ருவிட்டருடனான ஒப்பந்தம் முறிகிறது – இலான் மஸ்க் திடீர் அறிவிப்பு!
உலகப் பெரிய பணக்காரரும் ரெஸ்லா நிறுவன அதிபருமாகிய இலான் மஸ்க் சமூக வலைத்தளமாகிய ருவிட்டர் நிறுவனத்தை வாங்குவதெனச் செய்துகொண்ட ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ளப் போவதாகத் திடீரென விடுத்த அறிவிப்பைத் தொடர்ந்து ருவிட்டரின் பங்கு விலைகள் சந்தையில் பாரிய சரிவைக் கண்டுள்ளன.
$44 பில்லியன் டாலர் தொகையைச் செலுத்தி ருவிட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கு மஸ்க் ஏப்ரல் மாதம் ஒப்பந்தம் செய்திருந்தார். ஆனால் ருவிட்டர் நிறுவனம் தனது கணக்குகளில் எத்தனை ‘ஸ்பாம்’ மற்றும் ‘பொட்’ போன்ற போலிக் கணக்குகளை வைத்திருக்கிறது என்ற தகவல்களைத் தரவில்லை எனக் குற்றஞ்சாட்டி இவ்வொப்பந்தத்தை முறித்துக்கொள்ளப் போவதாக அறிவித்திருக்கிறார். ஏனைய பல சமூகவலைத் தளங்களைப் போல ருவிட்டரும் ‘பொட்’ (Bot) எனப்படும் ஒருவகையான மென்பொருளைப் பின்புலத்தில் பயன்படுத்தி , மனிதர்களுக்குப் பதிலாகத், தானே சில கணக்குகளுக்கு ‘லைக்’ (like), ‘றிருவீட்’ (retweet) போன்ற விடயங்களைச் செய்வதன் மூலம் சில குறிப்பிட்ட செய்திகளையும் விளம்பரங்களையும் மேலும் பிரபலப்படுத்தி விடுகின்றன. இதனால் விடயமறியாத பொதுமக்கள் பொய்யாகப் பிரபலப்படுத்தப்பட்ட அச் செய்திகளையும் விளம்பரங்களையும் நம்பி அவை விரிக்கும் வலைகளில் வீழ்ந்துவிடுகிறார்கள். ருவிட்டர் நிறுவனமும் இப்படியான bot மென்பொருள்களைப் பாவிக்கிறது என்பது இலான் மஸ்கிற்குத் தெரியுமென்பதோடு அவை பற்றிய தகவல்களைத் தர ருவிட்டர் மறுத்துவிட்டது என்ற காரணத்தால் ஒப்பந்தத்திலிருந்து தான் விலகுவதாக அறிவித்திருந்தார்.இந்த முடிவை ஏற்க மறுத்த ருவிட்டர் இலான் மஸ்க் மீது நீதிமன்றத்தில் வழக்குப் போடப் போவதாக எச்சரித்திருக்கிறது. “வேண்டுமானால் bot பற்றிய தகவல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கட்டும்” என மஸ்க் அதற்கு நையாண்டியாகப் பதிலளித்திருக்கிறார்.
இந்த இழுபறி காரணமாக சந்தையில் $54.20 விற்ற ருவிட்டரின் பங்கு விலை நேற்று (திங்கள்) $32.64 இற்கு வீழ்ச்சியடைந்தது.
நீதிமன்றச் சண்டைக்கென ருவிட்டர் நிறுவனம் உலக மகா சட்ட நிறுவனங்களில் ஒன்றான நியூயோர்க்கைச் சேர்ந்த ‘வாட்ச்ரெல் லிப்டன் றோசென் அன்ட் கட்ஸ்’ (Wachtell Lipton Rosen & Katz) என்ற நிறுவனத்தை அமர்த்தியுள்ளது.
இவ்விடயம் பற்றி பி.பி.சீ. இற்குக் கருத்துக்கூறிய கொலம்பியா சட்டப் பேராசிரியர் ஜோன் கொஃபீ, “இவ்வழக்கில் மஸ்க் வெற்றிபெறுவதற்கான சாத்தியங்கள் இல்லை. ஆனால் நீதிமன்றத்துக்கு வெளியே இரு தரப்பும் புதிய ஒப்பந்தம் ஒந்றைச் செய்வதன் மூலம் மீண்டும் இணக்கத்துக்கு வருவார்கள். இதன் மூலம் ஏற்கெனவே இணங்கிய விலையில் $10-$20 பில்லியன் தொகையைக் கழித்துவிடுவதற்கு மஸ்க் முயற்சிக்கலாம்” என எதிர்வு கூறியுள்ளார்.
ஆரம்பத்தில் ருவிட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கு மஸ்க் இணங்கியபோது ருவிட்டர் மென்பொருளிலிருந்து bots முற்றாக அகற்றப்பட்டு தனியே மநிதர்களின் நிஜமான கருத்துக்களை மட்டும் வெளிக்கொணரவேண்டுமெனக் கேட்டிருந்தார். ஆனால் ருவிட்டர் நிறுவனம் Bots பாவனையை நீண்டகாலமாகப் பாவித்து மக்களின் மனங்களைக் குழப்பும் வகையில் செய்திகளைப் பிரசுரித்து வருகிறது. ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளின்போது ருவிட்டர் தனது கணக்காளர் எண்ணிக்கையின் 5% மட்டுமே bots /spam கண்க்குகள் என வாதாடி வந்தது. ஆனால் உண்மையில் 20% த்துக்கும் மேலான கணக்குகள் bots / spam வகையைச் சேர்ந்தவை எனத் தான் நம்புவதாகவும் ருவிட்டர் தனது கூற்றி நிரூபிக்கவேண்டுமெனவும் மஸ்க் தொடர்ச்சியாகக் கேட்டு வந்தார்.
இலான் மஸ்க் ஆரம்பத்தில் ருவிட்டருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தும்போது அவருடைய ரெஸ்லா நிறுவனத்தின் பங்கின் விலை 20% வீழ்ச்சியடைந்தது. அப்போது அவர் தனது ரெஸ்லா பங்குகளை விற்று $8.5 பில்லியன் பணத்தைச் சேகரித்தார். ருவிட்டர் நிறுவநத்தை வாங்குவதற்காக அவர் தனது ரெஸ்லா பங்குகளை விற்கிறார் என அப்போது பேசப்பட்டது. இச் சரிவை மஸ்க் எதிர்பார்த்திருக்கவில்லை. இதன் காரணமாக ருவிட்டருடன் மீளப் பேச்சுவார்த்தை நடத்தி, வாங்க ஒப்புக்கொண்ட விலையைக் குறைத்துத் தான் எதிர்கொண்ட நட்டத்தை ஈடுசெய்ய மஸ்க் இந்த வழியைப் பின்பற்ற முயல்கின்றாரோ எனப் பங்குச் சந்தை நிபுணர்கள் கருதுகிறார்கள். தனது bot விடயத்தில் ருவிட்டர் பொய் சொல்லியிருந்தாலும் செய்துகொண்ட ஒப்பந்தத்திலிருந்து அவர் தன்னை விடுவித்துக்கொள்ள முடியாது என சட்ட நிபுணர்கள் கருதுகிறார்கள்.
இவ்வொப்பந்தத்தை முறித்துக்கொள்வதானால் ஏதாவது ஒரு தரப்பு $1 பில்லியன் நட்டஈடு வழங்கவேண்டும். ருவிட்டர் சமூகவலைத்தளம் 100 மில்லியன் கணக்குகளைக் கொண்டிருக்கிறது.