Events

ரொறோண்டோ: இன்னுமொரு பெருவிழா திடீர் நிறுத்தம்!

கடந்த 40 வருடங்களாக ரொறோண்டோ வாழ் மக்களை மகிழ்வித்து வந்த AFROFEST என்னும் இசை நிகழ்ச்சியின் இவ்வருட நிகழ்வு நிறுத்தப்படுகிறது என திடீர் அறிவித்தல் ஒன்றை இவ்விழாவின் அமைப்பாளர்களான Music Africa வெளியிட்டுள்ளனர். இவ்விழாவிற்கான அனுமதி விண்ணப்பம் கடந்த பெப்ரவரி மாதமே ரொறோண்டோ மாநகரசபைக்கு அனுப்பப்பட்டிருந்தும் கடந்த இரு வாரங்களுக்கு முன்னரே அது விழா பற்றிய கூடிய நிபந்தனைகளை முன்வைத்தது எனவும் அந்நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய போதிய அவகாசமில்லாமையால் விழாஅமைப்பினர் இந்நிகழ்வை நடத்தப்போவதில்லை என இன்று ஊடகங்கள் வாயிலாக அறிவித்துள்ளனர். வட அமெரிக்காவில் நடைபெறும் மிகப்பெரிய இலவச இசை நிகழ்ச்சி இதுவாகும். ஆகஸ்ட் 14-16 நாட்களில் ரொறோண்டோ Woodbine Park இல் இது நடைபெறுவதாக இருந்தது.

“ரொறோண்டோ மாந்கரசபையுடன் பல மாதங்களாக திட்டமிடல், ஆலோசனைகளில் ஈடுபட்டு வந்திருந்த போதிலும் கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை முன்னிட்டு நாங்கள் இவ்வருட நிகழ்வை நிறுத்துகிறோம்” என Music Africa அமைப்பு சமூக ஊடகங்கள் மூலம் அறிவித்திருக்கிறது.

90களின் ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் வருடா வருடம் சுமார் 40,000 மக்களுக்கும் அதிகமாக பங்குபற்றி வந்த போதிலும் இவ்வருட நிகழ்வில் 5,000 பேருக்கு மேல் சமூகமளிக்க முடியாது என ரொறோண்டோ மாநகரசபை திடீரென ஒரு நிபந்தனையை அறிவித்துவிட்ட காரணத்தால் இவ்வருட விழாவைத் தாம் நிறுத்திவிட்டதாக இவ்வமைப்பு மேலும் தெரிவிக்கிறது.

2012 முதல் Woodbine Park இல் நடைபெற்றுவரும் இந்நிகழ்விற்கு ஆபிரிக்க இன மக்கள் பல்வேறு நாடுகளிலிருந்தும் வந்து பங்குபற்றுவது வழக்கம். இவருட நிகழ்வை வேறிடத்துக்கு மாற்ற அமைப்பினர் விரும்பியிருந்தாலும் போதிய அவகாசம் கொடுக்கப்படாமையால் பாதுகாப்பு கருதி நிகழ்வை நிறுத்துவதாக Music Africa அறிவித்திருக்கிறது.

“எப்படி இருந்தாலும் ரொறோண்டோ மாநகரசபையுடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் கடினமான காரியம். விழா நிகழ்விற்கான அனுமதி விண்ணப்பம் பெப்ரவரி மாதத்தில் அனுப்பிவைக்கப்பட்டிருந்தாலும் ஜூன் மாதத்தில் தான் மாநகரசபையின் ‘நிபந்தனைகள்’ அமைப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டன. அது மட்டுமல்லாது “அனுமதி கிடைக்கும்வரை நிகழ்வு பற்றிய அறிவித்தல்களைச் செய்யக்கூடாது, ” ஒரு நாளில் மொத்தம் 17,000 பேருக்கு மேல் பங்குபற்ற அனுமதிக்கக்கூடாது” எனப் புதுப் புது நிபந்தனைகளை மாநகரசபை முன்வைத்தது. அனுமதியைப் பெறுவதற்காக முயற்சிகளை துரிதப்படுத்த முயன்றபோது “பொறுத்துக்கொள்ளுங்கள்” எனவே அதன் பதிலாக இருக்கும். இறுதி முயற்சியாக ஒரு சமூகச் சந்திப்பொந்றிற்காக அழைப்பை விடுத்தபோது மாந்கரசபையின் பதில் காணொளி மூலமாகவே அமைப்பின் ஆதரவாளர்களுக்கு வழங்கப்பட்டது. இவ்விழாவை ஒழுங்கு செய்வதில் இருக்கக்கூடிய திட்டமிடல், நிதிசேர்ப்பு, இசைக்கலைஞர்களின் அழைப்பு, வியாபாரிகள் இணைப்பு போன்ற சிரமமான காரியங்களுக்கு போதிய அவகாசத்தை நகரசபை வழங்கவில்லை” என Music Africa தனது விசனத்தைத் தெரிவித்துள்ளது.

இத்தனை சிரமங்களை எதிர்கொண்டாலும் 2027 இல் AFROFEST மீண்டும் நிகழ்த்தப்படும் என அமைப்பாளர் உறுதிபூண்டுள்ளனர்.

(Credit: blogTO)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *