ரொறோண்டோ பெரும்பாகத்தில் தொடர்மாடிக் குடியிருப்புகளில் (Condominium) முதலீடு செய்தவர்கள் நட்டப்படுகிறார்கள்-அறிக்கை
சென்ற வருடம் முதல் தடவையாக ரொறோண்டோ பெரும்பாகத்தில் புதிதாகக் கட்டிய தொடர்மாடிக் குடியிருப்புக்களில் முதலீடு செய்தவர்களில் அரைவாசிக்கு மேலானோர் நட்டத்தை எதிர்கொண்டுள்ளனர் என கனடிய இம்பீரியல் பாங்க் ஒஃப் கொம்மேர்ஸ் (CIBC) அறிக்கையொன்று தெரிவிக்கிறது.
‘ஏர்பனேஷன்’ என்ற நிறுவனத்துடன் இணைந்து செய்யப்பட்ட இந்த ஆய்வின்படி இது ஆரம்பம் மட்டுமே எனவும் அடுத்துவரும் சில வருடங்களுக்கு இது தொடருமெனவும் தெரிகிறது. 2022 ஆம் ஆண்டு, வாடகைக்கு விடுவதற்கென அதிக விலையைக் கொடுத்து புதிய தொடர்மாடிக் குடியிருப்புகளை வாங்கியவர்களில் 48% த்துக்கு மேலானோர் நட்டத்தை எதிர்கொண்டுள்ளனர் என்கிறது இந்த அறிக்கை.
பெரும்பாலான முதலீட்டாளர்கள் தாம் வாங்கிய குடியிருப்புகளுக்கு செலுத்தும் அடமானம், பராமரிப்புக் கட்டணம், ஆதன வரி ஆகியவற்றைச் செலுத்துமளவுக்கு பெற்றுக்கொள்ளும் வாடகை போதாமலிருக்கிறது. இதன் காரணமாக முதலீடுகளுக்காக வீடுகளை வாங்குபவர்களின் எண்ணிக்கை இனிமேல் அருகிப் போகலாம் என ஏர்பனேஷன் எதிர்வுகூறுகிறது.
சிலர் வீட்டு விலைகள் மீண்டும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் நட்டப்பட்டாலும் வீடுகளை விற்காமல் தொடர்ந்தும் வைத்திருக்கப் பார்க்கிறார்கள். இதனால் புதிய தொடர்மாடிக் குடியிருப்புக் கட்டிடங்களை வாங்குவதற்கு அதிகம் பேர் முன்வராமையால் அவற்றின் விலைகளில் சரிவு ஏற்பட வாய்ப்புண்டு. இது ஏற்கெனவே முதலீடுசெய்தவர்களை மேலும் பாதிக்கக்கூடும்.
ஆனாலும் தொடர்மாடிக் குடியிருப்புக்களின் வாடகையும் அதிகரித்து வருவதால் முதலீட்டாளர்களுக்கு சிறிது உற்சாகம் ஏற்படவும் வாய்ப்புண்டு. 2021 இல் இருந்ததைவிட கடந்த மாதம் வாடகை 20% த்தால் அதிகரித்திருக்கிறது. வான்கூவரில் ஒரு படுக்கையறையுடனான குடியிருப்புக்கான வாடகை மாதம் $2,787. றிஜைனாவில் இது $1091.00. கனடாவின் சராசரி வாடகை (1 படுக்கையறை) $1,811 என்கிறது இந்த ஆய்வு.