ரொறோண்டோ மாநகரசபை முதல்வர் தேர்தல்: ஒரு பார்வை
ரொறோண்டோ மாநகரசபை முதல்வர் தேர்தல் ஜூன் 26 அன்று நடக்கவிருக்கிறது. இத் தேர்தலில் 102 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். பிரபல முன்னாள் முதல்வர் ஜோன் ரோறியின் திடீர் பதவி விலகலைத் தொடர்ந்து இத் தேர்தல் நடைபெறுகிறது. கனடிய தேர்தல்களில் பொதுவாக தமிழரது ஈடுபாடு அதிகம் என்பதுடன் மத்திய, மாநில, நகராட்சி, கல்விச்சபைத் தேர்தல்களில் பல தமிழர்கள் போட்டியிட்டுத் தெரிவாகியுமுள்ளனர். ஆனாலும் முதல்வர் தேர்தலில் எவரும் போட்டியிடவில்லை. இருப்பினும் பல தமிழர்கள் பல்வேறு வேட்பாளர்களினதும் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து குழப்பமடையலாம். இதற்காக ஒரு சிறு விலக்கத்துடன் இக்கட்டுரை:
102 வேட்பாளர்கள் பற்றியும் எழுதுவதற்கு இங்கு இடம் போதாது. ஆனாலும் முன்னணியிலிருக்கும் 6 வேட்பாளர்கள் பற்றி இங்கு சிறிய அறிமுகம் தரப்படுகிறது.
ஒலிவியா ச்சவ் (Olivia Chow)

பல்வேறுபட்ட கருத்துக் கணிப்புகளும் தமிழர்கள் மிகவும் நேசித்த மறைந்த முன்னாள் என்.டி.பி. கட்சித் தலைவர் ஜாக் லெய்ட்டனின் துணைவியாரான ஒலிவியா ச்சவ் என்பவரையே முன்னணியிலிருக்கும் வேட்பாளராகக் காட்டுகின்றன. இருப்பினும் 2014 நகராட்சி முதல்வர் தேர்தலில் முன்னணியில் நின்ற இவரை ஜோன் ரோறி, டக் ஃபோர்ட் போன்றவ்ர்கள் பின்னுக்குத் தள்ளிய வரலாறும் உண்டு என்பதால் இப்போதைக்கு எதையும் உறுதியாகக் கூறமுடியாது.
ரொறோண்டோவில் தற்போது நிகழும் குடியிருப்பு பற்றாக்குறையை நீக்குவேன் என்பது இவரது முக்கிய பிரச்சாரக் கொள்கையாகவுள்ளது. இருப்பினும் இவரது தீவிர இடதுசார்பு கொள்கைகள் பரவலான வாக்காளர் மத்தியில் அதிகம் வரவேற்புப் பெறுவதாகத் தெரியவில்லை. மறைந்த ஜாக் லெய்ட்டனின் அனுதாப அலை படிப்படியாகத் தூர்ந்துபோன நிலையில் பெரும்சமூக மக்களின் ஆதரவு இவருக்குக் கிடைக்குமா என்பது சந்தேகமே. ஆனாலும் 50% த்துக்கு மேலான குடிவரவாளர் சமூகங்களில் அவருக்கு இப்போதும் ஆதரவு இருக்கிறது. என்ன இருந்தாலும் கொள்கை வகுப்பாளர்கள் இன்னும் பெரும்சமூகத்தினராக இருக்கும்வரை ஒலிவியா போன்றோரது கொள்கைகளை நிறைவேற்ற கவுன்சில் உறுப்பினர்களது ஆதரவு கிடைப்பதில் சிக்கல் இருக்கும் எனவே கருதவேண்டும். கடந்த வாரம் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகள் அவரது வெற்றி நிலைப்பாட்டை இப்படிக் கூறுகின்றன:
கருத்துக் கணிப்புகள்: ஃபோறம்-36%; மெயின் ஸ்ட்றீட்- 30%; லியாஸ்யோன்- 31%
மார்க் ஸோண்டர்ஸ் (Mark Saunders)

முன்னாள் ரொறோண்டோ பொலிஸ் தலைவராக இருந்தவர். மக்கள் பாதுகாப்பை முதன்மைக் கொள்கையாக வைத்து பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். அவரது முன்னாட் தொழில் பாதுகாப்பு தொடர்பாக இருந்தது என்பதனால் அது தொடர்பாகத் தனக்கு ஏனைய வேட்பாளர்களை விட அதிக அனுபவமிருக்கிறது என்பது அவரது வாதமாக இருக்கிறது. ஆனாலும் அவர் பொலிஸ் தலைமைக் காலத்தில் பல கறுப்பின மக்கள் தொடர்பான , carding எனப்படும் பொலிசார் கறுப்பின மக்களை நிறுத்தி விசாரிக்கும் விடயத்தில் அதை நிறுத்தும்படி மனித உரிமை செயற்பாட்டாளர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு எதிராகச் செயற்பட்டவர். கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினரான இவர் தனது சொந்த இன மக்களாலேயே வெறுக்கப்பட்டவர். ரொறோண்டோ பொலிஸ் திணைக்களம் தீவிர நிறவெறிகொண்ட ஒன்றெனப் பெயர் பெற்றது. அதைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் அவர் வெளியேறியவர். அதனால் இவரது அனுபவம் என்பது வெற்றிகளைக் கொண்ட ஒன்றாக இருக்க முடியாது.
கருத்துக் கணிப்புகள் இவரது நிலைப்பாட்டைப் பின்வருமாறு கூறுகின்றன:
கருத்துக் கணிப்புகள்: ஃபோறம்-18%; மெயின் ஸ்ட்றீட்- 12%; லியாஸ்யோன்- 16%
ஜோஷ் மற்லோ (Josh Matlow)

நீண்டகால நகராட்சி உறுப்பினராக இருக்கும் ஜொஷ் மற்லோ ஒரு குறிப்பிட்ட கொள்கையை மட்டும் முன்வைக்காமல் பலதும் பத்துமான கொள்கைகளைத் தனது பிரச்சாரத்தில் முழங்கி வருபவர். ஒன்ராறியோ லிபரல் கட்சி உறுப்பினர். நிறையப் பணபலமும் ஆதரவும் இருந்தாலும் குடிவரவாளர் சமூகங்களில் இவருக்கு ஆதரவு அதிகம் இல்லை எனக் கூறப்படுகிறது.
கருத்துக் கணிப்புகள்: ஃபோறம்-10%; மெயின் ஸ்ட்றீட்- 16%; லியாஸ்யோன்- 15%
அனா பைலோ (Ana Bailao)

ரொறோண்டோ டவென்போர்ட் வட்டார உறுப்பினராக 2018 இல் 82% வாக்குகளுடன் வெற்றிபெற்ற இவர் ஜோன் ரோறி முதல்வராக இருந்தபோது உதவி முதல்வராகப் பணியாற்றியவர். ரோறியின் குடியிருப்பு விடயங்களை முன்னெடுத்த இவர் பின்னர் பதவியைத் துறந்துவிட்டு தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றினார். அங்கும் இவர் மலிவான வீடுகளை நிர்மாணிப்பது தொடர்பான துறைக்குத் தலைவராக இருந்தார். ஜோன் ரொறி உட்படப் பல நகராட்சி உறுப்பினர்களும், தொழிற்சங்கங்களும் இவருக்கு ஆதரவாக உள்ளனர். ஜோன் ரோறியின் பணிகளைத் தொடரக்கூடிய வல்லமை இவருக்குத்தான் உண்டு எனப் பரவலாகப் பேசப்படுகிறது. கார்டினர் மற்றும் டொன் வலி கடுகதித் தெருக்களின் பராமரிப்பு விடயங்களை மாநில அரசு பொறுப்பேற்கவேண்டுமென அழுத்தம் கொடுத்து வருகிறார். இவரது பிரச்சாரக் குழுவில் பல தமிழர்கள் பனிபுரிகிறார்கள்.
கருத்துக் கனிப்புகள்: ஃபோறம்: 7%; மெயின் ஸ்ட்றீட்: 15%; லியாஸ்யோன்: 7%
பிராட் பிராட்ஃபோர்ட் (Brad Bradford)

தற்போது ரொறோண்டோ நகரத்தின் 19 ஆவது வட்டார உறுப்பினராக இருக்கும் பிராட் பிராட்ஃபோர்ட் குடியிருப்பு பற்றாக்குறை, போக்குவரத்து, சூழல் போன்ற விடயங்களில் முன்னேற்றம் வேண்டுமெனப் பிரசாரம் செய்பவர். இவரது தாயார் வலெறீ பிராட்ஃபோர்ட் கிச்னர்-வாட்டர்லூ தொகுதியின் முன்னாள் பாராலுமன்ற உறுப்பினராவார்.
கருத்துக் கணிப்புகள்: ஃபோறம்-6%; மெயின் ஸ்ட்றீட்- 12%; லியாஸ்யோன்- 6%
மிட்சீ ஹண்டர் (Mitzie Hunter)

ஸ்காபரோ-கில்ட்வூட் ஒன்ராறியோ மாநில உறிப்பினராக இருந்து பின்னர் பதவியத் துறந்து நகர முதல்வர் பதவிக்குப் போட்டியிடும் இவர் குடியிருப்பு, போக்குவரத்து சம்பந்தமான விடயங்களைத் தனது பிரச்சார விஞ்ஞாபனமாகக் கொண்டிருக்கிறார். ஸ்காபரோ மக்கள் மத்தியில் பிரபலமான இவர் பல்லின மக்களிடையேயும் சரளமாகப் பழகுபவர். ஆனாலும் ரொறோண்டோவின் இதர வட்டாரங்களில் இவரது அறிமுகம் சற்றுக் குறைவாகவே இருக்கிறது.
கருத்துக் கணிப்புகள்: ஃபோறம்-10%; மெயின் ஸ்ட்றீட்- 9%; லியாஸ்யோன்- 12%