Real Estateஅடமானம்

ரொறோண்டோ: அடமானக் கடன் செலுத்தமுடியாதவர்களின் தொகை அதிகரிப்பு!

ரொறோண்டோ வீட்டுச் சந்தை மீண்டுமொரு தடவை சிக்கலுக்குள்ளாகியிருக்கிறது என சந்த அவதானிப்பாளர்கள் கருதுகின்றனர். பாவனையாளர்களின் கடன்பெறு தகமைகளைத் தரவுப்படுத்தும் நிறுவனமான எக்குவிஃபக்ஸ் (Equifax) சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் அடமானக் கடன்களைத் திருப்பிச் செலுத்தமுடியாமல் தவிக்கும் வீட்டுச் சொந்தக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. கடந்த 9 வருடங்களின் பின் இந்நிலை ஏற்பட்டிருப்பதாக அது தெரிவித்துள்ளது. அதுவரை காலமும் அடமான வட்டி வீதம் வரலாற்றிலேயே மிகவும் குறைந்ததாக இருந்தபோது கடன்களைப் பெற்று வீடுகளை வாங்கியவர்கள் தற்போதைய வட்டி வீதத்தில் கடன்சுமையைத் தாங்கமுடியாமல் போயிருப்பது காரணமாக இருக்கலாமெனக் கூறப்படுகிறது.

எக்குவிஃபக்ஸ் நியமங்களின்படி கடனைப் பெற்ற ஒருவர் தனது தவணைக்கான கட்டுப்பணத்தை 90 நாட்களுக்கு மேல் தாமதிப்பாரானால் அவரது கணக்கு ‘தவறிய கணக்கு’ (delinquency account) என்ற வகைக்குள் அடக்கப்பட்டுவிடும். இது மேலும் தொடருமானால் கடனை வழங்கிய நிறுவனமோ அல்லது தனிநபரோ கடனைத் திருப்பி அடைக்கும்படி கட்டளையிடுவதும் அதற்கு இணக்கம் காணப்படாத பட்சத்தில் அவ்வீட்டைச் சுவீகரித்துத் தனது நட்டத்தை ஈட்டிக்கொள்ள முற்படுவர். இதுபற்றிய பூரண விளக்கமற்ற பல கடனாளிகள் இறுதி நேரத்தில் பெருந்தொகை பணத்தைச் செலவழித்து வீட்டை மீட்கும் வழிகளில் இறங்கவேண்டி ஏற்படுகிறது.

வருமானச் சிக்கலில் தவிப்பவர்கள் சிலர் தமது வீடுகளை விற்று கடனை அடைப்பதற்கு முயற்சித்தாலும் வீட்டு விலைகள் சரிவடைந்திருக்கும் இச்சந்தையில் உடனடியாக அதை விற்க முடியாது திண்டாடுகிறார்கள். சிக்கல் வரும்வரை ஒழுங்காகக் கடனை மீளச்செலுத்தி வந்தவர்களது கணக்குகளை பெரும்பாலான வங்கிகள் ஓரளவு தயாள குணத்துடன் அணுகி சில சகாயங்களைச் செய்கின்றன. ஆனால் அதிக வட்டிக்குக் கடனை வழங்கிய தனியார் பலர் வங்கிகளைப் போல் இரக்கம் காட்டுவதில்லை என்பது பொதுவான அபிப்பிராயம். கடனாளிகள் திணறும் போதுதான் அவர்கள் வீடுகளைப் பறிக்கத் தீவிரமாகச் செயற்படுவார்கள் எனவே அப்படியான கடன்களை வைத்திருப்பவர்கள் மாதாந்த கட்டுப்பண விடயங்களில் அசமந்தமாக இருக்கக்கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

பெரும்பாலான வீட்டுச் சொந்தக்காரர்கள் கட்டுப்பணம் செலுத்துவதில் தாமதப்படுத்துவதில்லை. ஆனால் மூன்று மாதங்களௌக்கு மேல் பணம் கட்டாதவர்களின் தொகை அதிகரிக்கிறதென்றால் கடன் பெற்றவர்கள் தமக்கு இயன்றவரை எல்லா முயற்சிகளையும் எடுத்ததன் பின்னர் இயலாமை காரணமாகவே கைகளை விரிக்கின்றனர் எனவும் எக்குவிஃப்ஃக்ஸின் இந்த அறிக்கை வீட்டுச் சந்தை பாரிய நெருக்கடிக்குள்ளாகப் போகிறது என்பதைக் கட்டியம் கூறுவதாகவே எடுத்துக்கொள்ள வேண்டும் என சந்தை அவதானிகள் தெரிவிக்கிறார்கள்.

ரொறோண்டோ பெரும்பாகத்தில் கடனைத் திருப்பிக்கட்டத் தவறியவர்களின் எண்ணிக்கை கடந்த சில வருடங்களாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. 2015 ஆம் ஆண்டில் ஆகக்குறைந்த அளவில் இருந்த இத்தகமை 2024 இல் 166%த்தால் அதிகரித்திருக்கிறது என்கிறது எக்குவிஃபக்ஸ் அறிக்கை. இதை எதிர்பார்த்த அரசு தொடர்ச்சியாக வட்டி வீதத்தைக் குறைத்து சந்தைத் திருத்தத்தைத் திணிக்க முயற்சித்தது. இருப்பினும் கோவிட் தொற்றினால் குழப்பத்துக்குள்ளான பொருளாதாரத்தை சரியான திசையில் திருப்பிவிடுவதில் அரசு தாமதமாகிவிட்டது எனப் பொருளாதார நிபுணர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *