veedu.com

நாமார்க்கும் குடியல்லோம்

Real Estate Photography
Real Estate

ரொறோண்டோ வீட்டு விலையில் பாரிய சரிவு ஏற்படலாம் – CMHC எச்சரிக்கை!


சம்பளத்தை மீறி வீட்டு விலைகள் மற்றும் பெறுமதி அதிகரிப்பு நாடு முழுவதையுமே மிகவும் ஆபத்தான நிலைக்கு இட்டுச் செல்கிறது எனவும், இதனால் பாரிய விளைவுகளுடன் கூடிய மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது எனவும் கனடா அடமான மற்றும் வீட்டுக் கூட்டுத்தானம் (Canada Mortgage and Housing Corporation (CMHC)) எச்சரித்துள்ளது. இவ் விடயத்தில் ரொறோண்டோ மற்றும் கிழக்குக் கனடா போன்ற பிரதேசங்கள் நாடு முழுவதையும் ஸ்திரமற்ற நிலைமைக்கு இழுத்துச் செல்லும் அபாயம் தோன்றியுள்ளது என்கிறது CMHC.

Image Credit: Veedurealty Inc.

ரொறோண்டோ, ஹமில்ட்டன், ஒட்டாவா, ஹலிஃபாக்ஸ், மொண்க்டன் ஆகிய பிரதேசங்கள் வழமையாக வீட்டு விலை அதிகரிப்பில் முன்னணியில் இருந்து வந்தவையாயினும், தற்போது மொன்றியலும் இவற்றுடன் இணைந்துள்ளது. அதே வேளை வான்கூவர் வீட்டுச் சந்தை ஏற்கெனவே ஆட்டம் காணத் தொடங்கியிருக்கிறது என்கிறது அது.

“ரொறோண்டோ மற்றும் கிழக்கு கனடிய பிரதேசங்களில் பெருந்தொற்றுக் காலத்தில் காணப்பட்ட வலுவான வீட்டுத் தேவை காரணமாக விலைகளில் ஏற்றம் காணப்பட்டது எனவும், இதன் காரணமாக வீடு வாங்குபவர்கள் தேவையில்லாமல் அதிகரித்த தீவிரத்துடன் சந்தையில் குதித்துள்ளமை தெரிகிறது” என கூட்டுத்தாபனத்தின் முதன்மை பொருளாதார நிபுணர் பொப் டூகன் தெரிவித்துள்ளார்.

கூட்டுத்தாபனத்தின் புள்ளிவிபரப்படி, 2021 இல், வரலாறு காணாத அளவுக்கு வீடுகள் கைமாறியுள்ளன. இதன் காரணமாக விற்காமலுக்கோ அல்லது வாடகைக்கு விடப்படாமலோ இருக்கும் வீடுகளின் அல்லது தொடர்மாடிக் குடியிருப்புகளின் எண்ணிக்கை மிகவும் அரிதாகவே காணப்பட்டது. ரொறோண்டொ வீட்டுச் சந்தையில் தளர்ச்சி தெரிந்தாலும், வீடுகள் விற்பனைக்கு வருவதைவிட வாங்குவதற்கென முன்வருபவர்களின் எண்ணிக்கை முன்னெப்போதையும்விட அதிகமாகக் காணப்படுகிறது என அறியப்படுகிறது.

ரொறோண்டோவின் புறநகர்ப் பகுதிகளே அதிகரிக்கும் வீட்டுச்சந்தையால் பாதிக்கப்பட்டு வருகின்றன. 100 வீடுகள் சந்தைக்கு வந்தால் அதில் 64 வீடுகள் விற்கப்பட்டு விடுகின்றன. டர்ஹம், பீல் பிரதேசங்களில் இதன் எண்ணிக்கை முறையே 86, 81 ஆகும். இப்பிரதேசத்தில் பெரும்பாலும் அலுவலகங்களுக்குச் செல்லாமல் வீட்டிலிருந்து வேலை செய்பவர்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருவதே இந்நிலைமைக்குக் காரணம்.

ரொறோண்டோவில் வீடுகளை வாங்க முடியாதவர்கள் பலர் இப்போது ஹலிஃபாக்ஸ், மொண்க்டன் நகர்களுக்குப் படையெடுக்கிறார்கள். இதனால் அப்பிரதேசங்களில் வீட்டு விலைகள் அதிகரித்து வருகின்றது. இப்படி மாகாணங்களுக்கிடையேயான புலப்பெயர்வு ரொறோண்டோ போன்ற உச்சவிலை நகரங்களில் வீட்டுச் சந்தையில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்த வாய்ப்புண்டு என CMHC தெரிவிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *