veedu.com

நாமார்க்கும் குடியல்லோம்

ரொறோண்டோ | வெறுமையான குடியிருப்புக்களின் மீதான வரி வீட்டு விலையைக் குறைக்கும் – ரொறோண்டோ பிராந்திய ஆதன சபை

ரொறோண்டோவில் வெறுமையாகவிருக்கும் குடியிருப்புக்களின்மீது வரி விதிக்கும் நகரசபையின் திட்டம் கடந்த வருடம் சபையினால் அங்கீகரிக்கப்பட்டது. விரைவில் நடைமுறைக்கு வரவுள்ள இத் திட்டம் ஏற்கெனவே அதன் தாக்கத்தை ஆரம்பித்துவிட்டது என ரொறோண்டோ பிராந்திய ஆதன சபையால் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்று கூறுகிறது.

ரொறோண்டோவில் ஏற்கெனவே வீட்டு வாடகை சரிவடைந்து வரும் நிலையில் வாடகை முதலீட்டுக்கென கொள்வனவு செய்யப்பட்ட பல குடியிருப்புக்கள் வெறுமையாக இருக்கின்றன. நகர மத்தியில் பல தொடர்மாடிக் குடியிருப்புகள் சுற்றுலாவாசிகளுக்கும் கேளிக்கைத் தேவைகளுக்காகவும் குறுங்கால வாடகைக்கு விடப்படுவதன்மூலம் அவற்றின் சொந்தக்காரர்கள் இலாபமீட்டி வந்தனர். சில சொந்தக்காரர்கள் தமது சொத்துக்களை AirBnB போன்ற நிறுவனங்களிடம் தமது குடியிருப்புக்களை வாடகைக்கு விட்டிருந்தனர்.

கோவிட் பெருந்தொற்றுக் காரணமாக நகர மத்தியில் சுற்றுலாவாசிகளின் வரவு நின்றுபோனதுடன், மதுபான நிலையங்கள். கேளிக்கை விடுதிகள் ஆகியன மூடப்பட்டமையாலும் குறுங்கால வாடகைத் தேவைகள் அருகிப் போய்விட்டன. இதனால் பல குடியிருப்புகள் வெறுமையாக இருக்கின்றன. புதிதாக வரும் சட்டம் இக் குடியிருப்புக்களின் சொந்தக்காரர் மீது மேலும் பணச் சுமையை அதிகரிக்கவிருக்கிறது.

கடந்த வருட இறுதியில் ரொறோண்டோ பிராந்திய ஆதன சபை மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் 40% மான குடியிருப்புக்களைன் சொந்தக்காரர்கள் தமது சொத்துக்களை விற்றுவிடப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.

தொறோண்டோ பிராந்திய ஆதன சபை ஒன்ராறியோ மாகாணத்தின் ஆதன விற்பனையாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மிகப் பெரிய சபையாகும். நொறோண்டோ பெரும்பாகத்தில் (அயல் நகரங்களை உள்ளிட்ட) பிராந்தியங்களில் விற்கப்படும் அல்லது வாடகைக்கு விடப்படும் வீடுகள் பர்றிய தரவுகளை இச் சபை சேகரித்து வருகிறது.

இச் சபையின் 2021 இற்கான வீட்டுச் சந்தை நிலவரத்தின்படி இந்த வருடம், மூன்றில் இரண்டு பங்கு தொடர்மாடிக் குடியிருப்பின் சொந்தக்காரர்கள் தமது குடியிருப்புக்களை விற்றுவிடுவார்கள் என அது எதிர்வு கூறியிருக்கிறது. வெறுமையான குடியிருப்பு வரி மற்றும் Air BnB மீதான கட்டுப்பாடுகள் காரணமாக குடியிருப்பாளர்கள் இம்முடிவுக்குத் தள்ளப்படுகிறார்கள் என இச் சபையின் அறிக்கை தெரிவிக்கிறது.

28% மான குடியிருப்புக்களின் சொந்தக்காரர், வெறுமை வரியைத் தவிர்ப்பதற்காக நீண்டகால வாடகைக்குத் தமது குடியிருப்புக்களை விடப்போவதாகத் தெரிவித்துள்ளனர். இதனால் குடியிருப்புக்களின் வாடகைக் கட்டணம் மேலும் சரிவடைய வாய்ப்புண்டு.

கனடாவில் வெளிநாட்டாரின் சொத்து முதலீடு

ரொறோண்டோ, வான்கூவர் ஆகிய நகரங்களில் வீட்டு விலைகள் மிக மோசமாக அதிகரித்தமைக்கு வெளிநாட்டுக்காரர் கேட்கப்பட்ட விலைகளிலும் மேலான விலைகளில் குடியிருப்புக்களை வாங்கியமையே காரணம் என முன்னரே அறியப்பட்டிருந்தது. பல வெளிநாட்டுக்காரர் தமது பணத்தைக் கனடா போன்ற பாதுகாப்பான நாடுகளில் பதுக்கிப் பாதுகாப்பதற்காகவும், அதே வேளை அதிக விலைக்கு விற்பதன் மூலம் இலாபம் சம்பாதிக்கவுமென கனடிய வீட்டுச் சந்தையை நோக்கிப் படையெடுத்தார்கள். நாட்டிற்குள் பணம் வருகிறதென மத்திய அரசும், ஆதன வரி, விற்பனை வரி, சொத்து மாற்ற வரி எனப் பலவகை வருமானங்களுக்காக மாகாண, நகர அரசுகளும் இந்நடவடிக்கையைப் பெரிதும் கண்டுகொள்ளவில்லை. வங்கிகளும் இலகுவாகத் தம்பங்கிற்கு இலாபமீட்டிக்கொண்டதால் ஒருவரும் இதன் நீண்டகால விளைவுகளைப் பற்றி அக்கறையெடுக்கவில்லை. இதனால் கடந்த 10 வருடங்களில் கனடாவின் வீட்டு விலைகள் 75% த்தால் அதிகரித்திருக்கிறது. வருடமொன்றுக்கு வெளிநாட்டார் கனடாவில் முதலிடும் பணத்தின் தொகை $ 38 பில்லியன்கள் (Financial Post) எனப்படுகிறது.

வெளிநாட்டுக் கொள்வனவினால் வந்த நேரடிப் பாதிப்பினால் தான் இவ்விரு நகரங்களிலும், தற்போது இதர நகரங்களிலும் வீட்டு விலைகள் மிக மோசமாக அதிகரித்துள்ளன. இதனால் கனடிய இளைய தலைமுறை வீடுகளை வாங்கமுடியாமல் போக வாடகை வீடுகளை நோக்கி அவர்கள் படையெடுத்தார்கள். அரசியல்வாதிகளுக்கும் அவர்கள் அழுத்தங்களைக் கொடுத்தார்கள்.

இவ்வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவித்து வந்த, பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஆட்சியிலிருந்த லிபரல் அரசை என்.டி.பி. கட்சி வீழ்த்தி ஆட்சிக்கு வந்ததும் அது முதல் செய்தது வெறுமையான குடியிருப்புக்களுக்கு வரி விதித்தமை. அதன் மூலம் வீட்டு விலைகள் படிப்படியாகச் சரியத் தொடங்கின.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் இந்த உதாரணத்தைப் பின்பற்ற ரொறோண்டோவிற்கு இரண்டு வருடங்களுக்கு மேல் எடுத்தது. அரசியல்வாதிகள், கட்டுமானத்துறையைச் சேர்ந்தவர்கள் எனப் பல எதிர்ப்புக்களின் மத்தியிலும் ரொறோண்டோ மாநகரசபையின் இடதுசாரி கவுன்சிலர்களினதும் நகரபிதா ஜோன் ரோறியின் சமூக நல மனப்பான்மையாலும் வெறுமை வரிச் சட்டம் சென்ற வருட இறுதியில் நிறைவேற்றப்பட்டது.

இந்த 1% வெறுமை வரிச் சட்டத்தை விட (VHT), இலாபமீட்டுவதற்கான கொள்வனவு மீதான வரியையும் (Non-Resident Speculation Tax) (15%), ஒன்ராறியோ மாகாண அரசு விதித்திருக்கிறது. வெறுமை வரிச் சட்டத்தின் மூலம் ரொறோண்டோ நகரசபைக்கு வருடமொன்றுக்கு 55 மில்லியன் டாலர் வருமானம் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *