ரொறோண்டோ: வெற்றுடமையென அறிவிக்காமையால் வீட்டுரிமையாளருக்கு நகராட்சி $17,000 தண்டம்!
தனது வீடு வெறுமனே இருக்கிறது என அறிவிக்கத் தவறியமைக்காக வீட்டுரிமையாளர் ஒருவருக்கு ரொறோண்டோ நகராட்சி $17,000 தண்டம் விதித்திருக்கிறது.
கடந்த பெப்ரவரி மாத இறுதிக்குள் மக்கள் வசிக்காமல் இருக்கும் வீட்டுரிமையாளர்கள் தமது வெற்றுடமைகள் பற்றிய தகவல்களை நகராட்சிக்கு அறிவிக்கவேண்டுமெனவும் தவறும் பட்சத்தில் வெற்றுடமை வரி தண்டமாக அவர்களிடமிருந்து அறவிடப்படுமெனவும் ரொறோண்டோ மாநகரசபை அறிவித்திருந்தது. பெரும்பாலானவர்கள் நகராட்சியின் இவ்வறிவிப்பை ஏற்றுத் தமது அதற்குரிய பத்திரங்களை நிரப்பி அனுப்பியிருந்தார்கள். இருப்பினும் சிலர் இவ்வுத்தரவை உதாசீனம் செய்திருந்தார்கள். இப்படியான, ஏறத்தாழ 150,000 ரொறோண்டோ வீட்டுடமையாளர்கள் நகராட்சியின் தண்டத்துக்கு உள்ளாக்கப்படலாமென தரவுகள் தெரிவிக்கின்றன.
ரொறோண்டோ வாசியான கென்னெத் மார்ட்டின் இப்படியானவர்களில் ஒருவர். இவர் தனது வீடு வெறுமையாக இருக்கிறது என அறிவிக்காமையால் $17,530 நகராட்சித் தண்டத்துக்கு உள்ளாகியிருக்கிறார். இது அவரது வருடாந்த ஆதன வரியின் இரண்டு மடங்கு. இவ்வறிவிப்பு வந்த வேளை தான் விடுமுறையில் வெளியே சென்றிருந்ததால் பத்திரத்தை அனுப்பத் தவறியிருந்ததாக அவர் குறிப்பிடுகிறார்.
ரொறோண்டோ மாநகரசபை 811,825 வெற்றுடமை அறிவிப்புப் பத்திரங்களை வீட்டுரிமையாளர்களுக்கு அனுப்பியிருந்தது. இதில் 96% முறைப்படி நிரப்பி வீட்டுரிமையாளர்களால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது எனவும் மீதி 4% மானவர்களே (35,000) இத்தண்டத்துக்கு உடபடுத்தப்படுவர் எனவும் நகராட்சி அறிவித்துள்ளது. இத்தண்டம் நகராட்சியால் மதிக்கப்படும் வீட்டின் பெறுமதியின் 10% மாக இருக்கும்.
ரொறோண்டோவில் கடந்த சில வருடங்களாக ஏற்பட்டிருக்கும் குடியிருப்புத் தட்டுப்பாடு காரணமாகப் பல வறிய நகர்வாசிகள் தெருக்களைத் தஞ்சமடைகிறார்கள். இத்தட்டுப்பாட்டுக்குக்க் காரணம் பல முதலீட்டாளர்கள் வீடுகளை வாங்கி வெறுமனே வைத்திருந்து பின்னர் அதிக விலைக்கு விற்பது என்பது நகராட்சிக்குத் தெரியவந்தது. இதே போன்று வான்கூவர் நகரத்திலும் குடியிருப்புத் தட்டுப்பாடு ஏற்பட்டபோது அந்நகரமும் வெற்றுடமை வரியை அறிவித்தது. இதைத் தொடர்ந்து அந்நகரில் வீடுகளின் விலை 15% த்தால் சரிவடைந்திருந்தது. இதைப் பின்பற்றி ரொறோண்டோ நகரமும் சென்ற வருடம் வெற்றுடமை வரியை அறிவித்திருந்தது மட்டுமல்லாது தமது குடியிருப்புகள் பற்றி அறிவிக்க நகர்வாசிகளுக்கு மூன்று வாரகால அவகாசமும் அளித்திருந்தது. இந்த அவகாசம் இந்த வருடம் பெப்ரவரி மாதம் முடிவடைந்திருந்தது.
இவெற்றுடமை வரியினால் ரொறோண்டோ நகராட்சி இவ்வருடம் $60 மில்லியன்களைத் தண்டமாகப் பெறக்கூடியதாகவிருமக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
நகராட்சியினால் தவறாக மதிப்பீடு செய்யப்படும் வீடுகளின் உரிமையாளர்கள் மேன்முறையீடு செய்துகொள்ள முடியும்.
வெற்றுடமை அறிவிப்புப் படிவங்களை ரொறோண்டோ வீட்டுரிமையாளர்கள் ஒவ்வொரு வருடமும் நிரப்பி அனுப்பவேண்டும். இப்பத்திரங்களை இணையவழியாகவும் நிரப்பி அனுப்பலாம். (Photo by Scott Webb on Unsplash).