ரொறோண்டோ பதில் நகரபிதா மைக்கேல் தொம்சன் பதவி விலகலாம்?
பாலியல் வன்முறைக் குற்றம் காரணம்
ரொறோண்டோ மாநகர பதில் நகரபிதாவும் ஸ்காபரோ மத்தி தொகுதியின் கவுன்சிலருமான மைக்கேல் தொம்சன் நாளை தனது பதவியிலிருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஜூலை மாதம் முஸ்கோக்கா பகுதியில் நடைபெற்ற சம்பவமொன்றின்போது பாலியல் வன்முறைக்குக்குக் காரணமாக இருந்தார் என இரு குற்றச்சாட்டுகள் அவர்மீது காவல்துறையினால் பதியப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் நேற்று (வியாழன்) ஒன்ராறியோ காவல்துறையிடம் சரணடைந்துள்ளார் எனக் கூறப்படுகிறது.
தொம்சன் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமில்லாதவை எனவும் விரைவில் அவர் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டு தனது வாழ்வைத் தொடருவார் எனவும் அவரது சட்டத்தரணி கல்வின் பரி தெரிவித்துள்ளார். நவம்பர் 1 அன்று பிரேஸ்பிரிட்ஜ் நீதிமன்றத்தில் அவரது வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
ரொறோண்டோ மாநகரசபையின் 21 ஆவது வட்டாரம் என அழைக்கப்படும் ஸ்காபரோ மத்தி தொகுதியை மிக நீண்ட காலமாகப் பிரதிநிதித்துவப்படுத்தி வருபவர் தொம்சன். இங்கு நிறைய தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். இந்த வருட தமிழர் தெருவிழாவில் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார். எதிர்வரும் மாநகரசபைத் தேர்தலில் இத்தொகுதியில் அவர் மீண்டும் போட்டியிடுகிறார்.
பாலியல் குற்றங்களைத் தாம் இலகுவாக எடுத்துக்கொள்வதில்லை எனவும் இது தொடர்பாக தொம்சன் தனது துணை நகரபிதா பதவி மற்றும் பொருளாதார, சமூக அபிவிருத்திக் குழுக்களின் தலைவர் பதவி ஆகியவற்றை உடனடியாகத் துறப்பதற்கு தொம்சன் இணங்கியுள்ளார் எனவும் ரொறோண்டோ நகரபிதா ஜோன் ரோறி தெரிவித்துள்ளார்.