத்திற்கு ‘முதலீட்டு இலாப வரி’ அறவிடப்படுவதில்லை. மாறாக அதே நபர் இரண்டாவது வீடொன்றை வாங்கி அதை வாடகைக்கு விட்டு சில வருடங்களின் பின் அதை விற்பனை செய்து இலாபமீட்டுவாரானால் அந்த இலாபம் ‘முதலீட்டு இலாப வரி’ க்குள் வந்துவிடும். இதே போன்று வேறு எந்த முதலீடுகள் மூலமும் இலாபம் சம்பாதித்தால் அதற்கு இந்த இலாப வரி அறவிடப்படும்.
உதாரணமாக ஒருவர் 2022 இல் 1 மில்லியன் டொலருக்கு ஒரு வீட்டை வாங்கி அதை 2024 இல் 1.5 மில்லியன் டொலர்களுக்கு விற்றிருந்தால் அதன் மூலம் சம்பாதித்த 500,000 டொலர் இலாபத்திற்கு செலுத்த வேண்டிய இலாப வரி: முதல் $250,000 இலாபத்திற்கும் 50% த்தின்படி $125,000 வரியும்; மீதி $250,000 இலாபத்திற்கும் 67% ப்படி $167,500 வரியுமாக மொத்தம் $292,500 அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டும். ஸ்தாபனங்கள் (Corporations) மற்றும் அறக்கட்டளைகள் (Trusts) போன்றனவற்றின் மூலமாக ஈட்டும் இலாபத்திற்கு தொடர்ந்தும் 67% வரி அறவிடப்படும்.
இதே வேளை ஒரு சொத்து நட்டத்திற்கு விற்கப்படுமாயின் இந்த நட்டத்தை வேறொரு இலாபமீட்டித் தரும் சொத்து விற்பனையின் இலாபத்தில் கழித்து (offset) மீதிக்கு வரி செலுத்துவதன் மூலம் சிறிதளவாவது நட்ட ஈட்டைப் பெற்றுக்கொள்ள முடியும். இது அந்த வருடத்துக்குரிய நட்டத்தை மட்டுமல்ல அதற்கு முந்திய 3 வருடங்களின் முதலீட்டு நட்டத்தையும் offset பன்ணுவதற்குப் பாவிக்க முடியும்.
முதலீட்டு இலாப வரிக்கென கனடாவில் தனியான வரியென்று எதுவும் அறவிடப்படுவதில்லை. மாறாக ஒருவரது வருடாந்த வருமானத்துடன் இலாபம் கூட்டப்பட்டோ அல்லது கழிக்கப்பட்டோ மீதிக்கு வரி செலுத்தப்படுகிறது. உதாரணத்திற்கு ஒருவரது இந்த வருட வருமானம் குறைவாக இருப்பின் அதே வேளை முதலீட்டினால் ஏற்பட்ட நட்டம் அதிகமாக இருப்பின் இந்நட்டத்தை அடுத்து வரும் வருட வருமானங்களில் கழித்துக் கொள்ளலாம்.
இவ்விலாபங்கள் சொத்து விற்பனை மூலம் கிடைக்கப்படுவது மட்டுமல்ல. பங்குச் சந்தைகளில் முதலீட்டு கிடைக்கும் இலாபத்திற்கும் இதே நிலைதான்.
இலாபவரியைக் குறைப்பதற்கான வழிகள்
முதலீட்டு வணிகத்தில் ஈடுபடும் பலர் தமது வணிகம் தொடர்பாக எழும் தமது நாளாந்த / மாதாந்த செலவுகளைக் கவனமாகக் குறிப்பெடுத்து அவற்றை முதலீட்டால் வரும் இலாபத்தில் கழித்த பின்னர் வரும் இலாபத்திற்கே வரி செலுத்துகிறார்கள். இது தொடர்பாக உங்கள் கணக்காளர் / வருமான வரி நிபுணர்களிடம் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வது நல்லது.
இதே போல உங்கள் முதலீட்டு இலாபத்தை ஏதோ ஒரு வருமான பதியப்பட்ட தொண்டு நிறுவனத்திற்கு அன்பளிப்பு செய்தால் அப்பங்கை உங்கள் இலாபத்திலிருந்து கழித்துக் கொள்ள முடியும். அல்லது உங்கள் சொத்துக்களில் கணவன் / மனைவி / பிள்ளைகளைச் சேர்த்துக்கொள்வதன் மூலம் இலாபம் பங்கிடப்பட வாய்ப்புகளுண்டு. எதற்கும் உங்கள் வருமானவரி ஆலோசகருடன் தொடர்பு கொண்டு இவ்விடயத்தில் ஆலோசனைகளைப் பெறவும். ( Image Credit: CTV News)



