Auto

ரொறோண்டோ: தெருக்குழிகளால் பழுதடையும் வாகன உரிமையாளருக்கு நட்டஈடு

ரொறோண்டோ தெருக்களில் உள்ள குழிகள் காரணமாக உங்கள் வாகனங்கள் பழுதாகியிருப்பின் அவ்வாகனங்களைச் செப்பனிடுவதற்கான செலவின் ஒரு பகுதியை நீங்கள் ரொறோண்டோ மாநகரசபையிடமிருந்து அறவிட்டுக்கொள்ள முடியும். சம்பவம் நடைபெற்றுப் 10 நாட்களுக்குள் இதற்கான விண்ணப்பங்களை ‘இணையவழி விண்ணப்பப் படிவம்’ மூலம் அனுப்பிவைத்தால் மட்டுமே இதற்கு நீங்கள் தகுதி பெறுவீர்கள்.

உங்கள் விண்ணப்பங்களைத் தொடர்ந்து நகரசபையின் காப்புறுதிப் பரீட்சகர்கள் வாகனம் பழுதடைந்தமைக்கு தெருக்குழிகள் தான் காரணமென்பதைத் தீர்மானித்த பின்பே இந்நட்ட ஈட்டை உங்களுக்கு வழங்குவார்கள். வாகனத்தைச் செப்பனிடுவதற்கான செலவை வாகனக் காப்புறுதி மூலம் முதலில் பெற்றுக்கொள்ள முடியும்.

இப்படியான சம்பவங்கள் உங்களுக்கு நேர்ந்து, ஏற்கெனவே நகரசபைக்கு விண்ணப்பித்திருந்து நகரசபையிடமிருந்து இதுவரை பதில் ஏதும் கிடைக்கவில்லையெனின் உங்கள் விண்ணப்பம் பற்றிய மதிப்பீட்டைக் கோரி மேலுமொரு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். பொதுவாக இவ்விண்ணப்பங்கள் மீது நகரசபை நடவடிக்கை எடுக்க 90 நாட்கள் எடுக்கிறது.

ரயர் முதல் வண்டியின் சீரான ஓட்டத்திற்கு உதவும் பலவித இயக்கசாதனங்கள் வரை இக்குழிகளினால் பாதிக்கப்படுவது வழக்கம். இவற்றைச் செப்பனிடுவதற்கு குறைந்தது $500 முதல் $2,000 வரை செலவு செய்யவேண்டி ஏற்படலாம்.

முதலாவது துரித செப்பனிடு திட்டத்தின் கீழ் ரொறோண்டோ மாநகரசபை இதுவரை 68,000 தெருக்குழிகளைச் செப்பனிட்டுள்ளது. இரண்டாவது 24-மணித்தியால துரித தெருக்குழி செப்பனிடும் திட்டம் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்டது.

தெருக்களில் செப்பனிடப்படாதிருக்கும் குழிகள் பற்றிய தகவல்களை ரொறோண்டோ வாசிகள் 311 என்ற இலக்கத்தை அழைத்தோ அல்லது நகரசபையின் இணையத்தளத்தில் பதிவிட்டோ நகரசபைக்குத் தெரிவிக்க முடியும். (Image Courtesy: CTV)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *