veedu.com

நாமார்க்கும் குடியல்லோம்

Money

ரொறோண்டோ மாநகரசபை வரி, சேவைக்கட்டண அதிகரிப்பு

ஆதன மாற்ற வரி, புதிய மாநகர ஜி.எஸ்.ரி. பற்றி ஆலோசனை

கோவிட் தொற்றுக்குப் பின்னான ரொறோண்டோ மாந்கரசபையின் செலவீன அதிகரிப்பின் காரணமாக அத்ன் திறைசேரியில் $1.5 பில்லியன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதெனவும் இதைச் சமாளிக்க எதிர்வரும் புத்தாண்டில் பல வரி அதிகரிப்புகளையும் சேவைக் கட்டண அதிகரிப்புக்களையும் ரொறோண்டோ வாசிகள் எதிர்கொள்ளவேண்டி ஏர்படலாமெனவும் ரொறோண்டோ மாநகர முதல்வர் எச்சரித்திருக்கிறார்.

சென்ற மாதம் பதவியேற்ற முதல்வர் ஒலிவியா ச்சவ்வின் பணிப்பிற்கிணங்கி நகர முகாமையாளர் செய்த கணிப்பீடுகளின்படி நகரத்தின் அடுத்த 10 வருடங்களுக்கான நடைமுறைச் செலவீனம் (0perating costs) மற்றும் முதலீட்டுச் செலவீனம் (capital costs) மொத்தம் $46.5 பில்லியன் எனவும் நகரசபையின் வருடாந்த வருமானத்துடன் ஒப்பிடும்போது இதில் $1.5 பில்லியன் பற்றாக்குறை ஏற்படுகிறதெனவும் இதைச் சமாளிக்க பல்வேறு திட்டங்களை நகர முகாமையாளர் மாந்கரசபைக்குப் பரிந்துரைத்திருக்கிறார் எனவும் அறிய முடிகிறது.

நகர முகாமையாளர் பரிந்துரைத்த திட்டங்களின்படி வீடு மற்றும் ஆதனங்களை வாங்குபவர்கள் நகரத்துக்குச் செலுத்தும் ஆதன மாற்றுவரி (Municipal Land Transfer Tax (MLTT)) மற்றும் வாகனத் தரிப்புக்கான கட்டணம் (Parking Fee) ஆகியவற்றில் உயர்ச்சியை எதிர்பார்க்கவேண்டி வரலாமெனக் கூறப்படுகிறது. ஆதன மாற்று வரி அதிகரிப்பு $3 மில்லியன்களுக்கும் அதிகமான பெறுமதியுள்ள சொத்துக்களை வாங்குபவர்களையே பாதிக்கும். சராசரி வீடுகளின் விலை $2 மில்லியன்களுக்கும் உள்ளாக இருப்பதால் எம்மவர்களுக்கு பொதுவாக இது இடைஞ்சலைத் தராது என எதிர்பார்க்கலாம். ஜனவரி 2024 இற்குப் பின்னர் கைமாறும் சொத்துக்களுக்கே இப் புதியவரி அறவிடப்படும். புதிய வரிக் கட்டணங்கள் பின்வருமாறு:

  1. $3 மில்லியன் – $4 மில்லியன் சொத்துக்களை வாங்குபவர்கள் 3.5%
  2. $4 மில்லியன் – $5 மில்லியன் சொத்துக்களை வாங்குபவர்கள் 4.5%
  3. $5 மில்லியன் – $10 மில்லியன் சொத்துக்களை வாங்குபவர்கள் 5.5%
  4. $10 மில்லியன் – $20 மில்லியன் சொத்துக்களை வாங்குபவர்கள் 6.5%
  5. $20 மில்லியநுக்கு மேல் 7.5%

வெற்றுடமை வரி (Vacant Home Tax (VHT))

ரொறோண்டோவில் வீட்டுரிமையாளர்கள் குடியிருக்காமல் வெறுமையாக வைத்திருக்கும் வீடுகளுக்கு அவற்றின் பெறுமதியின் 1% வரியாக அறவிடப்படுகிறது. இந்த் சந்தைப் பெறுமதி (market value) அல்ல மாறாக நகரசபையினால் மதிக்கப்படும் (assesed value) பெறுமதியாகும். வீட்டுரிமையாளர்களோ அல்லது அவர்களது பிரதிநிகளோ வாழாமலும் 6 மாதங்களுக்கு மேல் வாடகைக்கு விடப்படாமலும் இருக்கும் வீடுகளை வெற்றுடமை வீடுகள் என நகரசபை மதிப்பிடுகிறது. நகரசபையின் புதிய திட்டங்களின்படி ஜனவரி 2024 முதல் இவ்வரி 1% த்திலிருந்து 3% மாக அதிகரிக்கப்படவுள்ளது. வாகனத் தரிப்பு கட்டண உயர்வு

தற்போது ரொறோண்டோ பொது வீதியோரப் தரிப்பிற்கு மணித்தியால உச்சக் கட்டணமாக $5.00 அறவிடப்படுகிறது. இந்த உச்ச வரம்பு இனிமேல் அகற்றபப்ட்டு புதிய கட்டண விதிகள் அறிவிக்கப்படவுள்ளன.

புதிய நகரசபை GST

தற்போது பொருட்களை வாங்கும்போது பாவனையாளர் ஜி.எஸ்.ரி செலுத்துகிறார்கள். ஒன்ராறியோவில் இது HST என்ற பெயரில் மாகாணம் + மத்தி என்று இரண்டு அரசுகளுக்குமாக மொத்தம் 13% அறவிடப்படுகிறது. இதில் 8% மாகாணத்திற்கும் 5% மத்திக்கும் போகிறது. புதிய நகரசபைத் திட்டத்தின்படி இனி நகரசபையும் தனக்கான ஒரு ஜி.எஸ்.ரி. வரியை அறிமுகப்படுத்தத் திட்டமிடுகின்றது. இதற்கான விண்ணப்பத்தை அது மாகாண அரசுக்கு அனுப்பியிருக்கிறது.

மத்திய, மாகாண அரசுகளிடமிருந்து தம்து வரவு செலவுத் திட்டத்தின் 40% மான பண உதவி கிடைக்காவிட்டால் நகர முகாமையாளர் பரிந்துரைத்த மேற்படி வரி அதிகரிப்புகளுடன் மேலதிகமான சேவைக்கட்டண அதிகரிப்புகளையும் செய்யவேண்டி ஏற்படும் என மாநகர முதல்வர் ஒலிவியா ச்சவ் தெரிவிதுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *