veedu.com

நாமார்க்கும் குடியல்லோம்

Money

ரொறோண்டோ 2023 ஆதன வரி (property tax) 7% த்தால் உயர்கிறது!

ரொறோண்டோ மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வீடுகளை வைத்திருப்பவர்களுக்கு இந்த வர்டுடம் (2023) பாரிய அதிர்ச்சியொன்றைத் தரவிருக்கிறது. ரொறோண்டோ மாநகரசபை தனது 2023 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் அதன் பணிச்செலவுகளுக்கான (operating budget) தொகையாக $16.16 பில்லியன்களை ஒதுக்கியிருப்பதால் இதை ஈடுசெய்வதற்காக சொத்து வரிகளை 5.5% த்தால் அதிகரிப்பதென முடிவு செய்திருக்கிறது. நகரசபைகளின் இணைப்பிற்குப் பின் ஒதுக்கப்படும் அதி பெரிய செலவீன அதிகரிப்பு இதுவெனக் கூறப்படுகிறது. இத்துடன் ஏற்கெனவே அதிகரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்துவதற்காகத் தயாராகவிருக்கும் 1.5% கட்டிட வரி (building levy) உயர்வும் சேர்த்து மொத்தம் 7% உயர்வு சொத்துடமையாளர்களை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. இது ஒரு வீட்டுரிமையாளரின் சராசரி வருடாந்த ஆதனவரியை $233 டாலர்களினால் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஒன்ராறியோ மாகாணம் 1998 இல் கொண்டுவந்த சொத்து மதிப்புக்கு இணையான ஆதனவரித் திட்டத்தின் பிரகாரம் ஒரு சொத்தின் ஆதனவரி அதன் விலையைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. ஆனாலும் நகரசபைகள் அதை ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கு ஒரு தடவை மீள் பரிசீலனை செய்கின்றன. அந்த வகையில் $695,268 டாலர்கள் பெறுமதியென மதிக்கப்பட்ட ஒரு வீட்டின் வருடாந்த ஆதன வரி $3569 ஆக உயர இருக்கிறது.

அது மட்டுமல்லாது நீர்ப் பாவனை, நீர்க் கழிவு, குப்பையகற்றல் ஆகிய செலவீனங்களுக்கான அறவீடுகளும் அதிகரிக்கப்படவுள்ளன. இதன் காரணமாக நீர்ப்பாவனைக்கான கட்டணம் சராசரி வருடம் $29 இனாலும் குப்பையகற்றலுக்கான கட்டணம் வருடம் $8 முதல் $16 வரை அதிகரிக்கலாமெனவும் தெரியவருகிறது. நாடு முழுவதையும் பாதித்துவரும் பணவீக்கத்தின் காரணமாக இந் நடவடிக்கைகளை எடுக்கவேண்டி இருக்கிறது எனவும் எரிபொருள் விலை அதிகரிப்பைச் சமாளிப்பதற்காக மட்டும் $46 மில்லியன் செலவாகிறது எனவும் மாநகரசபை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த வருடம் ரொறோண்டோ காவல்துறைக்கு 200 புதிய உறுப்பினர்களையும், 52 தீயணைப்புப் படையினரையும், சுரங்க ரயில் பயணிகளின் பாதுகாப்புக்காக 50 காவல்துறையினரையும் இணைத்துக்கொள்ள நகரசபை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

2022 இல் ரொறோண்டோ மாந்கரசபையின் வரி அதிகரிப்பு 2.9% மாக இருந்தது. ஆனால் 2023 இல் அதை 5.5% த்தால் அதிகரிக்க மாநகர முதல்வர் ஜோன் ரோறி விண்ணப்பித்திருந்தார். 2021 இல் ஆதன வரி 0.7% த்தால் அதிகரிக்கப்பட்டிருந்தது. 2023 ஆம் ஆண்டிற்கான இந்த வரவுசெலவுத் திட்டம் நகர முதல்வரால் பெப்ரவரி 01 இல் சபையில் அறிமுகப்படுத்தப்பட்டு பெப்ரவரி 16 இல் வாகெட்டுப்பு நடத்தப்படும். (Image Credit:Photo by Jon Tyson on Unsplash)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *