ஒரு வருடத்துக்க்கு முதல் ஆர்ம்பித்த ரொறோண்டோ பெரும்பாகத்தின் தொடர்மாடிக் குடியிருப்புக்களின் வாடகைச் சரிவு தளர்வதாக இல்லை. இது இப் பிராந்தியத்தின் சராசரி வீட்டு வாடகையைக் குறைத்துள்ளது.

கொறோணா பெருந்தொற்றுக் காரணமாகப் பல பெருநகர வாசிகள் தமது தொடர்மாடிக் குடியிருப்புக்களை விற்றுவிட்டு புறநகர் தனி வீடுகளை நோக்கி நகர்வது தற்போது வழக்கமாகிவிட்டது. இதனால் ஏற்பட்ட விலைச்சரிவினால் பல குடியிருப்புக்கள் சந்தையில் தூங்கிக்கொண்டிருக்கின்றன. அத்துடன் AirBnB போன்ற தற்காலிக, குறுங்கால வாடகை நிறுவனங்கள் மீதான சட்ட இறுக்கம், சுற்றுலாவாசிகளின் வருகை நிறுத்தம், உள்ளக நடமாட்ட முடக்கம் எனப் பல காரணங்கள் இவ் வாடகைச் சரிவிற்குக் காரணமென நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

விரைவில் அறிவிக்கப்படவிருக்கும் ரொறோண்டோ நகரசபையின் ‘வெறுமனை வீடுகள் மீதான வரி’ மேலும் பல வீடுகளை வாடகைக் குடியிருப்புகளாக மாற்றுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், வீட்டிலிருந்து பணி புரிதல் ஒரு புதிய, நிரந்தர வாழ்வியல் மாற்றமாக ஏற்றுக்கொள்ளப்படும் நிலையில் பெருநகர் வாசிகளின் புறநகர்களை நோக்கிய ஓட்டம் தொடருமெனவே எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் பல அலுவலகக் கட்டடங்கள் (office towers), சில்லறை வியாபாரக் கட்டிடங்கள் (retail spaces) ஆகியனவும் வெறுமையாகிக்கொண்டு வருகின்றன.

Bullpen Research & Consulting மற்றும் TorontoRentals.com ஆகிய நிறுவனங்களின் ஆய்வுகளின்படி நவம்பர் 2020 இல் பலவகையான குடியிருப்புக்களின் வாடகையும் 20% த்தால் வீழ்ச்சியடைந்திருக்கிறது. சராசரி வாடகை, ரொறோண்டோ பெருநகரத்தில் $2,066, எற்றோபிக்கோ $2,006, கிழக்கு யோர்க் $1,861, ஸ்காபரோ $1,860 என அவ்வறிக்கைகள் கூறுகின்றன.

நவம்பர் 2019 இலிருந்து, தொடர்மாடிக் குடியிருப்புக்களில், ஒரு அறை அப்பர்ட்மெண்டின் வாடகை 17.7% த்தாலும், தனி வீடுகளின் வாடகை 8% த்தாலும் சரிவடைந்துள்ளன.

இந் நிறுவனங்களின் அறிக்கைகளின்படி 2021 நடுப்பகுதிவரை இச் சரிவு தொடர்மெனவும் அதைத் தொடர்ந்து வாடகை விலைகளில் சாதுவான முன்னேற்றம் ஏற்படுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


  • Post category:Real Estate
  • Post published:December 24, 2020